நாள் முழுக்க உங்களை ஃப்ரெஷ் ஆக வைத்துக் கொள்ள இதோ சில… தலைக்கு எண்ணெய் வைப்பது முகத்தை டல்லாகக் காட்டும். கூடவே, சிலர் எண்ணெய் பசையுடன் இருக்கும் தலையைத் தொட்டு விட்டு, அதே கையால் முகத்தையும் துடைப்பார்கள். அதனால் முகத்தில் அதிக எண்ணெய் வழிவது போலத் தோன்றும்.
இதைத் தவிர்க்க, ஒட்டுகிற தன்மை இல்லாத நான் ஸ்டிக்கி எண்ணெயை தலைக்குத் தேய்க்கலாம். உடை விஷயத்தில் அதிக கவனம் தேவை. காட்டன், சிந்தடிக் என்று எந்த உடை அணிந்தாலும், பிறரின் கிண்டலுக்கு ஆளாகும் வகையில் மிகவும் தொள தொளப்பாக இல்லாமல், மற்றவர்கள் கண்களை உறுத்தும் வகையில் மிகவும் இறுக்கமாகவும் இல்லாமல், உங்களுக்கான சரியான அளவுடன் நேர்த்தியாக உடுத்துங்கள்.
பொதுவாக நம் பெண்கள் காலையில் போடும் மேக்-அப் உடனேயே மாலை வரை இருந்து விடலாம் என்று நினைக்கின்றனர். சிலர், மேக்-அப் லேசாகக் கலைந்தால்கூட அதன் மேலேயே மீண்டும் போட்டுக் கொள்கின்றனர். இது தவறு. ஏனெனில், ஏற்கெனவே போட்டிருக்கும் மேக்-அப் சரும துவாரங்களை அடைத்திருக்கும்.
அதன் மீதே மறுபடியும் பவுடர் அல்லது மேக்-அப் போடுவது உங்கள் முகத்தில் படிந்திருக்கும் வியர்வையையும் அழுக்கையும் மேலும் அதிகமாக்கும். அதனால் சிரமம் பார்க்காமல் நடுவில் ஒருமுறையாவது முகத்தைக் கழுவி விட்டோ, வெட் டிஷ்யூ பேப்பர் கொண்டு நன்றாகத் துடைத்து விட்டோ மீண்டும் மேக்-அப் போட்டுக் கொள்வதே சிறந்தது.
முகம் கழுவ சோப்பைக் காட்டிலும் ஃபேஸ் வாஷ் உபயோகிப்பது நல்லது. ஃபவுண்டேஷனை தேர்ந்தெடுக்கும்போது, முகத்தின் நிறத்துக்கேற்ற ஷேட்களையே தேர்ந்தெடுக்க வேண்டும். ஏ.சி அறையில் வேலை செய்பவர்கள் லோஷன் ஃபவுண்டேஷனையும், ஏ.சி இல்லாத அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்கள் கிரீம் அல்லது கேக் ஃபவுண்டேஷனையும் உபயோகிக்கலாம்.
குளிர்ந்த நீரில் யூடிகோலன் (Eaudecologne) என்ற லோஷனை கலந்து முகத்தில் தெளித்துக் கொண்டால், முகம் பளிச் என்றிருக்கும். பொதுவாக முகத்தில் சதை தளர்வாகத் தெரியும்போதுதான் வயதான தோற்றம் ஏற்படும். இந்த லோஷனை உபயோகிக்கும்போது, தளர்ந்த சதை இறுகி முகத்தில் பொலிவு கூடும்.
பத்து ரோஜாப் பூக்களின் இதழ்களை 1 லிட்டர் தண்ணீரில் போட்டு காற்று புகாமல் மூடி விட வேண்டும். மூன்று மணி நேரத்தில் ரோஜா சாறு அந்த தண்ணீரில் இறங்கியிருக்கும். இதழ்களை வடிகட்டிவிட்டு சாறு இறங்கிய அந்த தண்ணீரை ஒரு பாட்டிலில் சேகரித்து வைத்துக் கொண்டால், ஒரு வாரம் வரை கெட்டுப் போகாமல் இருக்கும். இதற்கு ஸ்கின் டானிக் என்று பெயர். அடிக்கடி இந்தத் தண்ணீரால் முகத்தைக் கழுவினால், முகம் பளபளப்பாக இருக்கும். கண்ணுக்குக் கீழே உள்ள கருவளையமும் மறைந்து விடும்