நிறைய பேருக்கு தங்களை அழகுப் படுத்திக் கொள்ள மணிக்கணக்காய் நேரம் எடுத்துக் கொள்வது பிடிக்காது. அதே போல் அதிக நேரம் படித்து தெரிந்து கொள்வதையும் விரும்ப மாட்டார்கள். அவர்களுக்கென்றே இந்த குறிப்புகள்.
இயற்கை கொடுத்த வரப் பிரசாதமான நம் வீட்டுப் பொருட்களைக் கொண்டு எப்படி அழகு படுத்திக் கொள்ளலாம் என பார்ப்போம்.
வாழைப்பழம் : வாழைப்பழத்தை மசித்து பால் கலந்து முகத்தில் பூசி, சில நிமிடங்கள் கழித்து தண்ணீரால் கழுவினால், முகம் பொலிவுடன் காணப்படும்.
கோதுமை தவிடு : கோதுமை தவிடுடன் பால் கலந்து முகத்தில் தேய்த்தால், சிறிது நாட்களில் கரும்புள்ளிகள் மறைந்து விடும். முகத்திற்கு பளபளப்பு தரும். இது அருமையான இயற்கை ஸ்க்ரப்.
வெள்ளரிப் பிஞ்சு: இதன் சாற்றை எடுத்து முகத்தில் தடவி 10 நிமிடங்கள் கழித்து சற்று சூடான நீரில் முகத்தை கழுவினால் முகம் பொலிவு பெறும்.
மோர் : இது குடிப்பதற்கு மட்டுமல்ல, குளிப்பதற்கு முன்பு முகத்திலும் உடம்பிலும் தடவி 5 நிமிடம் கழித்து குளித்தால் உங்கள் சருமம் அழுக்குகள் நீங்கி, மென்மையாகும்.
ஆப்பிள் : ஆப்பிள் பழத்துண்டுகளை தோல் நீக்கி ஒரு கப் பாலில் போட்டு நன்றாக கொதிக்க வைக்கவும். நன்றாக கொதித்ததும் அது தயிர் போன்று மாறும்.
அதை நன்றாக ஆற விட்டு பிறகு அதை முகத்தில் பூசி 20 நிமிடங்கள் ஊறவிட்டு பின் கழுவிவிடுங்கள். முகம் பளபளப்பாக சுருக்கங்கள் இல்லாமல் இருக்கும்.
வெந்தயம் : இரவில் வெந்தயத்தை ஊற வைத்து , மறு நாள் அரைத்து அதனை தலையில் தடவி 15 நிமிடங்கள் விட்டு பின் அலச வேண்டும். வாரம் 3 முறை தொடர்ந்து 2 வாரங்கள் செய்து வந்தால் ஒரே மாதத்தில் முடி அடர்த்தி அதிகமாவதை கண்கூடாக காண்பீர்கள்.
ஊற வைத்த வெந்தயத்தை அரைத்து சீகைக்காயுடன் கலந்து ஷாம்பு போல உபயோகிக்கலாம்.
விளக்கெண்ணெய் : கை, கால்களில் விளக்கெண்ணெய் தடவினால் வெடிப்பு ஏற்படுவதை தவிர்க்கலாம். இதை புருவத்திலும், கண் இமையில் உள்ள முடியிலும் தினமும் படுப்பதற்கு முன் தடவி வந்தால் அது அடர்த்தியாகும்.
பயித்தம் பருப்பு : கடலை மாவையும் பயத்தம் பருப்பு மாவையும் கலந்து சோப்புக்கு பதிலாக உபயோகித்து வந்தால், உங்கள் சருமம் வறண்டு தவிர்க்கலாம்.
தேங்காய் எண்ணெய் : இதை முடியில் தடவுவது பல்லாண்டு காலமாக தொடர்ந்து வரும் பழக்கம். இதை வாரம் ஒருமுறை உடலில் நன்றாகத் தேய்த்து, அதன் பின் குளித்தால் பட்டுப் போன்ற மென்மை தரும்.
கஸ்தூரி மஞ்சள் : கஸ்தூரி மஞ்சளை இரவு முகத்தில் பூசி கழுவினால் முகப்பரு என்ற பேச்சுக்கே இடம் அளிக்காது.
முகத்தில் முடி இருந்தால், இரவில் கஸ்தூரி மஞ்சளை பூசி மறு நாள் காலையில் கழுவினால் முடி வளர்வதை தடுக்கலாம். மஞ்சளை பூசி வெய்யிலில் செல்லக் கூடது. முகம் கருமை அடையும்.
எலுமிச்சம் பழம் : எலுமிச்சம் பழச் சாற்றை தேனுடன் கலந்து முகத்தில் தடவினால் முகத்தில் கருமை போகும்.
எலுமிச்சம் பழச் சாற்றுடன் முட்டையின் வெள்ளைக் கருவை நன்றாக அடித்து முகத்தில் தடவினால், முகத்தில் சுருக்கங்கள் ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.
வறண்ட சருமம் உள்ளவர்கள் இவற்றுள் சிறிது தேங்காய் எண்ணெய் சேர்த்து உபயோகிக்கவும்.
பொடுகு நீங்க : இரண்டு ஸ்பூன் வினிகருடன் கடலைமாவைக் குழைத்து 15 நிமிடங்கள் ஊறவைக்கவும். இதை நன்றாக மயிர் கால்களில் படும்படித் தடவி அரைமணி நேரம் ஊறிய பிறகு அலசி விடவும். பொடுகுத் தொல்லை இருக்காது.