20 வயதுக்கு உட்பட்டவர்கள் ஹேர் கலரிங் செய்வதைத் தவிர்ப்பது நல்லது. பெண்கள் பி.பி.டி உள்ள ஹேர் கலரைப் பயன்படுத்தக் கூடாது. கர்ப்பிணிகளும், பால் கொடுக்கும் தாய்மார்களும் அறவே தவிர்க்க வேண்டும். ஏனெனில், இது குழந்தைகளை பாதிக்கவும் வாய்ப்புகள் உண்டு.
பி.பி.டி என்பது முடிக்கு கறுப்பு நிறத்தைக் கொடுக்கக்கூடிய ரசாயனம்.
இது அதிக அளவில் பக்கவிளைவுகளை ஏற்படுத்தக்கூடியது. எனவே, பி.பி.டி அல்லாத ஹேர் கலரைத் தேர்வுசெய்வது நல்லது. பிரவுன், பர்கண்டியில் பி.பி.டி இல்லை என்பதால், அவற்றைப் பயன்படுத்தலாம். பி.பி.டி மற்றும் ஆக்சிடைசர் சேர்க்கும்போது, தோல் மற்றும் முடியில் சென்சிட்டிவிட்டியை ஏற்படுத்தும். இதனால், சரும அலர்ஜி ஏற்படும்.
தொடர்ச்சியாகப் பயன்படுத்தும்போது முகம், கண், உதடுகளில் வீக்கம், மூச்சுத்திணறல் ஏற்படலாம். டை படும் இடத்தில் மட்டும் வெண்புள்ளிகள் (கான்டாக்ட் லுக்கோடெர்மா) ஏற்படவும் வாய்ப்புள்ளது. சிலருக்கு, சிறுநீரகச் செயல்இழப்புக்கூட ஏற்படலாம். தொடர்ந்து, டை பயன்படுத்துபவர்களுக்கு முடியின் வேர்ப்பரப்பிலும் முகத்திலும் கருமை நிறம் படிந்து, பிக்மென்டேஷன் தோன்றும்.
சரிவிகித ஊட்டச்சத்து மிகுந்த உணவு, நேரம் தவறாத உணவுப் பழக்கம், சரியான கால இடைவெளியில் முடி அலசுதல், இயற்கைமுறையில் தயார்செய்த ஹென்னா பயன்படுத்துவது போன்றவை முடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். செம்பருத்தி பூ, இலை, கரிசலாங்கண்ணி, மருதாணி, வெந்தயம், கறிவேப்பிலையைக் காயவைத்து அரைத்து, 15 நாட்களுக்கு ஒரு முறை தலையில் போட்டு, ஒரு மணி நேரம் ஊறவைத்துக் குளிக்கும்போது, தலைமுடி ஆரோக்கியமானதாக இருக்கும்.