தலை முடி பற்றிய ஆய்வுகள் மற்றும் பராமரிப்பு முறைகள் பழங்காலம் முதலே இருந்து வந்துள்ளன. பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மனம் உண்டா இல்லையா என்று திருவிளையாடல் காலத்து கேள்வி நமக்கு இந்த உண்மையை விளக்குகின்றது.
பழங்காலம் முதலே பெண்கள் தலை முடி பராமரிப்பில் புதுப்புது முயற்சிகளை மேற்கொண்டு வந்துள்ளனர். தலை முடி நீளமாக, கருமையாக, அடர்த்தியாக இருக்க அந்த நாளில் பெண்கள் விரும்பினர். ஆனால் இன்றைய பெண்கள் அவர்களின் அவசர யுகத்திற்கு ஏற்ற முறையில், சீவி சிக்கெடுத்து முடியை பராமரிக்க நேரமில்லாமல், ஷாட் ஹேர், ஸ்ட்ரைட் ஹேர் என்று வைத்துக் கொள்ள விரும்புகின்றனர்.
குறிப்பாக ஹேர் ஸ்டாய்ட்டெனிங் செய்வதை இன்றைய இளம் பெண்கள் மட்டும் அல்ல அலுவலகத்திற்கு போகும் பெண்களும் அதிகம் விரும்புகின்றனர். இதனை அழகு நிலையத்திற்கு சென்று செய்து கொள்ளும்போது, பல வித பக்க விளைவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு. இரசாயன சேர்க்கை, அதிகமான வெப்பம் போன்றவை இவ்வித விளைவுகளை ஏற்படுத்துகின்றன.
அதுபோல் தலை முடியை நேராக்குவதற்காக கடைகளில் விற்கும் அயர்னிங்க் கருவியயை வாங்கி பலரும் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். அது உடனடியாக கூந்தலை நேராக மாற்றும்.
ஆனால் அவை தரும் அதிக வெப்பம் கூந்தலை சேதப்படுத்துவதோடு, நாளைடவில் சொட்டையையும் உண்டாக்கிவிடும். கூந்தல் அடர்த்தி குறைந்து எலிவால் மாதிரி உங்கள் கூந்தல் ஆகாமல் இருக்க நீங்கள் வருமுன் காப்போம் முயற்சியை எடுப்பதே சிறந்தது.
இதனை தடுப்பதன் பொருட்டு வீட்டிலேயே ஹேர் ஸ்டைர்ட்டனிங் செய்வதற்கான ஜெல்லை தயாரிக்கலாம். இது விலை குறைவான தயாரிப்பாகவும் முழுக்க முழுக்க ஆரோக்யமாகவும் இயற்கையாகவும் இருக்கிறது.
வீட்டில் தயாரிக்கப்படும் ஸ்ட்ரெய்ட்டெனிங் ஜெல், வைட்டமின், புரதம், மினெரல் மற்றும் ஆரோக்கியமான ஊட்டச்சத்துகளை கொண்டு தயாரிக்கப்படுவதால் ஆரோக்கியமான முடி வளர்ச்சி மற்றும் பளபளப்பான நேரான முடியும் கிடைக்கிறது
அழகு நிலையத்தில் செய்யும் ஸ்டைரெனிங் போல் வெகுசீராக இல்லாவிட்டாலும், ஓரளவுக்கு நல்ல தீர்வை தருகிறது. இந்த தயாரிப்பை தொடர்ந்து பயன்படுத்தும்போது அடர்த்தியான, மென்மையான நேரான முடியை பெறுவதற்கான வாய்ப்புகள் உண்டு.
ஹேர் ஸ்டாரிட்டனிங் ஜெல் செய்யும் முறையை இப்போது பார்க்கலாம். என்ன ரெடியா இருக்கீங்களா?
மூலப்பொருட்கள்: ஆளி விதைகள் கற்றாழை ஜெல் விளக்கெண்ணெய் எலுமிச்சை சாறு தேன்
செய்முறை: 1 கப் தண்ணீர் எடுத்து அடுப்பில் கொதிக்க வைக்கவும். அதில் 3 ஸ்பூன் ஆளி விதைகளை போடவும். 2 நிமிடங்கள் நன்றாக கொதிக்க வைக்கவும். அதனை அடுப்பில் இருந்து இறக்கி ஆற வைக்கவும். மற்ற மூல பொருட்களை இப்போது இதில் சேர்க்கவும். எல்லாவற்றையும் நன்றாக கலக்கவும். இப்போது ஹேர் ஸ்ட்ரெய்ட்டெனிங் செய்ய ஜெல் தயார்.
