பெண்களுக்கு முகப் பொலிவு எவ்வளவு முக்கியமான ஒன்று என்பதை அனைவரும் அறிந்திருப்பர். அதற்கு சான்று, அதனை பராமரிப்பதற்காக மாதந்தோறும் பெண்கள் செய்யும் செலவு தான். அழகு சாதன நிலையங்கள் இல்லாவிட்டால் பெண்களுக்கு மிகவும் சிரமம். அப்படி தான், இந்த ஊரடங்கு பெண்களை மிகுந்த சிரமத்திற்கு உள்ளாக்கிவிட்டது. செலவு செய்து அழகை பராமரிக்க முடியவில்லை என்ற கவலை இனி யாருக்குமே தேவையில்லை. முக அழகின் முதல் மற்றும் முக்கிய செயலே முகத்தை சுத்தப்படுத்துவது தான்.
முகத்தை சுத்தப்படுத்துவதன் மூலம், முகத்தில் படிந்துள்ள அழுக்குகள், இறந்த செல்கள் மற்றும் அசுத்தங்கள் என அனைத்து நீங்கிவிடும். அதன்மூலம், சரும துளைகளில் உள்ள அடைப்புகள் நீங்கி, எந்தவித சரும பிரச்சனைகளும் ஏற்படாமல் தடுத்திடலாம்.
இப்போது முகத்திற்கு பயன்படுத்தும் பொருட்கள் குறித்த சற்று விவேகமும், விழிப்புணர்வும் பெண்களுக்கு ஏற்பட்டுள்ளது என்றே கூற வேண்டும். சருமத்தின் தன்மை என்பது ஒவ்வொருவருக்கும் மாறுபடக்கூடும். எனவே, சருமத்திற்கு தகுந்தாற்போல் சரும பராமரிப்பு பொருட்களை தேர்ந்தெடுக்க வேண்டும்.
ஃபேஸ் வாஷை தேர்ந்தெடுக்கும் முறை
தற்போதைய காலக்கட்டத்தில் ஏராளமான ஃபேஸ் வாஷ்கள் கிடைக்கின்றன. நுரை வரக்கூடிய பெரும்பாலான ஃபேஸ் வாஷ்களில் எஸ்.எல்.எஸ். காணப்படுகிறது. இது அனைத்து சோப்புகள் மற்றும் டிடெர்ஜன்ட்களில் காணப்படக்கூடியவை. அவை சருமத்திற்கு தீங்கு விளைவிக்கக் கூடியவை. இதனால், தான் பெரும்பாலானவர்கள் கெமிக்கல் நிறைந்தவற்றை ஒதுக்கிவிட்டு, ஆர்கானிக் மற்றும் கெமிக்கல் இல்லாத அழகு சாதனப் பொருட்களை தேடி செல்கின்றனர். இருந்தாலும், நமது சருமத்திற்கு ஏற்றதை கண்டிபிடித்து உபயோகிப்பது என்பது கடினமான ஒன்று. அதனால் தான், உங்களது சருமத்திற்கு ஏற்ற ஃபேஸ் வாஷை வீட்டிலேயே சுலபமாக தயாரித்து எப்படி பயன்படுத்தலாம் என்பதை இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. இதனை முயற்சி செய்து பாருங்கள். இனி எந்த செலவும் செய்ய வேண்டியதிருக்காது.
சரும நிபுணர்கள் கூறுவதாவது “ஃபேஸ் வாஷ் பயன்படுத்துவது உங்கள் சரும பராமரிப்பின் முதல் படியாகும். சல்பேட் இல்லாத சர்பாக்டான்ட்கள் கொண்ட தயாரிப்புகளைத் தேர்வு செய்யவும். உங்கள் உடலுக்குப் பயன்படுத்தப்படும் வழக்கமான, தினசரி சோப்பைப் பயன்படுத்த வேண்டாம். இது மிகவும் கடுமையானது, வறட்சியை ஏற்படுத்தக்கூடியது மற்றும் காலப்போக்கில் சரும பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்”.
எண்ணெய் பசை மற்றும் முகப்பரு சருமத்திற்கான ஃபேஸ் வாஷ்
முகப்பரு பாதிப்புக்குள்ளான சருமத்திற்கு கூடுதல் கவனிப்பு தேவைப்படுகிறது. மேலும் நீங்கள் உபயோகிக்கும் தயாரிப்புகளை கவனமாக தேர்வு செய்ய வேண்டியது அவசியம். நீங்கள் தேர்ந்தெடுக்கும் பொருட்கள் தோலில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடாது அல்லது மேற்கொண்டு பருக்களைத் தூண்டக்கூடாது. இதற்கு, உங்கள் சருமத்தை, எரிச்சலூட்டாமல் அசுத்தங்களை சுத்தப்படுத்தி மென்மையானதாக்கும் ஒரு ஃபேஸ் வாஷ் உங்களுக்கு தேவை. இப்போது, எண்ணெய் பசை சருமத்திற்கான ஃபேஸ் வாஷ் எப்படி செய்வதென்று பார்ப்போம்.
