அன்றாடம் முகம் கழுவுவதற்கு நாம் சோப்பைத் தான் பயன்படுத்துவோம். ஆனால் சோப்பைக் கொண்டு அளவுக்கு அதிகமாக முகத்தைக் கழுவினால், சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் வெளியேறி, அதன் காரணமாகவே பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.
எனவே காலங்காலமாக சருமத்தைப் பராமரிக்க நம் முன்னோர்கள் பயன்படுத்தி வந்த ஓர் பொருள் தான் கடலை மாவு. இந்த கடலை மாவைப் பயன்படுத்தி வந்ததால் தான், நம் பாட்டிமார்கள் நீண்ட நாட்கள் இளமையுடன் காட்சியளித்தார்கள்.
மேலும் சோப்பைப் பயன்படுத்தாமல் கடலை மாவைக் கொண்டு தினமும் சருமத்தைப் பராமரித்து வந்தால், ஏராளமான நன்மைகளைப் பெறலாம். சரி, இப்போது கடலை மாவைக் கொண்டு சருமத்தைப் பராமரித்தால் என்ன நன்மைகளைப் பெறலாம் என்று பார்ப்போம்.
வெயிலால் ஏற்பட்ட கருமை
சோப்பைக் கொண்டு முகத்தைக் கழுவி வந்தால், வெயிலால் கருமையான சருமத்தை சரிசெய்ய முடியாது. ஆனால் அதுவே கடலை மாவைப் பயன்படுத்தினால், சருமத்தில் உள்ள கருமை எளிதில் நீங்கிவிடும்.
இறந்த செல்கள் நீங்கும்
கடலை மாவைக் கொண்டு முகத்தை தேய்த்து கழுவினால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் வெளியேற்றப்பட்டு, சருமம் பளிச்சென்று மின்னும்.
வெள்ளையான சருமம்
கடலை மாவில் உள்ள ப்ளீச்சிங் தன்மையால், அதனைக் கொண்டு தினமும் முகத்தைக் கழுவி வர சருமத்தின் நிறம் அதிகரிக்கும்.
பிம்பிளை சரிசெய்யும்
முகப்பருவால் கஷ்டப்படுபவர்கள், கடலை மாவைக் கொண்டு முகத்தைக் கழுவி வர, சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் நீக்கப்பட்டு, பிம்பிள் வருவது தடுக்கப்படும்.
கருவளையங்கள்
பலருக்கும் கண்களைச் சுற்றி கருவளையங்கள் ஏற்படும். இதற்கு முதன்மையான காரணமாக இருப்பது சரியான தூக்கத்தை மேற்கொள்ளாமல் இருப்பது. ஆனால் தினமும் கடலை மாவைக் கொண்டு முகத்தைக் கழுவி வந்தால், கண்களைச் சுற்றியுள்ள கருவளையங்களைப் போக்கலாம்.
கரும்புள்ளிகள்
உங்களுக்கு கரும்புள்ளிகள் அதிகம் இருந்தால், அதனைப் போக்க கடலை மாவு பெரிதும் உதவியாக இருக்கும். எனவே கரும்புள்ளிகளைப் போக்க கண்ட பொருட்களைப் பயன்படுத்தாமல், கடலை மாவைக் கொண்டு அன்றாடம் முகத்தைக் கழுவுங்கள்.
சரும துளைகள் இறுக்கப்படும்
சிலருக்கு முகத்தில் எண்ணெய் அதிகம் வழியும். அத்தகையவர்கள் கடலை மாவைக் கொண்டு முகத்தைக் கழுவி வந்தால், சருமத் துளைகள் இறுக்கப்பட்டு, முகத்தில் எண்ணெய் அதிகம் வழிவது தடுக்கப்படும்.
மென்மையான சருமம்
சிலருக்கு முகத்தில் ஆங்காங்கு தோல் உரிந்து மென்மையின்றி அசிங்கமாக காணப்படும். அதைத் தடுக்க வேண்டுமானால் சோப்பு பயன்படுத்துவதைத் தவிர்த்து, கடலை மாவைக் கொண்டு முகத்தைக் கழுவி வந்தால், சருமம் மென்மையாகும்.
குறிப்பு
கடலை மாவு இயற்கைப் பொருள் என்பதால், எந்த வகையான சருமத்தினரும் இதனைப் பயன்படுத்தலாம். இது 100% சுத்தமானது. எனவே அதிக செலவு செய்து கெமிக்கல் கலந்த சோப்பை வாங்கி பயன்படுத்துவதற்கு பதிலாக, கடலை மாவைப் பயன்படுத்தினால் சரும ஆரோக்கியம் மேம்படும் அல்லவா!