வெயிலில் கண்கள் கலங்கி மிகவும் சோர்வாக உள்ளதா? சிறிதளவு பன்னீரில் பஞ்சை நனைத்துக் கண்களை மூடிக் கொண்டு மேல் பாதியில் அப்படியே பலமுறை ஒத்தி எடுக்க வேண்டும். பிறகு இப்படியே கண்களை மூடியபடி பத்து நிமிடங்கள் இருக்க வேண்டும். இதற்குப் பிறகு கண்கள் புது ஒளி பெற்றுவிடும்.
வெள்ளரிக்காயை துருவி மெல்லிய துணியில் கட்டிக்கொள்ளவும். அதனை கண்களை மூடிக்கொண்டு மேலே வைத்து ஒற்றி எடுக்கவும். கண்கள் புத்துணர்ச்சி பெறும்.
கருவளையம் போக்க
வெயிலில் வெளியே போய்விட்டு வரும்போது கண்களைச் சுற்றிக் கருவளையம் தோன்றுவது தவிர்க்க முடியாதது. கறிவேப்பிலையை இடித்து சாறு பிழிந்து கொஞ்சம் வெண்ணெயை எடுத்து அதோடு கலந்து கண்களைச் சுற்றி பூசினால் கருவளையம் மறைந்துவிடும்.
கண்கள் குளிர்ச்சி பெற
உள்ளங்கால்களிலும், காலின் கட்டை விரல்களிலும் தேங்காய் எண்ணெய் அல்லது விளக்கெண்ணெய் தேய்த்து வந்தால் கண்களுக்கு பொலிவு கிடைக்கும், உடலும் குளிர்ச்சிபெறும்.
சந்தனம், ஜாதிக்காய் இரண்டையும் ஒன்றாக சேர்த்து அரைத்து இரவில் படுக்கும் முன் கண்களைச் சுற்றி தடவிக்கொண்டு தூங்கினால் கண்கள் குளிர்ச்சிபெறும்.
வசீகர கண்கள்
கண் வசீகரத்திற்கும், அழகிற்கும் ஆரஞ்சுப் பழம் பயன்படுகிறது. சிறிதளவு ஆரஞ்சு ஜூஸை ஃபரீஸரில் வைத்து அது ஐஸ் கட்டி ஆனவுடன், அதை மெல்லிய வெள்ளைத் துணியில் கட்டி, கண்ணுக்குமேல் ஒத்தி எடுங்கள். ஒரு நாள் விட்டு ஒரு நாள் இப்படி செய்து வர, கண்கள் பளிச் ஆகிவிடும்.
வாரத்திற்கு மூன்றுநாட்கள் என தொடர்ந்து கண்கள் வசீகரமாக மாறும். மேலும் தூக்கமின்மையால் கண்களில் ஏற்படும் சோர்வை நீக்கி கண்களை பிரகாசமாக்கும் தன்மை ஆரஞ்சு பழத்திற்கு உண்டு.
ப்ளீச் வேண்டாமே
முகத்திற்கு ப்ளீச் செய்யும் போது கண்களுக்கு அடியில் ப்ளீச் செய்யக் கூடாது. அப்படி செய்வதால் அப்பகுதியில் சுருக்கம் ஏற்பட அதிக வாய்ப்புண்டு.
கண்களுக்கு பயன்படுத்தும் மேக்கப் சாதனங்கள் அனைத்தும் தரமானவையாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். அவற்றை கண்களில் பயன்படுத்தும் போது மிகவும் கவனமாக செய்ய வேண்டும்.
உங்கள் கண்கள் எடுப்பாக தெரிய வேண்டுமெனில், டிரஸ்சிற்கு ஏற்ற நிறத்தில் ஐ ஷேடோவை பயன்படுத்துங்கள். இரண்டு மூன்று கலர்களை கலந்தும் பயன்படுத்தலாம்.
பெரிய கண்கள் உடையவர்கள் டார்க் கலரில் ஐ ஷேடோ போட்டால், கண்கள் சிறியதாக தெரியும்.
ஐ லைனர் பயன்படுத்தும் போது, சிறிய கண்கள் உள்ளவர்கள் மஸ்காரா போட்டால், கண்கள் பெரிதாகவும், அழகாகவும் இருக்கும். பெரிய கண்கள் உடையவர்கள் அடர்த்தியாகவும், சிறிய கண்கள் உடையவர்கள் மெல்லியதாகவும் போட வேண்டும்.