தடவும் முறை: தலை முடியை சிறு சிறு பகுதிகளாக பிரித்து கொள்ளவும். வெந்நீரால் தலையை லேசாக நனைத்துக் கொள்ளவும். இதனால் வேர்க்கால்கள் திறக்கப்படும். சிறிய அளவு ஜெல்லை எடுத்து ஈரமான முடியில் தடவவும். முடியின் வேர்க்கால்களில் இருந்து நுனி வரை எல்லா பகுதிகளிலும் இந்த ஜெல்லை தடவவும். உங்கள் விரல்களை கொண்டு முடியை நன்றாக கீழ் நோக்கி இழுத்து விடவும். 30 நிமிடங்கள் காத்திருக்கவும். 30 நிமிடத்திற்கு பிறகு குளிர்ந்த நீரால் தலையை அலசவும். பிறகு மிதமான கண்டிஷனர் பயன்படுத்தவும்.
துண்டு கொண்டு தலையை துவட்டி காய வைக்க வேண்டாம். சீப்பால் ஒரு முறை நேராக சீவி, அப்படியே காய விடவும். இப்போது உங்கள் முடி, அழகாக, மென்மையாக நேராக தோன்றும். இதனை வாரம் ஒருமுறை செய்தால் உங்கள் கூந்தல் ஆரோக்கியமும் அதிகரிக்கும். பொடுகு, அரிப்பு, வறட்சி , எண்ணெய் பிசுபிசுப்பு போன்றவைதான் உங்கள் கூந்தல் வளர்ச்சியையும் அடர்த்தியையும் பாதிப்பவை. இந்த பாதிப்புகளையும் இந்த ஜெல் சரி செய்து, கூந்தலுக்கான அழகையும் தருகின்றது.
முட்டை : விருப்பமிருந்தால் இந்த ஜெல்லுடன் முட்டையின் வெள்ளைக் கருவும் சேர்த்துக் கொள்ளலாம். இதனால் இன்னும் மினுமினுப்பு உங்கள் கூந்தலுக்கு கிடைக்கும். அதனோடு, கூந்தலின் நேர்த்தன்மை நீண்ட நாட்களுக்கு இருக்கும். இது கண்டிஷனராக செயல்படுவதால் கூந்தலை வெளிப்புற பாதிப்பிலிருந்து காப்பாற்றும்.
எப்படி வேலை செய்கிறது? ஆளி விதையின் சாறு இதற்கு பயன்படுகிறது. இது ஆரோக்கியமான மற்றும் மென்மையான முடி வளர்ச்சிக்கு உதவுகிறது. ஆளி விதையில் அதிகமான புரத சத்து உள்ளது. வறண்ட முடியை புத்துணர்ச்சி அடையச் செய்யவும் , சேதமடைந்த முடியை மறுசீரமைக்கவும், முடிக்கு மென்மையை தரவும் புரதம் உதவுகிறது .
ஆளி விதையின் நன்மைகள் : ஆளி விதையில் இருக்கும் ஒமேகா 3 அமிலங்கள் மற்றும் வைட்டமின் ஈ சத்து , வேர்க்காலகளை போஷாக்குடன் வைத்து , முடியின் வலிமையை அதிகரிக்கிறது.
எலுமிச்சை சாறு : எலுமிச்சை சாறு பொடுகை போக்கி, முடிக்கு இயற்கையான பளபளப்பை தருகிறது. விளக்கெண்ணெய், வேர்க்கால்கள் உடையாமல் பாதுகாத்து சேதமடைந்த முடியை சீரமைக்கிறது.
தேன் கற்றாழை : தேன் மற்றும் கற்றாழை, முடிக்கு கண்டிஷனராக செயல்படுகின்றன மற்றும் முடியின் நுனி பகுதி வெடிக்காமல் , சுருளாமல் நேராக இருக்க வைக்கிறது. இந்த ஹேர் ஸ்ட்ரெய்ட்டெனிங் ஜெல்லை ஒரு மாதம் தொடர்ந்து பயன்படுத்தினால் உங்கள் முடி மென்மையாகவும் நேராகவும் விரைவில் மாறும். இயற்கையான மருத்துவம் என்றும் நமக்கு பாதகங்கள் தராது. அவை உடனே நமக்கு நன்மைகளை தந்துவிடும் என நினைப்பது தவறு. மெதுவாய் அவை பலனளித்தாலும், நிரந்தரமான தீர்வுகளை அளிக்கும். ஆகவே ரசாயனம் மிகுந்த க்ரீம் மற்றும் கருவிகளை பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு, இயற்கையை தேடுங்கள். நல்ல பலன்களை தரும்.