ஆர்கானிக் ஆடைகள் என்பதில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவருமான ஆடைகள் உற்பத்தி செய்யப்படுகிறது.
ரசாயன கலப்பின்றி உருவாகும் ஆர்கானிக் ஆடைகள்
ஆடைகள் என்பது மனிதனின் ஓர் இன்றியமையாத தேவையாக உள்ளது. இயற்கையான பொருட்கள் மூலம் பழங்காலத்தில் உருவான ஆடைகள் பிறகு செயற்கை இழைகள், இரசாயன பொருட்களின் ஆதிக்கத்தில் உருவாயின. அதிகளவு ஆடைகள் தேவையை பூர்த்தி செய்ய இந்த செயற்கை இழை மற்றும் இரசாயன பொருட்கள் ஆடைகள் பெரும் உதவி புரிகின்றன.
ஆயினும் இந்த ஆடைகள் நாளடைவில் மனிதனின் சருமப் பகுதிகளில் சில மாற்றங்களை ஏற்படுத்தின. அத்துடன் செயற்கை இழை மற்றும் இரசாயன பொருட்களின் மூலம் உருவாகும் ஆடைகள் மூலம் அதிகளவு சுற்றுச்சூழல் மாசும் ஏற்பட்டன. எனவே ஆடை தயாரிப்பாளர்கள் இரசாயன முறையில் ஆடை தயாரிப்பு என்பதை படிப்படியாக குறைத்து இயற்கையோடு இணைந்த ஆர்கானிக் ஆடைகள் உற்பத்தியை அதிகரிக்கச் செய்தனர்.
உலகளவில் ஆர்கானிக் ஆடைகள் தயரிப்பாளர்கள் தனி அமைப்பு ஒன்றை உருவாக்கி அதன் மூலம் தங்கள் ஆடைகளின் தரம், உறுதி, உருவாக்கம் போன்றவற்றை நிர்ணயம் செய்து ஆடை தயாரிப்பை மேற்கொள்கின்றனர். ஆர்கானிக் ஆடைகள் என்பவை ஆடை உருவாக்கத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் இரசாயன முறையான செயல்பாடுகள் ஏதுமின்றி முற்றிலும் இயற்கை சார்ந்த பொருட்களை கொண்டு உருவாக்குவது. இப்படி உருவாக்கப்படும் ஆடைகள் சற்று விலை அதிகமாகவே என்றால் தாங்கள் உடல் நலன் கருதியும், இயற்கை ஆர்வத்தின் காரணமாய் இதன் பயன்பாடு அதிகரித்துள்ளது.
இயற்கை நூலிழைகளின் ஆதிக்கம் :
இயற்கை நூலிழைகள் என்பது சிறிய பருத்தி நூலிழைகள் பிராதன இடம் பிடிக்கின்றன. இதிலும் குறிப்பாக பருத்தி உற்பத்தி செய்யப்படும் விதம் உட்பட இயற்கை சார்ந்து இருத்தல் கண்காணிக்கப்படுகிறது. இதற்கென பிரத்யேகமான ஆர்கானிக் பருத்தி விளைச்சல் முறை பயன்படுத்தப்பட்டு உருவாக்கப்படும் பருத்திகளை கொண்டு நூலிழைகள் தயாரிக்கப்படுகின்றன.
100 சதவீதம் ஆர்கானிக் விவசாயம் மூலம் பயிர் செய்யப்படும். பருத்தி கூடுதல் சிறப்பு தன்மை கொண்டவை. பருத்தி நூலிழை தவிர்த்து சணல் இழை, லினன், வாழைநார் இழை போன்றவைகள் மூலமும் ஆடைகள் உருவாக்கப்படுகிறது. ஆயினும் இவற்றின் சில சமயம் குறிப்பிட்ட அளவு செயற்கை இழை கலப்பும் நிகழ்ந்து விடும்.
இரசாயன கலப்பில்லாத சாயம் ஏற்றுதல் :
தூய பருத்தி நூலிழைகளில் முழுக்க முழுக்க இரசாயன கலப்பில்லாத சாயம் ஏற்றுதல் முறை கையாளப்படுகிறது. இதற்கென செடிகள், பழங்கள், தழைகள் போன்றவையில் இருந்து வண்ணங்கள் பிரித்தெடுக்கப்பட்டு இயற்கையான முறையில் பருத்தி நூலிழையில் சாயம் ஏற்றப்படுகிறது.
பெரும்பாலும் நூலிழைகளில் சாயம் ஏற்றுதல் முறையில் தான் அதிக இரசாயனம் பயன்படுத்துவதுடன் அதிலிருந்து வெளியேறும் கழிவுநீரின் மூலம் ஆற்றுப் படுகைகளில் சுற்றுச்சூழல் மாசும் ஏற்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு இயற்கை சார்ந்த பொருட்களின் மூலம் சாயம் ஏற்றப்படுதால் சுற்றுச்சூழல் மாசும் குறைகிறது.
அனைவரும் விரும்பும் வகையிலான ஆர்கானிக் ஆடைகள்:
ஆர்கானிக் ஆடைகள் என்பதில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவருமான ஆடைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. பிரத்யேகமான நிறுவனங்கள் மூலம் தயாரிக்கப்படும் இந்த ஆடைகள் தனிப்பட்ட முறையில் முத்திறையிடப்ட்டே விற்பனைச் செய்யப்படுகிறது.
குழந்தைகளின் பெரும்பாலான ஆடைகள் ஆர்கானிக் ஆடைகளாக உருவாக்கி தரப்படுகிறது. காரணம் பிறந்த குழந்தையின் சருமத்தில் இரசாயன ஆடைகள் பட்டு தொந்தரவு தருவதை தவிர்க்கும் விதத்தில் அழகிய வண்ணம் சிறந்த டிசைன் என்றவாறு குழந்தைகளின் ஆர்கானிக் ஆடைகள் உலா வருகின்றன.
ஆண்கள் அணியும் டி- ஷர்ட், சட்டைகள், பணியன் போன்றவை, பெண்கள் அணியும் டி -ஷர்ட், குர்தீஸ், உள்ளாடை போன்றவையும் ஆர்கானிக் முறையில் உருவாக்கி விற்பனைக்கு வருகின்றன. பல இந்திய மற்றும் அயல்நாட்டு நிறுவனங்கள் ஆர்கானிக் ஆடைகள் உற்பத்தி செய்து விற்பனைக்கு தருகின்றன.
இதற்கென பிரத்யேக ஆய்வுகள் மேற்கொள்ளப்ட்டு ஆர்கானிக் ஆடைதான் என சான்றளிக்கப்படுவதால் இதில் கலப்படம் ஏற்பட வாய்ப்புகள் குறைவு. ஆன்-லைன் மூலமாகவும் பல நிறுவனங்கள் ஆர்கானிக் ஆடைகளை விற்பனை செய்து வருகின்றன. உடலுக்கு புத்துணர்வும், சரும பாதுகாப்புத்தரும் ஆர்கானிக் ஆடைகள் அனைவருக்கும் ஏற்றது.