டயட்டில் இருப்போருக்கு அல்லது ஆரோக்கியத்தின் மீது அதிக அக்கறை கொண்டவர்களின் எதிரி என்ன தெரியுமா? அது தான் பசி. சீரான இடைவெளியில் பசி எடுத்தால், உடலின் செயல்பாட்டிற்குத் தேவையான எரிபொருள் தேவைப்படுகிறது என்று அர்த்தம். இதில் எரிபொருள் என்பது உணவு. எப்போது ஒருவர் ஒருவேளை உணவைத் தவிர்க்கிறாரோ, அவர்களுக்கு வழக்கத்திற்கு மாறாக பசி உணர்வு அதிகமாக இருக்கும்.
ஆனால் நீங்கள் மூன்று வேளையும் சரியாக சாப்பிட்ட பின்பும், ஒருவருக்கு அளவுக்கு அதிகமாக பசி எடுத்தால், உடலில் ஏதோ பிரச்சனை உள்ளது என்று அர்த்தம். ஒருவருக்கு எந்நேரமும் பசி எடுப்பது ஒரு நல்ல அறிகுறி அல்ல. பல்வேறு மருத்துவ காரணங்களால், ஒருவருக்கு தேவையில்லாத பசி உணர்வு எழும். அந்த சமயங்களில், உடனே அதற்கான காரணம் என்னவென்று அறிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.
இக்கட்டுரையில் ஒருவருக்கு எந்த காரணங்களுக்கு எல்லாம் பசி அதிகமாக எடுக்கும் என்ற பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது. அதைக் கொஞ்சம் படித்துப் பாருங்கள்.
மோசமான தூக்கம்
ஒருவர் தினமும் 7-8 மணிநேர தூக்கத்தை மேற்கொள்ளாமல் இருந்தால், அவர்களுக்கு ஒரு நாள் முழுவதும் பசி அதிகம் எடுக்கும். இரவில் சரியாக தூங்காமல் இருந்தால், பசியுடன் தொடர்புடைய 2 ஹார்மோன்களைப் பாதிக்கும். க்ரெலின் என்னும் பசியுணர்வைத் தூண்டும் ஹார்மோனின் அளவை அதிகரித்து, லிப்டின் என்னும் வயிறு நிறைந்த உணர்வைக் கொடுக்கும் ஹார்மோனின் அளவைக் குறைக்கும். எனவே தினமும் தவறாமல் 7-8 மணிநேர தூக்கத்தை தவறாமல் மேற்கொள்ளுங்கள்.
அதிகப்படியான மன அழுத்தம்
உடலில் மன அழுத்தம் அதிகரிக்கும் போது, அது கார்டிசோல் அளவை அதிகரிக்கும் இந்த ஹார்மோன் சாப்பிடத் தூண்டும். அதுவும் சர்க்கரை உணவுகள் மற்றும் அதிக கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிடத் தூண்டிவிடும். இதனால் தான் மன அழுத்தத்தின் போது ஒருவர் அதிகளவு சாப்பிடுகிறார்கள். இதன் விளைவாக உடல் எடை அதிகரித்து, ஆரோக்கிய பிரச்சனைகளாலும் அவஸ்தைப்பட நேரிடுகிறது.
தைராய்டு பிரச்சனைகள்
அளவுக்கு அதிகமான பசியுணர்வை ஹைப்பர் தைராய்டிசத்துடன் தொடர்ந்து கொண்டுள்ளது. ஒருவரது தைராய்டு சுரப்பியில் ஹார்மோன்களானது அளவுக்கு அதிகமாக சுரக்கும் போது ஏற்படும் நிலை தான் ஹைப்பர் தைராய்டு. ஒருவரின் தைராய்டு சுரப்பியில் ஹார்மோன்கள் அதிகம் சுரக்கும் போது, உடலின் செயல்பாடு அதிகரித்து, ஆற்றல் வேகமாக எரிக்கப்படும். உடலின் மெட்டபாலிச அளவு அதிகரிக்கும் போது, பசியுணர்வும் அதிகரிக்கும்.
ஆனால் ஹைப்பர் தைராய்டு இருந்தால், என்ன தான் அதிகமாக சாப்பிட்டாலும், அவர்களது உடல் எடை அதிகரிக்காது. ஏனெனில் இவர்களது உடலில் மெட்டபாலிச அளவானது எப்போதுமே உயர் நிலையில் இருக்கும்.
குறைவான இரத்த சர்க்கரை அளவு
இரத்த சர்க்கரை அளவு குறைவாக இருந்தால் அல்லது ஹைப்போ க்ளைசீமியா இருந்தால், உடலில் ஆற்றல் குறைவாக இருக்கும். உடலில் ஆற்றல் குறைவாக இருந்தால், உடல் அதை நமக்கு பசியுணர்வின் மூலம் உணர்த்தும். ஆகவே உங்களுக்கு அளவுக்கு அதிகமாக பசி உணர்வு எழுந்தால், உடனே உங்கள் இரத்த சர்க்கரை அளவை பரிசோதியுங்கள்.
