அனைவரும் வடையை வைத்து தான் தயிர் வடை செய்வோம். ஆனால் வடையே இல்லாமல், வெறும் பிரட் கொண்டு தயிர் வடை செய்யலாம் என்பது தெரியுமா? ஆம், பிரட் கொண்டு மிகவும் ஈஸியான வழியில் தயிர் வடை செய்யலாம். இது சுவையாக இருப்பதுடன், வித்தியாசமாகவும் இருக்கும்.
இங்கு அந்த பிரட் தயிர் வடையை எப்படி செய்வதென்று கொடுத்துள்ளோம். அதைப் படித்து உங்கள் வீட்டில் உள்ளோருக்கு செய்து கொடுத்து அசத்துங்கள்.
Bread Dahi Vada
தேவையான பொருட்கள்:
பிரட் – 8 துண்டுகள்
தயிர் – 1 கப்
சர்க்கரை – 2 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
சீரகப் பொடி – 1/2 டீஸ்பூன்
சாட் மசாலா – 1 டீஸ்பூன்
சர்க்கரை கலந்த புளிச்சாறு – 2-3 டீஸ்பூன்
கொத்தமல்லி சட்னி – 2-3 டீஸ்பூன்
மாதுளை – சிறிது (அலங்கரிக்க)
கொத்தமல்லி – சிறிது (அலங்கரிக்க)
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
முதலில் தயிரில், சர்க்கரை மற்றும் உப்பு சேர்த்து நன்கு அடித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் பிரட் துண்டுகளை ஒவ்வொன்றாக எடுத்து, கூர்மையான முனைகளைக் கொண்டு வட்டமான கிண்ணத்தை எடுத்து, பிரட் துண்டுகளை வெட்டிக் கொள்ள வேண்டும்.
பின்பு வெட்டிய பிரட் துண்டுகளில் நான்கை எடுத்து, அதன் ஒரு பக்கத்தில் கொத்தமல்லி சட்னியை தடவி, மீதமுள்ள பிரட் துண்டுகளால் மூடி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு அகன்ற தட்டில் பாதி தயிரை ஊற்றி, அதன் மேல் பிரட் துண்டுகளை வைக்க வேண்டும்.
பின் அதன் மேல் மீதமுள்ள தயிரை ஊற்றி, புளிச்சாறு, மிளகாய் தூள், சீரகப் பொடி மற்றும் சாட் மசாலா தூவி, பிறகு கொத்தமல்லி மற்றும் மாதுளையை தூவி அலங்கரித்தால், பிரட் தயிர் வடை ரெடி!!!