முகப்பொலிவை அதிகரிக்க கடைகளில் விற்கப்படும் கண்ட க்ரீம்களைப் பயன்படுத்தாமல், நற்பதமான பழங்களைக் கொண்டு பராமரித்து வந்தால், சரும செல்களின் ஆரோக்கியம் மேம்படும். அதுவும் நாம் அடிக்கடி வாங்கி சாப்பிடும் பழங்களைக் கொண்டு பராமரித்து வர, சருமத்தில் உள்ள பருக்கள், கரும்புள்ளிகள், தழும்புகள் போன்றவை வேகமாக மறையும்.
இங்கு முகப்பொலிவை அதிகரிக்க உதவும் சில ஃபேஸ் மாஸ்க்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து அவற்றை வார இறுதி நாட்களில் முகத்திற்கு போட்டால், சோர்ந்திருக்கும் முகத்தை பிரகாசமாக்கலாம்.
வாழைப்பழம் வறட்சியான சருமத்தினருக்கு வாழைப்பழம் மிகவும் சிறந்தது. இது சருமம் அதிகம் வறட்சியடைவதைத் தடுக்கும். அதற்கு வாழைப்பழத்தை மசித்து, அத்துடன் சிறிது பால் சேர்த்து கலந்து, சிறிது தேன் மற்றும் 1/2 டீஸ்பூன் கோலின் பவுடர் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி ஊற வைத்து கழுவினால், சரும பொலிவு அதிகரிக்கும்.
ஆரஞ்சு எண்ணெய் பசை சருமத்தினருக்கு ஆரஞ்சு பழம் உகந்தது. அதற்கு 2 டேபிள் ஸ்பூன் ஆரஞ்சு சாற்றுடன் 1 ஸ்பூன் சந்தனப் பவுடர் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் காலமைன் பவுடர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி காய்ந்த பின், குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனால் முகத்தில் இருக்கும் கருமை நீங்கி, முகம் பிரகாசமாக இருக்கும்.
ஆப்பிள் நார்மல் சருமத்தினருக்கு ஆப்பிள் பழம் நல்லது. ஆப்பிள் சருமத்திற்கு உடனடி பொலிவைத் தரும். எனவே ஆப்பிளை அரைத்து, அத்துடன் பால், பால் பவுடர் மற்றும் முல்தானி மெட்டி போன்றவற்றை சேர்த்துக் கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் நீரில் கழுவ வேண்டும். இந்த ஃபேஸ் பேக் சருமத்தின் pH அளவை தக்க வைப்பதோடு, சருமத்தை மென்மையாகவும், அழகாகவும் வைத்துக் கொள்ளும்.
ஸ்ட்ராபெர்ரி காம்பினேஷன் சருமம் உள்ளவர்களுக்கு ஸ்ட்ராபெர்ரி பழம் மிகவும் நல்லது. அதற்கு ஸ்ட்ராபெர்ரி மற்றும் சிறிது புதினாவை ஒன்றாக அரைத்து, அத்துடன் கோலின் பவுடர் மற்றும் தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி நன்கு காய்ந்த பின் கழுவ வேண்டும். இதனால் சருமம் புத்துணர்ச்சியுடனும், இளமையாகவும் இருக்கும்.
இளநீர் இளநீர் சென்சிடிவ் சருமத்தினருக்கு ஏற்றது. இந்த வகையான சருமத்தினர் தங்கள் சருமத்திற்கு எந்த ஒரு பொருளையும் அவ்வளவு எளிதில் பயன்படுத்த முடியாது. ஒருவேளை பயன்படுத்தினால், அது சருமத்தில் அரிப்பையும், எரிச்சலையும் ஏற்படுத்தும். ஆகவே 1 டேபிள் ஸ்பூன் இளநீரில், 2 டேபிள் ஸ்பூன் காலமைன் பவுடர் மற்றும் கற்றாழை ஜெல் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 5-7 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும். இச்செயலை ஒருநாள் விட்டு ஒருநாள் செய்து வந்தால், நல்ல மாற்றத்தை விரைவில் காணலாம்.