வார நாட்களில் வேலை பரபரப்பால் தினமும் அவசர சமையல்தான் பலர் வீடுகளில். இதோ… வாய்க்கு ருசியாக சாப்பிட வந்துவிட்டது வீக் எண்ட். விடுமுறை நாட்களில் குடும்பத்துடன் சேர்ந்து சுவைக்க, அசத்தலான ‘லெமன் ஃபிஷ் ஃப்ரை’ அசைவ ரெசிப்பியை வழங்குகிறார், கோவை ரத்தினவேல் சுப்ரமணியம் கல்லூரியின் கேட்டரிங் துறைத் தலைவர் மற்றும் பேராசிரியரான ஜெயலஷ்மி.
தேவையானவை:
மீன் துண்டுகள் – அரை கிலோ
பொடியாக நறுக்கிய சின்னவெங்காயம் – 50 கிராம்
இஞ்சி-பூண்டு விழுது – ஒன்றரை டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் – அரை டீஸ்பூன்
எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன்
கரம் மசாலாத்தூள் – அரை டீஸ்பூன்
மிளகுத்தூள் – அரை டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கறிவேப்பிலை – சிறிதளவு
மீனை ஊற வைப்பதற்கு:
எலுமிச்சைச் சாறு – அரை டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்
செய்முறை:
மீனை நன்றாகக் கழுவி சுத்தம் செய்து அதிலிருக்கும் நீரை வைத்துக்கொள்ளவும். மீனை ஊற வைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை கலந்து அதனுடன் மீன் துண்டுகளைச் சேர்த்து நன்கு பிரட்டி 15 நிமிடங்கள் ஊறவிடவும்.
அடுப்பில் அடிகனமான பரந்த பேனை வைத்து அதில் எண்ணெய் சேர்த்து சூடானதும் நறுக்கிய சின்ன வெங்காயம், நறுக்கிய பச்சைமிளகாய், இஞ்சி-பூண்டு விழுது, கறிவேப்பிலை சேர்த்து பச்சை வாசனை போகும்வரை நன்றாக வதக்கவும். அதனுடன் மிளகுத்தூள், கரம் மசாலாத்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கலக்கிவிட்டு, கலவையை பேனில் சமமாக பரப்பி அதன் மேல் மீன் துண்டுகளை வைத்து சிறு தீயில் வேக விடவும். மீன் ஒரு புறம் வெந்தவுடன் திருப்பிப் போட்டு மறுபுறமும் வேக விட்டு இறக்கவும். மீனுடன் மசாலாக் கலவையும் சேர்த்து சூடாகப் பரிமாறவும்.
லெமன் ஃபிஷ் ஃப்ரை, சாதத்துடன் சாப்பிட சுவையான சைடு டிஷ்.