இதுவரை எத்தனையோ ஸ்டைலில் ரசம் செய்து சாப்பிட்டிருப்பீர்கள். ஆனால் உடுப்பி ஸ்டைல் தக்காளி ரசத்தை சுவைத்ததுண்டா? ஆம், இந்த ஸ்டைல் ரசமானது அட்டகாசமான சுவையில் இருப்பதோடு, செய்வதற்கு சுலபமாகவும் இருக்கும்.
இங்கு அந்த உடுப்பி ஸ்டைல் தக்காளி ரசத்தை எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து பார்த்து செய்து சுவைத்து மகிழுங்கள்.
Udupi Style Tomato Rasam Recipe
தேவையான பொருட்கள்:
வேக வைத்த துவரம் பருப்பு – 1/2 கப்
தக்காளி – 2 (நறுக்கியது)
புளி – பெரிய எலுமிச்சை அளவு (1/2 கப் நீரில் ஊற வைத்து சாறு எடுத்தது)
தண்ணீர் – 4 கப்
ரசப் பொடி – 2 1/2 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் – 2 (நீளமாக கீறியது)
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
வெல்லம் – 1 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
தாளிப்பதற்கு…
கடுகு – 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1/2 டீஸ்பூன்
வரமிளகாய் – 1
கறிவேப்பிலை – சிறிது
கொத்தமல்லி – சிறிது
எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
ரசப் பொடி செய்வதற்கு…
வரமிளகாய் – 7-8
மல்லி – 2 டேபிள் ஸ்பூன்
சீரகம் – 1/2 டீஸ்பூன்
கடுகு – 1/2 டீஸ்பூன்
வெந்தயம் – 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
துருவிய தேங்காய் – 1 1/2 டேபிள் ஸ்பூன்
பெருங்காயத் தூள் – 1/4 டீஸ்பூன்
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் ரசப் பொடிக்கு கொடுத்துள்ள பொருட்களில் தேங்காயைத் தவிர மற்ற அனைத்தையும் ஒவ்வொன்றாக சேர்த்து, வறுத்து இறக்கி குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு பாத்திரத்தில் புளிச்சாறு, உப்பு, மஞ்சள் தூள், பச்சை மிளகாய், தக்காளி, வெல்லம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து அடுப்பில் வைத்து, 7-8 நிமிடம் அல்லது பச்சை வாசனை போக கொதிக்க விட வேண்டும்.
பிறகு அதில் வேக வைத்துள்ள துவரம் பருப்பு, ரசப் பொடி மற்றும் தேங்காய் சேர்த்து, தீயை அதிகரித்து 6-7 நிமிடம் கொதிக்க விட்டு, பின் தீயை குறைத்து கொத்தமல்லியை சேர்த்து கொதிக்க விட வேண்டும்.
ரசம் கொதிக்கும் போது, மற்றொரு அடுப்பில் சிறு வாணலியை வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து தாளித்து, அதனை ரசத்துடன் சேர்த்து இறக்கினால், உடுப்பி ஸ்டைல் தக்காளி ரசம் ரெடி!!!