என்னென்ன தேவை?
பாகு, மாவு கலவை செய்வதற்கு முன் இவற்றைத் தயாராக வைக்கவும்…
1. எண்ணெய் பூசிய நான்ஸ்டிக் பாத்திரம்
2. அகலமான பேசின் அல்லது சப்பாத்திக்கல் அல்லது சமையல் மேடையை பயன்படுத்தலாம். இது சர்க்கரைப்பாகு இழுக்கத் தேவைப்படும்.
3. நெய் தடவிய ட்ரேயில் பொடித்த பாதாம், பிஸ்தா கலவைகளை பரவலாகத் தூவி தயாராக வைக்கவும்.
மாவுக் கலவைக்கு…
கடலைமாவு – 1 கப்
மைதா – 1 கப்
நெய் – ஒன்றரை முதல் இரண்டு கப்.
சர்க்கரைப்பாகு செய்ய…
சர்க்கரை – 2 கப்
லிக்யூட் குளுக்கோஸ் – கால் கப்
தண்ணீர் – 1 கப்
பொடித்த பாதாம், பிஸ்தா – விருப்பத்துக்கேற்ப.
எப்படிச் செய்வது?
* அடி கனமான அகன்ற பாத்திரத்தில் நெய் விட்டு லேசான தீயில் உருக்கவும். அதில் கடலைமாவு, மைதாவைக் கொட்டி நன்கு கலந்து விடவும். பேஸ்ட் போன்ற வடிவத்தில் சிறு சிறு குமிழ்கள் வரும் போது, அடுப்பை அணைக்கவும். கலவையை ஆற விடவும்.
* சர்க்கரைப்பாகுக்கு…
சர்க்கரை, லிக்யூட் குளுக்கோஸ், தண்ணீர் – மூன்றும் சேர்த்துக் கலந்து (சர்க்கரையை பெரும்பான்மையாகக் கரைக்கவும்), பிறகு அடுப்பில் வைத்து பாகு காய்ச்சவும்.
* மெத்தென்ற உருண்டை பதம் வந்ததும் அடுப்பிலிருந்து அகற்றவும். எண்ணெய் பூசிய நான்ஸ்டிக் கடாயில் பாகை மாற்றவும்.
* மாற்றிய பாகை கைவிடாமல் கிளறி ஆற வைக்கவும்.
* இப்போது 2 வகையாக சோன் பப்டி செய்யலாம்.
முதல் வகை…
மாவுக் கலவை உள்ள பாத்திரத்தில் பாகை நேரடியாக கொட்டி, 2 கரண்டிகளால் மடிப்பது. கிளறக் கூடாது. கேக் செய்ய ஃபோல்டிங் செய்வது போல மடிக்க வேண்டும். பொறுமையாகச் செய்தால் நூல் போன்ற வடிவம் வரும். அதை பாதாம், பிஸ்தா கொட்டிய பாத்திரத்தில் கொட்டித் தடவி, லேசாக ஆற விட்டு துண்டு போடலாம்.
இரண்டாம் வகை…
நான்ஸ்டிக் பாத்திரத்தில் உள்ள பாகை சமையல் மேடை/சப்பாத்திக்கல்லில் போட்டு கை பொறுக்கும் சூட்டில் இழுக்க வேண்டும். படத்தில் காட்டியபடி மாற்றி மாற்றி மாவை தடவி இழுத்துக்கொண்டே இருந்தால், ஒரு கட்டத்தில் நூல் போன்று வரும். இப்போது அதை ட்ரேயில் அடுக்கி மெல்லத் தட்டி, ஆற விட்டு துண்டு போடலாம்.