ஹேர் கட் செய்வதும் ஒரு கலை. இதை கற்க முதல் முயற்சியாக நீங்களே உங்கள் முடியை கட் செய்ய ஆரம்பிக்கலாம்.
தேவைப்படும் பொருட்கள் :-
கண்ணாடிகள் – 2
கத்தரிக்கோல் – 1
சீப்பு – 1
முதன்முறையாக முடி வெட்டும் போது, தேவையான அளவை விட ஒன்று அல்லது இரண்டு அங்குலம் அதிகமாக வைத்து வெட்டவும். தவறு செய்தாலும் திருத்துவதற்கு தேவையான அளவு முடி இருந்தால் பிரச்சனையே இல்லை.
தலையில் குறைந்தது 3 அங்குலம் முடியாவது இருக்க வேண்டும். முதல்முறையாக வெட்டும்போது பார்லர்களில் செய்வது போல் கூந்தலை ஈரமாக்க வேண்டாம். சிக்குகளை நீக்கி விட்டு, காதுகளுக்கு மேலிருந்து ஆரம்பிக்கவும். இரண்டு விரல்களுக்கு இடையே வெட்டப்போகும் முடியை இழுத்து பிடித்துக் கொள்ளவும்.
விரல்களுக்கு அடுத்தப் பக்கத்தில் இருக்கும் முடியின் அளவு தான் வெட்ட வேண்டிய அளவு. கத்தரிக்கோலால் விரல்களை ஒட்டியது போல் முடியை வெட்டவும். இதே போல் இந்த காது அருகில் தொடங்கியதை அடுத்த காது வரை சிறிது சிறிதாக முடியை எடுத்து ஒரே அளவில் வெட்டவும்.
ஒவ்வொரு முறை வெட்டிய பிறகும் கண்ணாடியில் பார்க்க மறக்க வேண்டாம். துல்லியமாக அளந்து தான் வெட்ட வேண்டும் என்று இல்லை. சீவியப்பிறகு கூந்தல் சீராக இருக்க வேண்டும் என்பது தான் முக்கியம்.