ஹோட்டல்களில் கிடைக்கும் சில வகை உணவுப் பொருட்களை வீட்டிலேயே செய்யலாம். அந்த வகையில் சிக்கன் ஷவர்மாவை வீட்டிலேயே செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
எலும்பில்லா சிக்கன் துண்டுகள் – 10
மைதா – ஒரு கப்
வெங்காயம் – ஒன்று
முட்டைகோஸ் – ஒரு கப்
மயோனீஸ் – ஒரு கப்
மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்
சீரகத்தூள் – அரை டீஸ்பூன்
கரம் மசாலா – அரை டீஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்
எலுமிச்சைசாறு – ஒரு டேபிள் ஸ்பூன்
சர்க்கரை – கால் டீஸ்பூன்
தயிர் – 2 டீஸ்பூன் எண்ணெய், உப்பு – தேவையான அளவு
செய்முறை
வெங்காயம், முட்டைகோஸை பொடியாக நறுக்கி கொள்ளவும். ஒரு கிண்ணத்தில் மைதா மாவு, உப்பு, சர்க்கரை, தயிர், எண்ணெய், கொஞ்சம் தண்ணீர் சேர்த்து நன்றாக பிசைந்து சப்பாத்தி மாவு பதத்திற்கு தயார் செய்துக் கொள்ளவும்.
இதனை, ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். மற்றொரு பாத்திரத்தில், சிக்கன் துண்டுகள், மிளகாய்த்தூள், சீரகத்தூள், கரம் மசாலா, தயிர், இஞ்சி பூண்டு விழுது, எலுமிச்சை சாறு, உப்பு சேர்த்து நன்றாக கலந்து சுமார் 45 நிவீடங்கள் ஊற வைக்கவும். தற்போது, மாவை உருட்டி, திரட்டி எடுத்து சப்பாத்தி போல் சுட்டுக் கொள்ளவும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய்விட்டு சூடானதும் சிக்கன் துண்டுகளை சேர்த்து வேக வைத்து வறுத்தெடுக்கவும். சிக்கன் நன்றாக வேகும்வரை பிரட்டிக் கொண்டே இருக்கவும்.
சிக்கன் வெந்ததும் ஆறவைத்து, சிறிய துண்டுகளாக பீய்த்துக் கொள்ளவும். ஒரு தட்டில் ரொட்டியை வைத்து அதன் மீது மயோனீஸ் தடவி, அதன் நடுவில் சிறிதளவு சிக்கனை வைக்கவும். பின்னர் அதன்மீது, பொடியாக நறுக்கிய வெங்காயம், முட்டைகோஸ் வைத்து ரோல் செய்யவும். அவ்ளோதாங்க.. சுவையான சிக்கன் ஷவர்மா ரெடி..!.