புடவைகளின் டிசைன் தனித்தன்மையுடன் இருப்பது தான் டிசைனர் சாரீஸ் என்றழைக்கப்படுகிறது. இம்மாதிரி புதுமையான, அதிகமான பேர் கட்டாத வித்தியாசமான நிறம் மற்றும் டிசைன் கொண்ட புடவைகளை கட்டி அசத்துவதையே இன்றைய இளம் பெண்கள் விரும்புகின்றனர்.
ஒரு சில தனியார் கடைகளில் (பொட்டிக்) மட்டுமே கிடைத்து வந்த டிசைனர் புடவைகள் பிறகு துணிக்கடைகளில் பல பிரிவுகளிலும் கிடைக்க தொடங்கிவிட்டது. இன்று பெரும்பாலோர் பிரத்யோகமான இந்த புடவைகளையே பார்ட்டிகளுக்காவும், திருமணங்களுக்கும் மற்றும் தினசரி வேலைக்கு செல்பவர்களும் கூட இப்போது டிசைனர் புடவைகளையே விரும்பி அணிகின்றனர்.
டிசைனர் புடவைகளில் பல வகைகள் இருக்கிறது. டிசைனர் எம்ப்ராய்டரி புடவைகள், டிசைனர் பார்ட்வேர் புடவைகள், டிசைனர் திருமண புடவைகள், டிசைனர் லெஹங்கா புடவை, ஹாஃப் & ஹாஃப் புடவைகள் என்று பல வகைகள் உள்ளன. ஒரு நிமிடத்தில் சட்டென்று எடுத்து மாட்டிக் கொள்ளும் வகையில் வரும் டிசைனர் புடவைகள் இன்று புடவைகட்டத்தெரியாத பல இளம் பெண்கள் விரும்பி வாங்குகின்றனர். ஒரு நிகழ்ச்சிக்கு செல்லும் முன் யார் தயவும் இன்றி இப்புடவைகளை அணிந்து கொள்ளலாம்.
லெஹங்கா டிசைனர் புடவை என்பது அணிந்த பிறகு புடவை போல் தோற்றமளிக்காமல் லெஹங்கா போட்டிருப்பது போலவும் தோன்றும் வகையில் அடர்த்தியான பார்டர் வேலைப்பாட்டுடன் வருகிறது. இந்த புடவைகள் தான் இன்று அதிகம் பேர் அணியத் தொடங்கியுள்ளனர். பார்டரில் ஜரிகை ரேஷம், செக்லின்ஸ், கற்கள், கட்வொர்க் பேட்ச் வொர்க் போன்றவை செய்யப்பட்டு மிக ஆடம்பரமாகவும் விழாக்களுக்கு அணியும் வகையிலும் இருக்கிறது. இப்புடவைக்கான சோலிகள் தான் அதிக வேலைப்பாட்டுடன் இருக்கும்.
இதை நம் விருப்பத்திற்கு ஏற்ப இடுப்பு வரையில் இறக்கியும், நீண்ட கைகளுடனும் தைத்து போடும் போது பார்க்க லெஹங்கா அணிந்தது போன்று அழகாய் இருக்கிறது, இன்று திருமண வரவேற்பிற்கு பிறகு அணியும் பட்டுப்புடவைகள் கூட டிசைனர் புடவைகளாகவே தேர்ந்தெடுக்கின்றனர்.
மணமகன், மணமகள் புகைப்படங்கள் பொறிக்கப்பட்டும், பெயர்கள் பொறிக்கப்பட்டும் பிரத்யேகமாக இப்புடவைகளை சில கடைகள் தயாரித்து கொடுக்கின்றன. டிஷ்யு, ப்ரேசோ, நெட்டட், ஜெக்கார்ட் வேலைப்பாடு, ஷிபான், ஜார்ஜ்ஜெட், சில்க் போன்று பல துணிகளில் டிசைனர் புடவைகள் வந்து சந்தையில் கலக்குகின்றன.