யாழ்ப்பாணத்தில் உள்ள அசைவ உணவுப் பிரியர்கள் வீடுகளில் பொதுவாக புதன்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் கட்டாயமாக அசைவ உணவு சமைப்பார்கள்.
ஆனாலும் பொதுவாக தாங்கள் வணங்கும் தெய்வங்களைப் பொறுத்தும், அத்தெய்வங்களின் திருவிழாக் காலங்களைப் பொறுத்தும் அவர்களின் உணவு முறையில் மாற்றம் உண்டாகும்.
■ மீன் குழம்புக்குத் தேவையான பொருட்கள்
● வெட்டிக் கழுவிய மீன் துண்டுகள் – 500 கிராம்
● உரித்து, கழுவி, வெட்டிய சிறிய வெங்காயம் – 100 கிராம்
● கழுவி, வெட்டிய பச்சை மிளகாய் – 4
● யாழ்ப்பாணத்துத் தூள் – காரத்துக்குத் தேவையான அளவு
● உப்பு – தேவையான அளவு
● பழப்புளிக் கரைசல் – 1 கப்
● தேங்காய்ப்பால் – முதற்பால் 1 கப் – 2 ம் 3ம் பால் ஒவ்வொரு கப்
■ மீன் குழம்பு செய்யும் முறை
ஒரு மண் சட்டியில் கழுவிய மீன் துண்டுகள், வெட்டிய சிறிய வெங்காயம் , பச்சை மிளகாய் போன்றவற்றைப் போடவும். சிலர் கருவேப்பிலையும்போடுவார்கள்.
பழப்புளிக் கரைசல், தேங்காய்ப் பால், தேவையான அளவு உப்பு, யாழ்ப்பாணத்து மிளகாய்த் தூள் ஆகியவற்றைச் சேர்க்கவும்.
சேர்த்த கலவையை நன்றாகக் கலக்கவும். மண் சட்டியை அடுப்பில் மிதமான சூட்டில் வைக்கவும். அதிகம் நெருப்பும் தேவைப்படுவதில்லை.
குழம்பு நன்றாகக் கொதித்து எண்ணெய் பிறந்து வரும்போது நற்சீரகம், மிளகு, உள்ளி ஆகியவற்றை இடித்துப் போடுவார்கள். இதனால் குழம்பு நன்றாக மணக்கும்.
பொதுவாக இவ்வாறே மீன் குழம்பு வைத்தாலும், இடத்துக்கு இடம் சில சில வேறுபாடுகளைக் காணமுடியும்.
மதிய நேரத்திற்கு பிரதான கறியாக மீன் குழம்பு பயன்படுத்தப்படுவதுடன், இரவு தயாரிக்கப்படும் புட்டுக்கும் பொருத்தமான கறியாக மீன் குழம்பு இருக்கும்.
முன்னரெல்லாம் அடுத்த நாள் காலையில் பழஞ்சோற்றுடனும் உண்ணப்படும் கறியாக மீன் குழம்பு பயன்படுத்தப்படும்.
இடியப்பம், புட்டு, பான் மற்றும் ஒடியல் புட்டு போன்ற உணவுகளுக்கு மீன் குழம்பு மிகப் பொருத்தமானதாக இருக்கும்.