பெண்களுக்கு வெள்ளையாக வேண்டுமென்ற ஆசை இருக்கும். அதற்காக அழகு நிலையங்களுக்குச் சென்று ப்ளீச்சிங் செய்து கொள்வார்கள். ஆனால் ப்ளீச்சிங் செய்வதால், சருமத்தின் நிறம் அதிகரிக்காது என்பதை ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டுமென்று நிபுணர்கள் கூறுகின்றனர். மாறாக சருமத்தில் உள்ள முடியின் நிறத்தைத் தான் அது மறைக்கிறது.
சில பெண்கள் சருமத்தில் வளரும் சிறிய முடிகளை நீக்க த்ரெட்டிங் மற்றும் வேக்சிங் போன்றவற்றை மேற்கொண்டு, சரும முடிகளை நீக்குகின்றனர். இன்றும் சிலர் லேசர் சிகிச்சைகளை மேற்கொள்கின்றனர். இருப்பினும் உங்களுக்கு ப்ளீச்சிங் தான் சரும நிறத்தை அதிகரிக்க உதவும் வழிகளில் ஒன்றாக கருதினால், ப்ளீச்சிங் செய்தால் உண்மையில் நம் சருமத்தில் ஏற்படும் மாற்றங்கள் என்னவென்று முதலில் தெரிந்து கொள்ளுங்கள்.
• ப்ளீச்சிங் செய்தால், சருமம் அதிக வறட்சிக்கு உள்ளாகும். இதற்கு ப்ளீச்சிங் செய்யப் பயன்படுத்தும் பொருட்களில் உள்ள கெமிக்கல்கள் தான். எனவே அழகு நிலையங்களில் கெமிக்கல் பொருட்களைக் கொண்டு ப்ளீச்சிங் செய்வதைத் தவிர்த்து, இயற்கைப் பொருட்களைக் கொண்டு ப்ளீச்சிங் செய்து, பின் பால் அல்லது தயிர் கொண்டு மசாஜ் செய்து கழுவினால், சருமம் வறட்சியடைவதைத் தடுக்கலாம்.
• ப்ளீச்சிங்கை அடிக்கடி செய்து வந்தால், விரைவில் முதுமைத் தோற்றத்தைப் பெறக்கூடும். இதற்கு ப்ளீச்சிங் செய்யப் பயன்படுத்தும் பொருட்கள் சருமத்தில் உள்ள எண்ணெய்களை முழுமையாக உறிஞ்சி, சீக்கிரம் முதுமைத் தோற்றத்தைப் பெற வழிவகுக்கும்.
• ப்ளீச்சிங் செய்ய சருமத்தில் அக்கலவையைத் தடவும் போது ஒருவித எரிச்சல் மற்றும் அரிப்பு ஏற்படக்கூடும். இது சாதாரணமாக இருந்தாலும், சருமத்திற்கு நல்லதல்ல. எப்போது ஒரு பொருளை சருமத்திற்கு பயன்படுத்தும் போது எரிச்சல், அரிப்பை உணர நேரிடுகிறதோடு, அப்போது அந்த பொருளானது நம் சரும செல்களை அழித்துக் கொண்டிருக்கிறது என்று அர்த்தம். எனவே கவனமாக இருங்கள்.
• ப்ளீச்சிங் செய்யும் போது, அதனை நீண்ட நேரம் சருமத்தில் வைத்திருந்தால், அந்த பொருள் சருமத்தை எரித்துவிடும். எனவே ப்ளீச்சிங் செய்யும் போது கவனமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால், கடுமையான பக்க விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும்.
• உங்களுக்கு ஏற்கனவே அடிக்கடி முகப்பருக்கள் வருமாயின், ப்ளீச்சிங் செய்யாதீர்கள். ஏனெனில் இது பருவை இன்னும் மோசமாக்கும்.