துவரம் பருப்பு 200 கிராம். கஸ்தூரி மஞ்சள் 10 கிராம் இந்த இரண்டையும் மிஷினில் கொடுத்து நைசாக அரைத்துக் கொள்ளுங்கள். வாரம் ஒரு முறை. இந்தப் பொடியை பேஸ்ட் போல குழைத்து, முகம் முதல் பாதம் வரை பூசி பிறகு குளியுங்கள். முகத்தில் இருந்த கரும்புள்ளி, தேமல், வறட்சி எல்லாம் போயே போச்சு என்று சந்தோஷப்படுவீர்கள்
சில பெண் குழந்தைகளுக்கு கை, கால், பின் கழுத்து, முதுகு போன்ற பகுதிகளில் “புசுபுசு”வென பூனைமுடிகள் வளர்ந்து சங்கடத்தைத் தரும். இந்த “இம்சை முடிகளுக்கு” நிரந்தர முடிவுகட்ட ஒரு குறிப்பு
துவரம் பருப்பு அரை கிலோ, கோரைக்கிழங்கு கால்கிலோ (நாட்டு மருந்துக்கடைகளில் கிடைக்கும்) கஸ்தூரி மஞ்சள் 100 கிராம், இவற்றை நைசாக அரைத்து சலித்து வைத்துக் கொள்ளுங்கள்.
வாரம் ஒரு முறை இந்தப் பொடியை தண்ணீர் சேர்த்து, குலைத்து, முடி உள்ள இடங்களில் பூசி, உலர்ந்ததும் தண்ணீர் விட்டு அலசுங்கள். முடிக்குத் தீர்வு மட்டுமல்ல…. அடுத்து முடி முளைக்காமல் தடுக்கும் மருந்தும் கூட இது.
அடர்த்தியான தலை முடி இருக்கிற முக்கால்வாசிப் பேருக்கு அரிப்பும் இருக்கும். தலைமுடிக்குள் இருந்து கொண்டு தொல்லை செய்கிற பேன் ஈறுகள்தான் இந்த அரிப்பின் காரணம்! இந்த அவஸ்தைக்கும் அருமருந்தாக இருக்கிறது துவரம் பருப்பு.
சீயக்காய் 1 கிலோ, சுட்டு, கறுப்பாக்கிய வசம்பு 10, துவரம் பருப்பு கால் கிலோ. வேப்பங்கொட்டை 20 கிராம். உலர்ந்த நெல்லிக்காய் 100 கிராம். வெந்தயம் கால் கிலோ. இவற்றை மிஷினில் கொடுத்து, அரைத்துக் கொள்ளுங்கள்.
நல்லெண்ணெயில் 2 அல்லது 3 மிளகு போட்டுக் காய்ச்சி, தலையில் மசாஜ் செய்யுங்கள். பிறகு இந்த பவுடரை சுடுதண்ணீரில் கலந்து, தலையில் “பேக்” போட்டு அரை மணி நேரம் விட்டு, அலசுங்கள். வாரம் ஒரு முறை இந்த சிகிச்சையை செய்தால், பேன், பொடுகு ஈறு பக்கத்திலேயே நெருங்காது. முடியும் மிருதுவாக இருக்கும்.
இளம் பெண்கள் ஃபேஷன் என்ற பெயரில் கூந்தலுக்குத் தினம் ஒரு நிறத்தில் சாயம் பூசி அதைப் பாடாய்ப்படுத்துகின்றனர். இதனால் கூந்தல் அதன் பளபளப்பை இழந்து வறண்டுவிடுகிறது. அப்படிப்பட்ட கூந்தலை மிருதுவாக்கி. வசிகரமூட்டுவதுடன் நுனி முடி வெடிப்பையும் போக்கும் வைத்தியம் இது.
து.பருப்பு 2 டீஸ்பூன், வெந்தயம் 1 டீஸ்பூன். தயிர் 1 டீஸ்பூன். தோல் நீக்கிய பூந்திக் கொட்டை 2 இவற்றை இரவே ஊறவைத்து, காலையில் அரைத்து, தலையில் “பேக்” போட்டு 20 நிமிடம் கழித்து அலசுங்கள். கூந்தல் பொலிவுடன் பளபளக்கும்.