பெண்கள் தாங்கள் அணியும் ஒவ்வொரு உடையும் தங்களுக்கு தன்னம்பிக்கையையும், மற்றவர்களிடம் இருந்து பாராட்டுக்களையும் பெற்றுத்தரவேண்டும் என்று விரும்பினார்கள்.
பெண்களின் மாறிவரும் ‘பேஷன்’ உலகம்
பெண்கள் தாங்கள் அணியும் ஒவ்வொரு உடையும் தங்களுக்கு தன்னம்பிக்கையையும், மற்றவர்களிடம் இருந்து பாராட்டுக்களையும் பெற்றுத்தரவேண்டும் என்று விரும்பினார்கள். இப்போது கூடுதலாக, ‘நீ எப்படி இவ்வளவு பேஷனாக மாறிவிட்டாய். உன்னிடமிருந்துதான் நாங்கள் பேஷனை கற்றுக்கொள்கிறோம்’ என்றும் தங்களை புகழ்ந்துரைக்க வேண்டும் என்றும் எதிர்பார்க்கிறார்கள்.
அந்த புகழுக்கு ஆசைப்படும் பெண்களின் சிந்தனையில் எப்போதும் புதுமை நிறைந்த நவீன உடைகளுக்கான தேடுதல் இருந்துகொண்டே இருக்கிறது. தங்கள் புதிய உடை எப்படி எல்லாம் இருக்கவேண்டும் என்று கலர்கலராக கனவுகள் கண்டபடியே இருந்துகொண்டிருக்கிறார்கள். அவர்களது கனவுகளை நனவாக்கும் விதத்தில் புதிய டிசைன் உடைகளும் வந்தபடி இருக்கின்றன.
டீன்ஏஜ் பெண்களை அதிகம் கவர்ந்த புதிய வரவாக இருப்பது ‘கராச்சி ஸ்டைல்’ உடை! டபுள் லேயர் புல் லென்த் கொண்ட கராச்சி குர்தா பல வண்ணங்களில் கிடைக்கிறது. இது எல்லா நிகழ்ச்சிகளுக்கும் பொருந்தும் விதத்தில் இருப்பதால், பெரும்பாலான பெண்கள் இதனை விரும்புகிறார்கள். பிரண்ட் ஸ்லீட், சைடு லேஸ், காளர் நெக் போன்ற பல்வேறு டிசைன்களில் இவை கிடைக்கின்றன. இரண்டு அடுக்குகளை கொண்டதாக இந்த உடை இருப்பதால், இதனை அணியும்போது துப்பட்டா தேவையில்லை.
“இது எங்களுக்கு அதிக அழகு தருகிறது. உயரம் அதிகமாக உள்ளவர்களுக்கும் பொருத்தமாக இருக்கிறது. துப்பட்டா போட வேண்டாம் என்பதால் அதன் மீதான கவனம் தேவையில்லை. இதற்கு பொருத்தமான காலணிகளை அணிந்தால் கூடுதல் அழகு கிடைக்கும்” என்கிறார்கள், கல்லூரி மாணவிகள்.
டீன்ஏஜ் பெண்களின் விருப்பமான காலணி பட்டியலில் புதிதாக சேர்ந்திருப்பது, ‘ஆர்னமென்டல் ப்ளாட் செருப்பு’. பிளாட்பார்ம் ஹீல்ஸ், ஹை ஹீல்ஸ் அணிந்து வலம் வந்த பெண்கள்கூட இப்போது இந்த தட்டை செருப்புகளை அணிந்து ஸ்டைலாக வலம் வருகிறார்கள். இவைகளில் பாரம்பரிய ஆபரண அலங்காரம் செய்யப்பட்டிருக்கிறது. அதோடு மேற்கத்திய பாணி அலங்காரமும் இதில் இடம்பெற்றிருக்கிறது.
அதனால்தான் பெண்கள் இதற்கு அதிக முக்கியத்துவம் தருகிறார்கள். எல்லா மாதிரியான உடைகளுக்கும் இந்த காலணிகள் பொருந்தும் என்பதால் பெண்களுக்கு இதன் மீதான பிரியம் அதிகரித்திருக்கிறது. இளம் பெண்களை இப்போது ‘எத்னிக் கவுன்’களும் ஈர்க்கின்றன. மேற்கத்திய உடையான கவுனை பலரும் எத்னிக் டிசைன்களிலும் அணிய விரும்புகிறார்கள்.
வழக்கமான பாப்ரிக்களிலும் நமது பாரம்பரிய ‘ஹேன்ட் ஒர்க்’ வேலைப்பாடுகளுடனும் வடிவமைக்கப்படும் இந்த உடை, இந்திய ஆடைகளுக்கான சாயலை பெற்றுவிட்டது. தேசி மெட்ரீயலை கொண்ட நவீன ஆடையில் வலம் வர விரும்புகிறவர்களுக்கு எத்னிக் கவுன் ரொம்ப பிடிக்கும். இதனை விருந்து நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும்போது பெண்கள் அதிகம் அணிய ஆசைப்படுகிறார்கள்.
“இந்த மேற்கத்திய சாயல் கவுன் பார்ட்டிகளுக்கு ஏற்றதாக இருக்கிறது. உடலை முழுவதுமாக மூடியிருப்பதால், பார்ட்டிகளில் நடனம் ஆடவும் வசதியாக உள்ளது. நாம் நடனம் ஆடும்போது இந்த கவுனும் அசைந்து ஆடி அழகு சேர்த்து, பலரையும் நம் பக்கமாக திரும்பிப் பார்க்கவைக்கும்” என்கிறார்கள், எத்னிக் கவுன் அணிந்து பார்ட்டிகளில் பங்கேற்கும் பெண்கள்.