தக்காளிப் பழத்தால் எப்பேர்பட்ட பெண்ணின் முகத்தையும் தக… தகக்க வைத்து விடலாம். தக்காளியானது முகச்சுருக்கத்தை விரட்டி இளமையானவராக மாற்றி விடும்.
நீண்ட நாட்களாக முகத்தை சரிவர பராமரிக்காதவர்களின் முகத்திலுள்ள செல்கள் இறந்து போய் முகம் பொலிவிழந்து விடும். இப்படிப்பட்டவர்கள் ஒரு தக்காளியின் சாறுடன் கால் டீஸ்பூன் ரவையைக் கலந்து கொள்ளுங்கள்.
இதை நன்றாக முகத்தில் தேய்த்து கழுவுங்கள். தொடர்ந்து இதைச் செய்து வந்தால் முகம் சூரியனாகப் பிரகாசிக்கும். சில பெண்களுக்கு முகத்தில் மென்மைத்தன்மை குறைந்து முரட்டுத்தனமாகத் தெரியும் இப்படிப்பட்டவர்கள் ஒரு தக்காளியை எடுத்து கூழாக்கிக் கொள்ளுங்கள். இதனுடன் அரை டீஸ்பூன் தயிரைக் கலந்து கொள்ளுங்கள்.
இதை முகத்துக்குப்பூசி 5 நிமிடம் கழித்து கழுவுங்கள். முகம் மிருதுவாகி தங்கம் போல் தக தகவென ஜொலிக்கும்.
சில பெண்கள் கண்ணுக்கு கீழ் கருவளையம் தோன்றி எதையோ பறிகொடுத்தது போல் வலம் வருவார்கள். இவர்களை அழகு தேவதைகளாக மாற்றுவதில் தக்காளிக்கு நிகர் தக்காளிதான்.
ஒரு வெள்ளரித்துண்டு, அரை தக்காளி இரண்டையும் அரைத்துக் கொள்ளுங்கள்.
இமைகளின் மேல் இந்த கலவையைப்பூசி, 2 நிமிடம் கழித்துக் கழுவுங்கள். ஒரிரு வாரங்கள் இதைச் செய்து வந்தாலே கருவளையம் காணாமல் போவதுடன் கண்களும் பளிச்சென்று இருக்கும்.
பெரும்பாலான பெண்கள் முகத்துக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை கழுத்திற்கு கொடுப்பதில்லை. இதனால் கழுத்தில் கறுப்புக்கயிறு கட்டியது போல் கருவளையம் தோன்றி விடும்.
இதனை தக்காளி பேஸ்ட்டால் விரட்டி விடலாம்.
தக்காளி சாறு- அரை டீஸ்பூன், தேன்அரை டீஸ்பூன், சமையல் சோடா- ஒரு சிட்டிகை. இந்த மூன்றையும் கலந்து கொள்ளுங்கள்.
இந்த பேஸ்ட்டை கருவளையத்தின் மேல் பூசி 10 நிமிடம் கழித்து கழுவுங்கள். வாரம் 3 முறை இப்படி செய்து வந்தால் கருவளையமா அது எங்கே என்பார்கள்.
கண்ணாடியைப் பார்க்கவே பிடிக்காமல், கரும்புள்ளியும் கருந்திட்டுகளும் உங்கள் முகத்தை ஆக்ரமித்துக் கொண்டனவா? ரிலாக்ஸ் பிளீஸ்… உங்கள் முகத்தை கண்ணாடி போல் மாற்றிக் காட்டுகிறது. இந்த தக்காளி பேஸ்ட்!
உருளைக்கிழங்கு துருவல் சாறு- ஒரு டீஸ்பூன், தக்காளி விழுது- அரை டீஸ்பூன், இரண்டையும் கலந்து கொள்ளுங்கள்.
இந்த பேஸ்ட்டை கழுத்திலும் முகத்திலும் தடவி 5 நிமிடம் கழித்து கழுவுங்கள். தொடர்ந்து அதைச்செய்து வந்தால், சில வாரங்களிலேயே வித்தியாசத்தை உணர முடியும்.
கன்னங்கள் ஒட்டிப்போய் அழகற்றதாக காணப்படுகிறதா? முகத்தை புஸ் புஸ் என மாற்றிட இந்த தக்காளி கூழை பயன்படுத்துங்க.
தோல் மற்றும் விதை நீக்கிய ஒரு தக்காளியை கூழாக்குங்கள். ஒரு டீஸ்பூன் ஆலிவ் எண்ணையை எடுங்கள்.
முதலில் முகத்தில் ஆலிவ் எண்ணையை தடவுங்கள். அதன் மேல் இந்தத் தக்காளி கூழைப் பூசி, 10 நிமிடம் கழித்து கழுவுங்கள்.
வாரம் ஒருமுறை இப்படி செய்து வர தக்காளி போன்ற கன்னங்கள் கிடைக்கும்.