தேவையானப் பொருட்கள்:
* டீ ட்ரீ ஆயில் – 15 முதல் 20 துளிகள்
* விளக்கெண்ணெய் – ¼ கப்
* ஜோஜோபா எண்ணெய் – ¼ கப்
* கிரேப்சீட் எண்ணெய் – ½ கப்
செய்முறை:
* தேவையானப் பொருட்களை சரியான அளவில் அளந்து எடுத்துக் கொள்ளவும்.
* காற்று புகாத ஒரு டப்பாவில் தேவையானப் பொருட்களை ஊற்றி கலக்கி நன்கு இறுக்கமாக மூடி வைத்துக் கொள்ளவும்.
* முகத்தை சுத்தப்படுத்த, தயாரித்து வைத்த கலவையை சிறிது எடுத்து முகத்தில் தடவி மெதுவாக மசாஜ் செய்யவும்.
* பின்னர், சுடுதண்ணீரில் நனைத்த சுத்தமான துண்டை முகத்தின் மீது சிறிது நேரம் வைத்திருக்கவும்.
* சில நிமிடங்கள் கழித்து, பேப்பர் டவலால் முகத்தை துடைத்திடவும்.
* இப்படி செய்திடுவதால் முகத்தில் எண்ணெய் பசை இல்லாமல், ஈரப்பதத்தை தக்க வைத்திடலாம்.
சாதாரண, மென்மையான மற்றும் வறண்ட சருமம்
ஒருவேளை உங்களுக்கு வறண்ட, மென்மையான அல்லது சாதாரண சருமம் இருந்தால் இந்த ஃபேஸ் வாஷ் நிச்சயம் பொருத்தமானதாக இருக்கும். இதில் எரிச்சலூட்டக்கூடிய அல்லது அழற்சி ஏற்படுத்தக்கூடிய அல்லது வறட்சி உண்டாகும் பொருட்கள் எதுவும் கிடையாது.
கற்றாழை ஜெல் மற்றும் தேன் ஃபேஸ் வாஷ்
கற்றாழை ஜெல் மற்றும் தேன் இரண்டுமே சருமத்திற்கு மிகுந்த நன்மையளிக்கக்கூடியவை. கற்றாழை ஜெல் சருமத்திற்கு இனிமையானது, தேன் ஆன்டிபாக்டீரியல் மற்றும் ஈரப்பதம் அளிக்கக்கூடியவை. இதன் சிறப்பம்சமே இந்த இரண்டுமே எப்போதும் வீட்டில் இருக்கக்கூடியவை.
தேவையானப் பொருட்கள்:
* கற்றாழை ஜெல் – ¼ கப்
* தேன் – ¼ கப்
* நறுமண எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
* ஒரு பவுளில், தேவையானப் பொருட்கள் அனைத்தையும் சேர்த்து கலந்து கொள்ளவும்.
* தயார் செய்த கலவையை ஒரு கண்ணாடி ஜாரில் ஊற்றி, ஃபிரிட்ஜில் வைத்து பயன்படுத்தவும்.
* முகத்தை சுத்தப்படுத்துவதற்கு, சிறிது கலவையை எடுத்து கைகளால் முகம் முழுவதும் தேய்க்கவும்.
* சில நிமிடங்கள் கழித்து, சாதாரண தண்ணீரால் முகத்தை கழுவிடவும்.
காம்பினேஷன் சருமத்திற்கான ஃபேஸ் வாஷ்
சிலருக்கு முகம் வறண்டிருந்தாலும், நெற்றி, மூக்கு மற்றும் வாயை சுற்றிய பகுதியில் மட்டும் எண்ணெய் பசை அதிகமாக இருக்கும் இதனை டி-சோன் என்றழைப்பர். இத்தகைய சருமம் உள்ளவர்கள் டி-சோன் பகுதியை மட்டும் தனியாக கவனித்து கொள்ள வேண்டும். காம்பினேஷன் சருமத்திற்கான ஃபேஸ் வாஷை வீட்டிலேயே செய்வது எப்படி என்பதை இப்போது பார்ப்போம்.
தேவையானப் பொருட்கள்:
* கடலை மாவு- 2 டேபிள் ஸ்பூன்
* காய்ச்சாத பால்- ¼ கப்
செய்முறை:
* ஒரு பாத்திரத்தில், தேவையானப் பொருட்களை சேர்த்து ஒன்றாக கலந்து கொள்ளவும்.
* கலவையின் பதத்திற்கு ஏற்ப பாலை சேர்த்து கொள்ளலாம். இது மிகவும் கெட்டியாகவோ அல்லது நீராகவோ இருக்கக்கூடாது.
* மென்மையாக வட்ட இயக்கங்களில் இதை முகத்தில் மசாஜ் செய்யவும்.
* 2-3 நிமிடங்களுக்குப் பிறகு, முகத்தை கழுவிடவும்.