உடலிலேயே அதிக அளவில் சுற்றுச்சூழலால் பாதிக்கப்படுவது சருமம் தான். இதனால் சருமத்தில் பிரச்சனைகள் அதிகம் ஏற்படுவதோடு, சருமம் பொலிவிழந்து சோர்வோடு காணப்படுகிறது. இதற்கு சுற்றுச்சூழல் மட்டுமின்றி, ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, மன அழுத்தம், டென்சன் போன்றவைகளும் முக்கிய பங்கினை வகிக்கிறது.
அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்னும் பழமொழிக்கேற்ப, உடலினுள் எந்த ஒரு பிரச்சனை இருந்தாலும், அது அப்படியே சருமத்தில் பிரதிபலிக்கும். ஆகவே சருமத்தின் அழகை வெளிப்புறத்தில் மட்டுமின்றி, உட்புறத்திலும் பராமரிக்க வேண்டும்.
இங்கு சோர்வடைந்து இருக்கும் சருமத்தை பொலிவோடு வைத்துக் கொள்ள ஒருசில வழிகள் கொடுக்கப்பட்டுள்ளது. அவை என்னவென்று படித்து தெரிந்து, அதன்படி பின்பற்றினால் நிச்சயம் அழகாக ஜொலிக்கலாம்.
தண்ணீர்
சருமத்தின் அழகைப் பராமரிப்பதில் தண்ணீர் நிச்சயம் மிகவும் இன்றியமையாதது. அதிலும் தினமும் குறைந்தது 2 லிட்டர் தண்ணீரை அவசியம் பருக வேண்டும். இதனால் செரிமான மண்டலம் சுத்தமாக இருப்பதுடன், உடலில் தங்கியுள்ள நச்சுக்கள் வெளியேறி, சருமம் பொலிவோடு காணப்படும்.
தயிர்
பால் பொருட்களில் ஒன்றான தயிரில் லாக்டிக் ஆசிட் என்னும் ப்ளீச்சிங் பொருள் இருப்பதால், அதனைப் பயன்படுத்தி சருமத்தைப் பராமரித்தாலும், சருமம் பளிச்சென்று இருக்கும். அதற்கு தயிரில் மஞ்சள் தூள் அல்லது தேன் சேர்த்து கலந்து, சருமத்திற்கு மாஸ்க் போட வேண்டும்.
எலுமிச்சை
எலுமிச்சையில் சருமத்தின் நிறத்தை அதிகரிக்கும் தன்மை இருப்பதோடு, வைட்டமின் சி சத்து அதிக அளவில் நிறைந்துள்ளது. ஆனால் இதனை சருமத்தில் அளவுக்கு அதிகமாக பயன்படுத்தக் கூடாது. வாரம் ஒருமுறை இதனைப் பயன்படுத்தினால் போதுமானது. அதற்கு எலுமிச்சை சாற்றில் தேன் சேர்த்து கலந்து, சருமத்தில் தடவி 1/2 மணிநேரம் ஊற வைத்து கழுவ வேண்டும்.
கடலை மாவு
கடலை மாவும் சரும அழகை அதிகரிக்கும்.. அதற்கு கடலை மாவை தயிருடன் சேர்த்து கலந்து, முகத்திற்கு தடவி உலர வைத்து கழுவ வேண்டும்.
காபி
காபி பொடியில், சிறிது சர்க்கரை டற்றும் எண்ணெய் சேர்த்து கலந்து, அதனைக் கொண்டு முகத்தை தேய்த்தால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, சருமம் அழகாக காணப்படும்.