கொத்தவரங்காய் மிகவும் அருமையான சத்துக்கள் அதிகம் நிறைந்த ஒரு உணவுப் பொருள். ஆனால் கொத்தவரங்காய் பலருக்கு பிடிக்காது. அதற்கு அவர்கள் அதனை சரியாக சமைத்து சாப்பிடாததே காரணம் என்று சொல்லலாம். ஏனெனில் இதனை சரியாக சமைத்து சாப்பிட்டால், இதன் சுவைக்கு இணை எதுவும் வர முடியாது.
இங்கு அப்படி கொத்தவரங்காய் கொண்டு எப்படி பொரியல் செய்வதென்ற கொடுக்கப்பட்டுள்ளது. அதனைப் படித்து செய்து சுவைத்துப் பாருங்கள்.
Cluster Beans Poriyal
தேவையான பொருட்கள்:
கொத்தவரங்காய் – 1 1/2 கப் (நறுக்கியது)
கடலைப் பருப்பு – 1/8 கப் + 1 டேபிள் ஸ்பூன்
பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
பூண்டு – 5-6 பற்கள்
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்
சாம்பார் பொடி – 1/4 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
அரைப்பதற்கு…
தேங்காய் – 3 டேபிள் ஸ்பூன்
சோம்பு – 1/2 டீஸ்பூன்
பட்டை – 1 இன்ச்
கிராம்பு – 1
தாளிப்பதற்கு…
கடுகு – 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
எண்ணெய் – 3 டீஸ்பூன்
செய்முறை:
முதலில் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் கொத்தவரங்காய், கடலைப் பருப்பு, மஞ்சள் தூள் சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி 3 விசில் விட்டு இறக்கி, விசில் போனதும் குக்கரில் உள்ள நீரை வைத்து, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து தாளிக்க வேண்டும்.
பின்பு அதில் வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து பொன்னிறமாக வதக்கி, பின் வேக வைத்துள்ள காய்கறியை சேர்த்து 2 நிமிடம் அதில் உள்ள தண்ணீர் வற்றும் வரை நன்கு வதக்க வேண்டும்.
பின் அதில் அரைத்து வைத்துள்ள தேங்காய் பேஸ்ட் சேர்த்து கிளறி, மிளகாய் தூள், சாம்பார் பொடி மற்றும் உப்பு சேர்த்து மிதமான தீயில் நன்கு பச்சை வாசனை போக வதக்கி இறக்கினால், கொத்தவரங்காய் பொரியல் ரெடி!!!