என்னென்ன தேவை?
கேரட் – 1 கப்,
பீன்ஸ் – 1 கப்,
குடை மிளகாய் – 1 கப்,
வெங்காயம் – 2 கப்,
பச்சை மிளகாய் – 2 (அனைத்தையும் பொடியாக நறுக்கவும்)
உரித்து வேக வைத்த பட்டாணி – 1 கப்,
நறுக்கிய சிறு காலிஃப்ளவர் – 1 கப்,
நறுக்கிய வெங்காயத்தாள் – 1 கப், எண்ணெய் அல்லது வெண்ணெய் – தேவையான அளவு,
மிளகுத் தூள் – 1 டீஸ்பூன்,
உப்பு – தேவைக்கு.
ஒயிட் சாஸுக்கு…
வெண்ணெய் – 100 கிராம்,
மைதா – 2 கப்,
பால் – 4 கப்,
உப்பு – தேவைக்கு,
மிளகுத் தூள் – 1 டீஸ்பூன்.
மேலே தூவ…
தக்காளி சாஸ், சில்லி சாஸ், சீஸ் – தேவைக்கு.
எப்படிச் செய்வது?
கேரட், பீன்ஸை குக்கரில் வேக விடவும். கடாயில் எண்ணெய் அல்லது வெண்ணெயைச் சூடாக்கி, வெங்காயம், வெங்காயத்தாள், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, குடை மிளகாய் சேர்க்கவும். வதங்கியவுடன் காலிஃப்ளவர், பட்டாணி, கேரட், பீன்ஸ் எல்லாவற்றையும் சேர்த்து உப்பு, மிளகுத் தூள் சேர்த்து வதக்கவும். ஒயிட் சாஸ்… 100 கிராம் வெண்ணெயை ஒரு கனமான கடாயில் உருக்கவும். நெய்யாக உருகுவதற்கு முன்னாலேயே கொஞ்சம் கொஞ்சமாக மைதாவைப் போட்டு வறுத்தபின் கொஞ்சம் கொஞ்சமாக பாலை விட்டுக் கிளறி உப்பு, மிளகுத் தூள் சேர்த்துக் கைபடாமல் கிளறவும்.
விழுதுப் பதத்தில் இருக்க வேண்டும். தேவையானால் இன்னும் கொஞ்சம் தண்ணீர் விட்டு, தளர்த்தியாக இருக்கும் போதே கீழே இறக்கி வைத்து விடவும். ஒரு கனமான பேக்கிங் டிஷ் (அது கண்ணாடியாகவோ அலுமினியமாகவோ இருக்கலாம்) பாத்திரத்தில் வெண்ணெய் தடவி முதலில் காய்கறிக்கலவையைப் பரத்தவும். அதன் மேல் ஒயிட் சாஸ் கொட்டவும். துருவிய சீஸை மேலே தூவி, தக்காளி சாஸ், சில்லி சாஸையும் மேலே தடவி, 180°Cல் பேக் செய்யவும். சுமார் 20 நிமிடங்கள் கழித்துப் பரிமாறவும்.