கையில் மருதாணி இட்டுக்கொள்வது தமிழகப் பெண்கள் இடையே காலம் காலமாகவே இருந்து வருகிறது. இப்போது பலர் மருதாணிக்குப் பதிலாக நெயில் பாலீஷுக்கு மாறிவிட்டார்கள். அந்த நெயில் பாலீஷ் அவ்வப்போது நகத்தில் இருந்து உரிந்து விழ, சாப்பிடும்போது அப்படியே வயிற்றுக்குள் போய் ஒரு வழி பண்ணிவிடுகிறது.
ஆனால், மருதாணி வைத்துக்கொள்வதால் இதுபோன்ற பிரச்சினைகளே கிடையாது. நகங்களின் இடுக்கில் அழுக்கு சேர்வது தவிர்க்க முடியாத ஒன்று. நகத்தை வளர விடாமல் ஒட்ட நறுக்கி வந்தால்தான் அதைத் தவிர்க்க முடியும். இன்றைய ‘பரபர’ வாழ்க்கை முறையில் பலர் நகம் வெட்டுவதற்குக்கூட நேரம் இல்லாமல் தவிக்கிறார்கள்.
மருதாணி வைத்துக்கொண்டால் நகங்களின் இடுக்கில் சேர்ந்திருக்கும் அழுக்கில் உள்ள விஷக்கிருமிகளை அது அழித்துவிடும். உடல் உஷ்ணத்தைக் குறைக்கும் சக்தியும் இந்த மருதாணிக்கு உண்டு. இதுதவிர, தொற்றுநோயை ஏற்படுத்தும் கிருமிகள் அடிக்கடி மருதாணி இட்டுக்கொள்பவர்களை நெருங்குவது கடினம். சொறி-சிரங்கு போன்ற பிரச்சினைகளும் வராது.