மதுரை மாவட்டம் சமயநல்லூரைச் சேர்ந்தவர் பழனிக்குமார். இவர் கடந்த 2016ம் ஆண்டு காவல்துறை பணியில் சேர்ந்தார். ஆயுதப்படையில் மோட்டார் வாகன பிரிவில் பணிபுரிந்து விட்டு, கடந்த 5 மாதங்களுக்கு முன்பு சென்னை மாதவரம் பால்பண்ணை காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு பிரிவில் பணிபுரிந்து, பின்பு குற்றப்பிரிவு ஆய்வாளரின் ஓட்டுநராக பணிபுரிந்தார். இந்நிலையில், காவலர் பழனிக்குமார் 17 வயது சிறுமியை திருமணம் செய்துக்கொண்டதாக மாவட்ட சமூக நல அலுவலர்கள் மூலமாக அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு புகார் வந்துள்ளது.
இதையடுத்து இந்த திருமணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில், பழனிக்குமார் விடுப்பு எடுத்துவிட்டு திடீரென்று கடந்த மாதம் அவரது சொந்த ஊருக்குச் சென்றது தெரியவந்தது. ஊருக்கு சென்ற அவரிடம் அவரது பெற்றோர்கள், அத்தை மகளான 17 வயது சிறுமி அதே பகுதியைச் சேர்ந்த ஒருவரை காதலித்து வருவதாக கூறியுள்ளனர். மேலும் அவரிடம் நமது குடும்ப கௌரவத்தை காப்பாற்றுவதற்காக சிறுமியை உடனடியாக திருமணம் செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளனர்.
அதற்கு பழனிக்குமாரும் எந்த மறுப்பும் தெரிவிக்காமல், அத்தை மகளாக இருந்தாலும் அவருக்கு விருப்பம் இருக்கிறதா இல்லையா என்பதை கூட கேட்காமல் கட்டாய திருமணம் செய்துகொண்டது தெரிய வந்தது. பின்னர் போலீசார் பழனிக்குமார் மீது போக்சோ சட்டம் பதிவு செய்து கைது செய்தனர்.
news7tamil