ஆயில் மசாஜ் செய்தால் கூந்தல் வளருமா?
கூந்தல் வளர்ச்சிக்கும் எண்ணெய்க்கும் எந்த வகையிலும் சம்பந்தமில்லை. எண்ணெய் தடவுவதாலோ, விதம் விதமான எண்ணெய் தடவுவதாலோ கூந்தல் வளர்ச்சி அதிகரிக்கும் எனப் பலரும் தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். எண்ணெய் எந்த விதத்திலும் கூந்தல் ஆரோக்கியத்துக்கு உதவுவதில்லை. எந்த
எண்ணெயும் கூந்தலை வளரச் செய்யாது. எண்ணெய் தடவுவதன் மூலம் மண்டைப் பகுதியில் ஒருவித வழுவழுப்புத் தன்மை ஏற்படும். சிறிது நேரத்துக்கு கூந்தலை மென்மையாக வைக்கும் அவ்வளவுதான். ஆயில் மசாஜ் செய்யும் போது நீங்கள் ரிலாக்ஸ்டாக உணர்வீர்கள். அந்த எண்ணெய் உங்கள் மண்டைப் பகுதிக்குள் இறங்கி வேலை செய்வதாக நினைப்பீர்கள். உண்மையில் எண்ணெய் என்பது மண்டைக்குள் இறங்காது. அது ஒருவித வெளிப்பூச்சு. அவ்வளவே!
ஆயில் மசாஜ் செய்ததும் கட்டாயம் தலைக்குக் குளிக்க வேண்டும். அதனால் மசாஜ் செய்த எண்ணெய் தவிர, மண்டைப் பகுதியில் இயற்கையாக உள்ள எண்ணெய் பசையும் சேர்ந்து போவதால், கூந்தல் இன்னும் அதிகம் வறண்டுதான் போகும். கூந்தல் வளர்ச்சி என்பது எண்ணெய், ஷாம்பு போன்ற வெளிப்புற சிகிச்சைகளால் தீர்மானிக்கப்படுவதில்லை. அது உள்ளே போகிற ஊட்டத்தைப் பொறுத்தது.