பொதுவாக நாம் அழகாக ஜொலிக்க விரும்புவதற்கு நடிகைகளும் ஓர் முக்கிய காரணம் எனலாம். திரைப்படங்களில் நாம் பார்க்கும் நடிகைகள் பல ஆண்டுகளாக இளமையுடன் காட்சியளிக்கின்றனர். இதற்கு முதன்மையான காரணம், அவர்கள் தங்களது சருமம், உடல் மற்றும் கூந்தலுக்கு கொடுக்கும் பராமரிப்புகள் தான். நடிகைகள் அனைவரும் வெறும் க்ரீம்களைக் கொண்டு தான் தங்களின் அழகை பராமரித்து வருகின்றனர் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் அது தான் இல்லை. அவர்களும் தங்களின் அம்மாக்கள் மற்றும் பாட்டிகள் கூறும் இயற்கை பொருட்களைக் கொண்டு தான் தங்கள் அழகைப் பராமரிக்கின்றனர்.
கீழே பாலிவுட்டின் முன்னணி நடிகைகள் பகிர்ந்து கொண்ட அவர்களின் அழகின் ரகசியங்கள் என்னவென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்துப் பார்த்து, நீங்களும் உங்கள் அழகை மெருகேற்றுங்கள்.
அனன்யா பாண்டே
அனன்யா பாண்டே தனது அம்மா பரிந்துரைத்த ஃபேஸ் மாஸ்க்கை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்து கொண்டார். அந்த ஃபேஸ் மாஸ்க்கானது தயிர், மஞ்சள் மற்றும் தேன் ஆகியவற்றை உள்ளடக்கியது. இந்த மூன்றையும் ஒன்றாக கலந்து, முகத்தில் தடவி பதினைந்து நிமிடம் ஊற வைத்துக் கழுவ வேண்டும். இதனால், அதில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் ஆன்டி-ஆக்சிடண்ட் பண்புகள் சருமத்தில் மாயங்களை ஏற்படுத்தும்.
அனுஷ்கா சர்மா
அனுஷ்கா சர்மாவின் பொலிவான மற்றும் பட்டுப்போன்ற சருமத்திற்கு காரணம் கொக்கோ தானாம். அதற்கு இவர் முதலில் க்ரீம் அடிப்படையிலான கிளின்சர் கொண்டு சருமத்தை சுத்தம் செய்து, அதன் பின் ரோஸ் வாட்டரால் முகத்தைத் துடைத்து, கொக்கோ வெண்ணெய் அடங்கிய மாய்ஸ்சுரைசர் பயன்படுத்துவராம்.
யாமி கவுதம்
நடிகை யாமி கவுதமின் அழகிய சருமத்தின் ரகசியம் மஞ்சள் தூள். இவர் ஜொலிக்கும் சருமத்தைப் பெற மஞ்சள் தூளை சருமத்திற்கு பராமரிப்பாராம். மேலும் இவர் சருமம் வறட்சியின்றி பட்டுப் போன்று இருக்க நெய்யை பயன்படுத்துவாராம்.
கியாரா அத்வானி
சமீபத்திய நேர்காணல் ஒன்றில், கியாரா அத்வானி தனது அழகின் ரகசியத்தைப் பகிர்ந்து கொண்டார். அது என்னவெனில், இவர் கடலை மாவு மற்றும் பிரஷ் க்ரீம்மை ஒன்றாக கலந்து பேஸ்ட் செய்து, முகத்திற்கு பயன்படுத்துவாராம். இதுவே இவரது அழகான சருமத்திற்கு முக்கிய காரணம் என்றும் கூறினார்.
தீபிகா படுகோனே
நடிகை தீபிகா படுகோனேவின் அழகின் ரகசியம், பியூட்டி ரோலர். ஒருமுறை தீபிகா படுகோனே தனது இன்ஸ்டா பக்கத்தில் பியூட்டி ரோலர் பயன்படுத்தும் ஒரு போட்டோவை வெளியிட்டிருந்தார். இந்த பியூட்டி ரோலர் சருமத்தில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவி புரிவதோடு, கண் வீக்கத்தைக் குறைக்கிறது மற்றும் சருமத்தில் உள்ள அழுத்தத்தைக் குறைத்து குளிர வைக்கிறது.
மலாய்கா அரோரா
மலாய்கா அரோரா தினமும் காலையில் எழுந்ததும் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பானமான வெதுவெதுப்பான எலுமிச்சை நீரைக் குடித்து தான் அன்றைய தினத்தை ஆரம்பிப்பாராம். மேலும் இவர் தனது சருமத்திற்கு கற்றாழை ஜெல்லை தினமும் பயன்படுத்துவராம்.
பிரியங்கா சோப்ரா
பாலிவுட்டின் முன்னணி நடிகையாக இருந்து ஹாலிவுட் நடிகையாகி உள்ள பிரியங்கா சோப்ராவின் அழகின் ரகசியத்தை பலரும் அறிய விரும்புவோம். இதற்கு காரணம், இவர் இயற்கை பொருட்களால் சருமத்திற்கு பராமரிப்புக்களைக் கொடுப்பதோடு, தலைமுடிக்கு அம்மா பரிந்துரைத்த தயிர், தேன் மற்றும் முட்டை மாஸ்க் தான். இந்த ஹேர் மாஸ்க் தலைமுடி மற்றும் ஸ்கால்ப்பில் மாயங்களை ஏற்படுத்தக்கூடியவை.
தமன்னா பாட்டியா
பால் போன்ற சருமத்தைக் கொண்ட தமன்னாவிற்கு பட்டுப்போன்ற அடர்த்தியான மற்றும் நீளமான தலைமுடியும் உள்ளது என்பது தெரியுமா? இதற்கு காரணம் வெங்காயம் தான். இந்த நடிகை தனது தலைமுடி உதிராமல் வலுவாக இருப்பதற்கு வெங்காயச் சாறு மற்றும் தேங்காய் எண்ணெய் கலவை தானாம்.
ஐஸ்வர்யா ராய் பச்சன்
நடிகை ஐஸ்வர்யா ராய் நேர்காணல் ஒன்றில், தனது முக அழகின் ரகசியத்திற்கு வெள்ளரிக்காய் சாறு தான் காரணம் என்று கூறியுள்ளார். இந்த ஜுஸ் பாதிப்படைந்துள்ள சரும செல்களை தன்னைத் தானே சரிசெய்து புதுப்பிக்க தூண்டிவிடும்.