பெண்களை மேக்கப் இல்லாமல் பார்க்கவே முடியாது என்று ஆண்கள் அதிகம் கிண்டல் செய்வதால், பல பெண்கள் தங்களின் இயற்கை அழகை அதிகரிக்க தற்போது முயல்கின்றனர். அதற்கு கடைகளில் விற்கப்படும் க்ரீம்களை வாங்கிப் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு, இயற்கை வழிகளை நாடுகின்றனர். நீங்களும் உங்கள் இயற்கை அழகை அதிகரிக்க நினைப்பவரா? அப்படியெனில் தொடர்ந்து படியுங்கள்.
ஏனென்றால் தமிழ் போல்ட் ஸ்கை மேக்கப் போடாமலேயே அழகாக தெரிய ஒருசில இயற்கை வழிகளைக் கொடுத்துள்ளது. அதைப் படித்து அவற்றை அன்றாடம் பின்பற்றி வந்தால், நிச்சயம் மேக்கப் இல்லாமலேயே அழகாக தெரிவீர்கள்.
நேச்சுரல் கிளின்சர்
தினமும் தக்காளி பேஸ்ட்டில் பால் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து கழுவி வந்தால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் மற்றும் அதிகப்படியான எண்ணெய் பசை போன்றவை நீங்கி, முகம் பொலிவோடு அழகாக காணப்படும். இந்த முறையை தினமும் காலையிலும், மாலையிலும் செய்து வந்தால் நல்ல பலன் விரைவில் கிடைக்கும்.
ஜூஸ் சிகிச்சை
அன்னாசி ஜூஸ், ஆப்பிள் ஜூஸ் மற்றும் எலுமிச்சை ஜூஸ் ஆகியவற்றை சரிசமமாக எடுத்து ஒன்றாக கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இந்த முறையினால் முகம் எப்போதும் பளிச்சென்று இருக்கும்.
முட்டை ஃபேஷியல்
உங்களுக்கு எண்ணெய் பசை சருமம் என்றால், முட்டையின் வெள்ளைக்கருவை முகத்திற்கு பயன்படுத்தலாம். அதுவே வறட்சியான சருமம் என்றால் மஞ்சள் கருவை நன்கு அடித்து முகத்திற்கு பயன்படுத்தவும். அதிலும் 15 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இதனால் முகத்தில் காணப்படும் பள்ளங்கள் மறைய ஆரம்பிப்பதோடு, சுருக்கங்களும் வருவது தடுக்கப்படும்.
அழகான பழங்கள்
இந்த முறை முகத்தின் பொலிவை அதிகரிக்கக்கூடியவை. அது என்னவெனில், 1 டேபிள் ஸ்பூன் பப்பாளி கூழுடன், 1 டேபிள் ஸ்ழுன் அரைத்த பச்சை திராட்சையை சேர்த்து கலந்து, அதில் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து ஓரளவு உலர்ந்த பின் முகத்தை கழுவ வேண்டும்.
க்ரீம் மசாஜ்
க்ரீம் மசாஜ் என்றதும் கடைகளில் விற்கப்படும் கெமிக்கல் கலந்த க்ரீம் அல்ல. பிரஷ் க்ரீமைக் கொண்டு முகத்தை மேலும் கீழுமாக வட்ட வடிவில் மசாஜ் செய்ய வேண்டும். இப்படி தினமும் இரவில் செய்து வந்தால், முகத்தின் மென்மைத்தன்மை அதிகரிக்கும். மேலும் முகத்தில் இரத்த ஓட்டத்தின் அளவு அதிகரித்து, முகத்தின் அழகும் அதிகரித்துக் காணப்படும்.
சரியான உணவை சாப்பிடவும்
ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தின் மூலம் சருமத்தின் அழகை அதிகரிக்கலாம். ஆய்வு ஒன்றில், குறிப்பிட்ட உணவுகள் சருமத்தின் ஆரோக்கியத்தைப் பாதித்து, சருமத்தின் அழகைக் கெடுப்பதாக தெரிவித்துள்ளது. ஆகவே அழகாக காணப்பட வேண்டுமெனில், பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகம் சாப்பிட வேண்டும். இதனால் உடலுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைத்து, சருமம் அழகாக காணப்படும்.
ஹேர் கண்டிஷனர்
கூந்தல் பட்டுப்போன்று அழகாக காணப்பட, வாழைப்பழம், வெள்ளரிக்காய், தக்காளி மற்றும் தயிர் ஆகியவற்றை ஒன்றாக அரைத்து, தலைக்கு மாஸ்க் போட்டு, 1 மணிநேரம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் அலச வேண்டும். இந்த முறையினால் கூந்தல் பட்டுப்போன்று இருப்பதோடு, அழகாக பொலிவோடும் இருக்கும்.
கரும்புள்ளிகளுக்கான தீர்வு
கரும்புள்ளிகள் முகத்தில் அதிகம் இருந்தால், அதனை போக்க 1 டேபிள் ஸ்பூன் தயிரில், 1 டீஸ்பூன் மிளகுத் தூள் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் தேய்த்து கழுவ வேண்டும். இதனால் கரும்புள்ளிகள் விரைவில் அகலும்.
பொலிவிழந்த கண்கள்
கண்கள் பொலிவிழந்து காணப்பட்டால், அதனை பொலிவோடு புத்துணர்ச்சியுடன் வெளிக்காட்ட, வெள்ளரிக்காயை வட்டமாக வெட்டி, ஃப்ரிட்ஜில் 1 மணிநேரம் வைத்து, பின் கண்களுக்கு மேல் வைத்து 1/2 மணிநேரம் வைக்க வேண்டும். இதனால் கண்களில் உள்ள சோர்வு, கருவளையங்கள் நீங்கி, கண்கள் புத்துணர்ச்சியுடன் அழகாக காணப்படும்.
உடற்பயிற்சி
முகத்திற்கு மாஸ்க் போட்டு வந்தால் மட்டும் முகத்தின் அழகு கூடாது. தினமும் உடற்பயிற்சியும் செய்ய வேண்டும். உடற்பயிற்சி செய்வதால், உடலில் இரத்த ஓட்டம் சீராக இருக்கும். இதனால் உடலில் தலை முதல் கால் வரை அனைத்து உறுப்புகளுக்கும் இரத்த ஓட்டம் சீராக இருந்து, தானாகவே முகம் பொலிவோடு காணப்படும்.
அழகான தூக்கம்
நல்ல நிம்மதியான தூக்கத்தை மேற்கொண்டால், அழகும் தானாகவே அதிகரிக்கும். அதிலும் ஒரு நாளைக்கு தினமும் 8 மணிநேர தூக்கத்தை மேற்கொண்டால், தசைகள் தளர்ந்து, பாதிக்கப்பட்ட சரும செல்கள் புதுப்பிக்கப்பட்டு, முகம் தானாக பளிச்சென்று காணப்படும்.