ஒவ்வொரு பெண்ணுக்கும் பட்டுப்போன்ற அழகான, நீளமான மற்றும் அடர்த்தியான முடி வேண்டுமென்ற ஆசை இருக்கும். ஆனால் தற்போதைய மாசடைந்த சுற்றுச்சூழலால் முடியின் ஆரோக்கியம் விரைவில் பாதிக்கப்படுகிறது. இதனால் தலையில் நிறைய பிரச்சனைகளை சந்தக்க நேரிடுகிறது. அதில் பொடுகுத் தொல்லை, முடி உதிர்தல், முடி வெடிப்பு, முடி வளர்ச்சி தடைப்படுபது போன்றவை குறிப்பிடத்தக்கவை.
அதுமட்டுமின்றி, ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கவழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறையினால், முடியின் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது. மேலும் கெமிக்கல் கலந்த பொருட்களைக் கொண்டு அதிகமாக முடியைப் பராமரிப்பதாலும், முடியின் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது. ஆகவே உங்கள் முடியை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வாரம் ஒருமுறையாவது முடிக்கு வேண்டிய ஊட்டச்சத்துக்களை வழங்கும் எண்ணெயைக் கொண்டு மசாஜ் செய்து குளிக்க வேண்டும்.
இங்கு அப்படி முடிக்கு நல்ல ஊட்டச்சத்துக்களை வழங்கும் விளக்கெண்ணெயைக் கொண்டு முடியைப் பராமரிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் பார்ப்போமா!!!
முடியின் வளர்ச்சியை அதிகரிக்கும்
விளக்கெண்ணெய் கொண்டு முடியைப் பராமரித்தால், அது முடியின் வளர்ச்சியைத் தூண்டும். அதற்கு விளக்கெண்ணெயுடன் ஆலிவ் ஆயில் மற்றும் தேங்காய் எண்ணெயை ஒன்றாக கலந்து, அதனை தலையில் தடவி நன்கு மசாஜ் செய்து, 3-8 மணிநேரம் ஊற வைத்து, பின் அலச வேண்டும். இப்படி வாரம் மூன்று முறை செய்தால், முடியின் ஆரோக்கியம் மேம்படுவதோடு, முடியின் வளர்ச்சியும் அதிகரிக்கும்.
பட்டுப் போன்ற கூந்தல்
விளக்கெண்ணெய் கொண்டு முடியைப் பராமரித்து வந்தால், முடி பட்டுப் போன்று மென்மையாக இருக்கும். அதறகு வாரம் 1-2 முறையாவது விளக்கெண்ணெய் மசாஜ் செய்யுங்கள்.
முடி உதிர்தலைத் தடுக்கும்
விளக்கெண்ணெய் முடி உதிர்தலைத் தடுக்கும் தன்மை கொண்டது. இதற்கு அதில் நிறைந்துள்ள சத்துக்கள் தான் காரணம். ஆகவே விளக்கெண்ணெயை வெதுவெதுப்பாக சூடேற்றி, அதனை தலையில் தடவி நன்கு மசாஜ் செய்து 30 நிமிடம் ஊற வைத்து அலச வேண்டும்.
முடி வெடிப்பு
விளக்கெண்ணெயில் வைட்டமின் ஈ, ஒமேகா-6 ஃபேட்டி ஆசிட் மற்றும் அத்தியாவசிய அமினோ அமிலங்கள் போன்றவை நிறைந்துள்ளது. எனவே இந்த விளக்கெண்ணெயை ஆலிவ் ஆயிலுடன் சேர்த்து கலந்து, வாரம் ஒருமுறை தலைக்கு நன்கு மசாஜ் செய்து குளித்து வந்தால், முடி வெடிப்பு ஏற்படுவது தடுக்கப்படும்.
பொடுகைத் தடுக்கும்
பொடுகுத் தொல்லை இருந்தால், விளக்கெண்ணெயுடன் ஆலிவ் ஆயில் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, தலையில் தடவி நன்கு மசாஜ் செய்து 1/2 மணிநேரம் ஊற வைத்து குளிக்க வேண்டும். இதனால் பொடுகைத் தடுக்கலாம்.
முடி வறட்சியைத் தடுக்கும்
உங்களுக்கு முடி அதிக வறட்சியுடன் இருந்தால், வாரம் ஒரு முறை விளக்கெண்ணெய் மசாஜ் குளியல் எடுங்கள். இதனால் முடியின் வறட்சி தடுக்கப்படுவதோடு, அடர்த்தியும் அதிகமாகும்.