கடக ராசிக்காரர்கள் நீங்கள் நீரைப் போல ஸ்திரத்தன்மை அற்றவர்கள். ஆனால் இரும்பைப் போல உறுதியான மனம் உள்ளவர்கள்.
இந்த ராசிக்கு சொந்தக்காரனான சந்திரன், வளர்ந்தும் குறைந்தும் மீண்டும் வளரவும் கூடியவன் என்பதால் அதே போல இந்த ராசிக்காரர்களின் மனத்தை அலைபாயச் செய்யக் கூடிய மனோகாரகன். எனவே கடக ராசியில் பிறந்த நீங்கள் வெகு விரைவில் மற்றவர் மனதில் இடம் பிடித்துவிடுவீர்கள்.
மனிதன் இந்த உலகத்தில் சிறப்புடன் வாழ்வதற்கு அவனுடைய மனம் பக்குபட்டிருக்க வேண்டும். ஞானம் அடைந்திருக்க வேண்டும். அதனால் கடக ராசியில் பிறந்த நீங்கள், உங்கள் பிறந்த நேரத்தின் போது சந்திரன் எப்படி அமைந்திருக்கின்றானோ அந்த ஸ்தான பலத்துக்கு ஏற்ப உங்கள் மனம் செயல்படும்.
ரூபம், ரஸம், கந்தம், சப்தம், ஸ்பர்சம் என்ற ஐந்து விஷயங்களில் ரஸத்துக்கு அதாவது அனுபவித்து ரசிக்கும் திறனுக்குச் சந்திரன், செவ்வாய் ஆகிய இரண்டு கிரஹங்களும் காரணம். கடக ராசிக்காரர்களாகிய நீங்கள் பெரும் ரசனைக்காரர்கள். வாழ்க்கையை ரசித்து அனுபவிக்கவே நினைப்பீர்கள்.
உடல் உறுப்புகளில் மார்பு பாகத்தையும் வயிற்றையும் கடக ராசி அடக்கியாள்கிறது. பன்னிரு ராசிகளில் இது மிக மிக உணர்ச்சிகரமான ராசி. வீடு, குடும்பம், சமூகம் ஆகிய துறைகளில் உணர்ச்சிக்கு முக்கியத்துவம் உள்ளதால் இம்மூன்று துறைகளையும் ஆள்கிறது.
இந்த ராசியில் நீங்கள் பிறந்திருந்தால் குடும்பப் பிரச்னைகள் உங்களுக்கு அடிக்கடி நேரும். அந்தப் பிரச்னையை தீர்க்கவும் உங்களால் முடியும். நண்டு எந்தப் பொருளையும் தன் கூரிய நகத்தை விரித்துப் பிடித்துக் கொள்ளத்தான் மெதுவாக செயல்படுமே தவிர, பிடித்துக் கொண்டபின் லேசில் விடாது. போலவே நீங்களும். ஒரு விஷயத்தில் இறங்கிவிட்டால் அதில் வெற்றிக் கிடைக்கும் வரை விடாப்பிடியாக இருப்பீர்கள்.
உங்களுக்கு யானை போல நினைவுத் திறன் அதிகமுண்டு. எத்தனை ஆண்டுகள் ஆனாலும் முக்கியமானவற்றை மறக்கவே மாட்டீர்கள். நீங்கள் கடந்த காலச் சம்பவங்களை நினைத்துப் பார்த்துக் கொள்வீர்கள். உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்களை ஒருபோதும் மறக்க மாட்டீர்கள். வாழ்நாள் முழுவதும் அது நினைவிருந்தாலும் மன்னிக்கும் குணமும் உங்களுக்கு உண்டு.
நீங்கள் ஒரு முடிவை எளிதில் எடுக்க மாட்டீர்கள். அதனால் சில பிரச்னைகளையும் சந்திப்பீர்கள். வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்ற பாங்கு உங்களிடம் இருக்காது. உங்கள் குடும்பத்தில் உள்ள நபர்களை பாதிக்கும் விஷயமானால் உங்கள் மனத்தைப் போட்டு வருத்திக் கொள்வீர்கள்.
மற்றவர்கள் உங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதற்கு அதிக முக்கியத்துவம் தருவீர்கள். புதியவர்களிடம் பழகும் போது உங்களால் உடனடியாக அவர்களை ஏற்றுக் கொள்ள முடியாது. உங்களிடம் சில தயக்கங்கள் இருக்கும். ஆனால் பழகிவிட்டால் அவர்களை மிக நெருக்கமாக நினைக்கச் செய்துவிடுவீர்கள்.
உங்களுடைய பிரச்னையே மனத்தடைகள் தான். அதிலிருந்து மீண்டு வந்தால் உங்களால் எதையும் சாதிக்கும் திறன் அதிகமிருக்கும். அன்பு செலுத்துவதிலும்,கருணை காட்டுவதிலும் பிறர் துன்பம் கண்டு பொறுக்காதவர்களாகவும் இருப்பீர்கள்.