தேவையான பொருள்கள்:
புளிக்காத தயிர் – 1 கப்
கடலை மாவு – 1/2 கப்
வெங்காயம் – 1
மிளகாய்த் தூள் – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
பெருங்காயம்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – பொரிக்க
கொத்தமல்லித் தழை
தாளிக்க: எண்ணெய், காய்ந்த மிளகாய், கடுகு, சீரகம், பூண்டு, கறிவேப்பிலை
செய்முறை:
கடலை மாவில், தேவையான உப்பு, மிளகாய்த் தூள் சேர்த்து தண்ணீர் கலந்து பஜ்ஜிமாவு பதத்திற்கு நன்கு கலந்துகொள்ளவும். விரல்களால் நன்கு குழைந்துபோகுமாறு கலக்கவேண்டும்.
வெங்காயத்தை சற்றே அகல நீளத்தில் நறுக்கிக் கொள்ளவும்.
தயிரை ஒரு கப் தண்ணீர் சேர்த்து நன்கு கடைந்து வைத்துக் கொள்ளவும்.
வெங்காயத்தை கடலை மாவில் தோய்த்து எண்ணெயில் பஜ்ஜி மாதிரி பொரித்து எடுக்கவும்.
மிச்சமுள்ள கடலைமாவை(4 டீஸ்பூன் கரைத்த மாவு இருந்தால் போதுமானது.) தயிரில் சேர்க்கவும். கரைத்த மாவு தீர்ந்திருந்தால் தனியாக இரண்டு டீஸ்பூன் கடலை மாவை தயிரில்ல் சேர்த்து நன்கு கட்டிகளில்லாமல் கலந்துகொள்ளவும்.
தயிர்க் கலவையில் தேவையான உப்பு, பெருங்காயம், மஞ்சள் தூள் சேர்த்து, நன்கு கலந்து அடுப்பில் வைத்து 5 நிமிடம் கொதிக்கவைக்கவும். மிகவும் இறுகிவிட்டால் இன்னும் சிறிது நீர் சேர்த்துக் கொள்ளலாம்.
கடலைமாவு வெந்து குழம்பு சேர்ந்தாற்போல் வந்ததும் பொரித்து வைத்துள்ள பக்கோடாவைச் சேர்த்து சிம்மில் மேலும் இரண்டு நிமிடம் கொதிக்கவைத்து அடுப்பிலிருந்து இறக்கவும்.
சிறிது எண்ணெயில் கடுகு, சீரகம், 4, 5 காய்ந்த மிளகாய், உரித்த பூண்டு, கறிவேப்பிலை தாளித்துச் சேர்க்கவும்.
நறுக்கிய கொத்தமல்லித் தழை சேர்க்கவும்.
* மிக அதிக அளவில் ஆறியதும் இறுகும்; பகோடாவும் குழம்பின் நீரை இழுத்துக்கொள்ளும் என்பதால் தயாரிக்கும்போதே சிறிது நீர்க்க இருந்தால் நல்லது.
* வாணலியில் முதலில் தாளித்து, அதில் தயிர்கலவையைச் சேர்த்தும் குழம்பைக் கொதிக்கவைக்கலாம்.
* வெங்காயத்துடன் விரும்பினால் உருளை போன்ற காய்களையும் சேர்த்துக் கொள்ளலாம்.
* மசாலா வாசனை விரும்பினால் கரம் மசாலாத் தூள் ஒரு டீஸ்பூன் பகோடா மாவில் சேர்த்துக் கொள்ளலாம்.