விடுமுறை நாட்களில் நல்ல சுவையான அதே சமயம் ஈஸியாக இருக்கும் வண்ணம் ஒரு சிக்கன் ரெசிபியை செய்து சாப்பிட ஆசையா? அப்படியானால், மாங்காய் சிக்கன் குழம்பு செய்து சாப்பிடுங்கள். இந்த ரெசிபி வித்தியாசமான செய்முறையை கொண்டிருப்பினும், இதன் சுவைக்கு ஈடு இணை வேறு எதுவும் வராது.
சரி, இப்போது அந்த மாங்காய் சிக்கன் குழம்பு ரெசிபியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
எலும்பில்லாத சிக்கன் – 1 கிலோ
ஊற வைப்பதற்கு…
எலுமிச்சை சாறு – 2 டேபிள் ஸ்பூன்
தயிர் – 2 டேபிள் ஸ்பூன்
மாங்காய் – 1 (துண்டுகளாக்கப்பட்டது)
பூண்டு – 5-6 பற்கள்
பச்சை மிளகாய் – 2
உப்பு – தேவையான அளவு
குழம்பிற்கு…
வெங்காயம் – 3 (நறுக்கியது)
பூண்டு – 4 பற்கள்
மாங்காய் – 1 (துண்டுகளாக்கப்பட்டது)
பச்சை மிளகாய் – 2
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்
சீரகப் பொடி – 1 டீஸ்பூன்
மல்லி தூள் – 2 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
சர்க்கரை – 1/2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி – 2 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)
செய்முறை:
ஊற வைப்பதற்கு…
முதலில் சிக்கன் துண்டுகளை நன்கு சுத்தமாக கழுவி, நீரை வடித்துவிட்டு தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் மிக்ஸியில் மாங்காய் துண்டுகள், பச்சை மிளகாய், பூண்டு சேர்த்து கெட்டியாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு அதனை சிக்கன் துண்டுகளுடன் சேர்த்து, எலுமிச்சை சாறு, தயிர் மற்றும் உப்பு சேர்த்து கலந்து 30 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
குழம்பிற்கு…
மிக்ஸியில் மாங்காய் துண்டுகள், பச்சை மிளகாய், பூண்மு சேர்த்து தண்ணீர் ஊற்றி சற்று கெட்டியாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் வெங்காயத்தையும் அரைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சிக்கன் துண்டுகுள சேர்த்து மிதமான தீயில் பொன்னிறமாக வறுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் மீதமுள்ள எண்ணெயை ஊற்றி காய்ந்ததும், சீரகம் சேர்த்து தாளித்து, வெங்காய பேஸ்ட் சேர்த்து 5-6 நிமிடம் வதக்கி, அடுத்து அதில் அரைத்து வைத்துள்ள மாங்காய் பேஸ்ட், மஞ்சள் தூள், சீரகப் பொடி, மல்லி தூள், மிளகாய் தூள் மற்றும் சர்க்கரை சேர்த்து மிதமான தீயில் 5-6 நிமிடம் கிளறி விட வேண்டும்.
பின் அதில் வறுத்து வைத்துள்ள சிக்கன் துண்டுகளை சேர்த்து, உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கிளறி, மூடி வைத்து 20 நிமிடம் குறைவான தீயில் வேக வைக்க வேண்டும்.
குழம்பானது நன்கு கொதித்ததும், அதனை இறக்கி, அதில் கொத்தமல்லியைத் தூவி அலங்கரித்தால், மாங்காய் சிக்கன் குழம்பு ரெடி!!!