சர்க்கரை நோய்
டைப்-1 மற்றும் டைப்-2 சர்க்கரை நோய் இருந்தாலும், அடிக்கடி பசியுணர்வு எழும். நம் உடலானது உணவில் உள்ள சர்க்கரையை ஆற்றலாக மாற்றும். ஆனால் சர்க்கரை நோய் இருந்தால், உணவில் இருந்து பெறப்படும் சர்க்கரையானது ஆற்றலை வழங்கும் திசுக்களினுள் நுழையாது. இதனால் தசைகள் மற்றும் இதர திசுக்கள் அதிக உணவைக் கேட்க ஆரம்பிக்கும். இதன் விளைவாக அதிக பசியுடன், தாகம் அதிகம் எடுக்கும், அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரிடும், பார்வை மங்கலாகும், காயங்கள் குணமாக தாமதமாகும். ஆகவே டைப்-1 மற்றும் டைப்-2 சர்க்கரை நோய் இருப்பவர்கள், இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டியது மிகவும் முக்கியம்.
ஒட்டுண்ணி தொற்று
உணவை உட்கொண்ட பின்பும் ஒருவருக்கு அளவுக்கு அதிகமாக பசி எடுத்தால், அவர்களது வயிற்றில் புழுக்கள் அதிகம் உள்ளது என்று அர்த்தம். அதுவும் நாடாப்புழுக்கள் அல்லது ஊசிப்புழுக்கள் நம் உடலில் இருந்தால், அது அமைதியாக எவ்வித அறிகுறியையும் வெளிக்காட்டாமல் இருக்கும். அதே சமயம் அந்த புழுக்கள் நாம் உண்ணும் உணவில் உள்ள சத்துக்களை முழுமையாக உறிஞ்சி, வழக்கத்திற்கு மாறாக நமக்கு பசியை ஏற்படுத்தும். அதிலும் ஒருவர் அளவுக்கு அதிகமாக பசி எடுத்து, உடல் எடையும் குறைந்தால், அவர்கள் உடனே மருத்துவரை அணுக வேண்டியது அவசியம்.
மாதவிலக்குக்கு முந்தைய நோய்க்குறி (PMS)
இறுதி மாதவிடாயை நெருங்கும் பெண்களுக்கு, அதை நெருங்கும் முன்பு ஒருசில அறிகுறிகள் தென்படும். அதில் அதிகப்படியான பசியுணர்வும் ஒன்று. அதோடு, அவர்களது உடல் வெப்பநிலை அதிகரித்து, பசியைத் தூண்டும். அதோடு அதிகப்படியான சோர்வு மற்றும் உடல் வறட்சியும் ஏற்படும். இதர அறிகுறிகளான வயிற்று உப்புசம், தலைவலி, மனநிலையில் ஏற்ற இறக்கம், களைப்பு மற்றும் தூக்க பிரச்சனைகள் போன்றவற்றையும் சந்திக்க நேரிடும்.
கர்ப்பம்
கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு அதிகளவு பசி எடுப்பது என்பது சாதாரணமான ஒன்று. இது ஒரு கெட்ட விஷயம் அல்ல. கர்ப்பிணிப் பெண்களுக்கு நன்கு பசி எடுத்தால் தான், குழந்தைக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைத்து, குழந்தை ஆரோக்கியமாக வளர்ச்சி பெறும். கர்ப்பத்தின் முதல் மூன்று மாத காலத்தில் பெண்கள் 4-6 பவுண்ட் எடை அதிகரிப்பது சாதாரணம் தான். ஆனால் இரண்டாவது மற்றும் மூன்றாவது மூன்று மாத காலத்தில் வாரத்திற்கு 1 பவுண்ட் எடை அதிகரிக்க ஆரம்பிக்கும்.
ஆனால் கர்ப்பிணிகள் பசி அதிகம் எடுக்கும் போது, கலோரிகள் நிறைந்த உணவுகளை உண்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். மாறாக காய்கறிகள், பழங்கள், நட்ஸ், முழு உணவுகள் போன்றவற்றை சாப்பிட வேண்டும்.
உடல் வறட்சி
எப்போது உடலில் போதுமான நீர்ச்சத்து இல்லாமல் உடல் வறட்சியுடன் உள்ளதோ, அப்போது அதிகளவு பசியை உணரக்கூடும். பொதுவாக தாகமானது தண்ணீர் தேவைப்படும் போது எழும். இருப்பினும் சில சமயங்களில் தாகத்துடன் கடுமையான பசி உணர்வும் எழும். இந்நிலையில் வெறும் நீரை மட்டும் குடித்தால் போதாது. அப்போது எதையேனும் சிறிது உட்கொண்டால் தான், பசி அடங்குவது போல் இருக்கும்.