வேஸ்லின் என்று பலராலும் அறிப்பட்ட பெட்ரோலியம் ஜெல்லி பலவாறு பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதிலும் தற்போது கனமழையால் முழங்கால் அளவில் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை தண்ணீர் உள்ளது. அதிலும் இந்த நீரில் வெறும் மழை நீர் மட்டுமின்றி, சாக்கடை நீர் மற்றும் இதர கழிவு நீரும் கலக்கப்பட்டுள்ளதால், பல்வேறு நச்சுமிக்க மோசமான கிருமிகள் நம்மை தாக்க தயாராக இருக்கும்.
குறிப்பாக இந்த நீரால் முதலில் நம் சருமம் தான் அதிக அளவில் பாதிப்பிற்குள்ளாகும். எனவே எக்காலத்திலும் நம் சருமத்திற்கு போதிய பாதுகாப்பை வழங்க வேண்டியது அவசியம். இந்த பாதுகாப்பை பெட்ரோலியம் ஜெல்லி வழங்கும். ஏனெனில் இது மிகவும் அடர்த்தியானது என்பதால், சருமத்திற்கு மேல் ஓர் படலத்தை உருவாக்கிவிடும்.
இங்கு வேஸ்லின் என்னும் பெட்ரோலியம் ஜெல்லியைக் கொண்டு நம் சருமத்தைப் பராமரித்தால் பெறும் நன்மைகள் கொடுக்கப்பட்டுள்ளன.
சேற்றுப்புண்
நீரில் அதிக நேரம் இருந்தால், அதனால் கால்களில் சேற்றுப்புண் வரும். அதிலும் தற்போது முழங்கால் அளவில் நீர் என்பதால், கைகள் மற்றும் கால்களுக்கு தவறாமல் பெட்ரோலியம் ஜெல்லியைத் தடவிக் கொண்டு செல்லுங்கள். இதனால் நீரினால் சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளைத் தடுக்கலாம்.
வறட்சி நீங்கும்
பெட்ரோலியம் ஜெல்லியை கை, கால்களுக்கு தடவிக் கொண்டால், அதனால் சருமத்தில் ஏற்படும் வறட்சி நீங்கும்.
காயங்கள் குணமாகும்
உங்கள் சருமத்தில் காயங்கள் ஏதேனும் இருந்தால், அவ்விடத்தில் பெட்ரோலியம் ஜெல்லியைத் தடவிக் கொள்ளுங்கள். இதனால் அவ்விடத்தில் வறட்சி ஏற்படுவது தடுக்கப்பட்டு, விரைவில் காயங்களும் குணமாகும்.
சரும அரிப்புக்கள்
கைக் குழந்தைகள் வைத்திருப்பவர்கள், குழந்தைகளுக்கு டயப்பர் அணிவிக்கும் முன், அவர்களுக்கு பெட்ரோலியம் ஜெல்லியை தடவி விட்டால், டயப்பர் மூலம் ஏற்படும் அரிப்புக்களைத் தடுக்கலாம். வெள்ள நீரில் இறங்கும் முன் கை, கால்களுக்கு பெட்ரோலியம் ஜெல்லியைத் தடவிக் கொண்டால், கடுமையான நுண்கிருமிகளால் சருமத்தில் சொறி, சிரங்கு ஏற்படுவதைத் தடுக்கலாம்.
தழும்புகள் மறையும்
உங்கள் உடலில் தழும்புகள் இருந்தால், அந்த தழும்புகளை மறைக்க பெட்ரோலியம் ஜெல்லி உதவும். அதற்கு தினமும் பெட்ரோலியம் ஜெல்லியை தழும்புகள் உள்ள இடத்தில் தடவி வர வேண்டும்.