சட்னியில் பல வெரைட்டிகள் உள்ளன. அதில் ஒன்று தான் கடலைப்பருப்பு சட்னி. இந்த சட்னியானது தோசை, இட்லி, பஜ்ஜி, போண்டா போன்றவற்றிற்கு மிகவும் சுவையாக இருக்கும். மேலும் வீட்டில் உள்ளோர் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையிலும் இருக்கும்.
அதுமட்டுமின்றி, பேச்சுலர்கள் கூட இதனை செய்து சுவைக்கலாம். சரி, இப்போது அந்த கடலைப்பருப்பு சட்னியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
கடலைப்பருப்பு – 2 டேபிள் ஸ்பூன் (வறுத்தது)
தேங்காய் – 100 கிராம் (துருவியது)
வரமிளகாய் – 3
புளி – சிறிது
உப்பு – தேவையான அளவு
தாளிப்பதற்கு…
எண்ணெய் – 2 டீஸ்பூன்
கடுகு – 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1/2 டீஸ்பூன்
சின்ன வெங்காயம் – 5 (நறுக்கியது)
கறிவேப்பிலை – சிறிது
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1/4 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தீயை குறைத்து, வரமிளகாய் சேர்த்து வதக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் அதே வாணலியில் 1/2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வறுத்த கடலைப் பருப்பு சேர்த்து குறைவான தீயில் பொன்னிறமாக வறுத்து, தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு மிக்ஸியில் வறுத்த கடலைப் பருப்பு, வரமிளகாய் சேர்த்து, அதோடு துருவிய தேங்காய், புளி, உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு மென்மையாக அரைத்து, ஒரு பௌலில் வைத்துக் கொள்ளவும்.
பின்பு அதே வாணலியில் மீதமுள்ள எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, சட்னியில் ஊற்றினால், கடலைப்பருப்பு சட்னி ரெடி!!!