அந்த காலத்தில் மேனி அழகைப் பராமரிக்க நமது பாட்டிகள் மூலிகைகள் கலந்த குளியல் பொடியை தயார் செய்து உபயோகித்தனர்.
இதனால்தான் அவர்களுக்கு சருமம் வயதானாலும் மெருகு குறையாமல் இருப்பதற்கு காரணம். அவைகள் எல்லாவித சரும அலர்ஜிகளை போக்கி, சருமத்தை அழகாக்கின்றன. பொலிவை தருகின்றன.
இது போன்ற பாட்டி குறிப்புகளை நாம் பின்பற்றினால் இந்த மாசுபட்ட சுற்று சூழ் நிலைகளால எவ்வித பாதிப்பும் இல்லாமல் உங்கள் சருமத்தை பாதுகாக்கலாம்.
நாம் உபயோகிக்கும் க்ரீம் மற்றும் மற்ற அழகு சாதனங்களால் லட்சக்கணக்கான செல்கள் பாதிப்படைகின்றன. இவை சரும பாதிப்புகளை தருவதோடு, விரைவில் முதுமையான தோற்றம் பெற காரணங்களாகின்றன.
இந்த மூலிகை குளியல் பொடி சருமத்தில் தங்கியிருக்கும் நச்சுக்களையும் ரசாயனங்களையும் அகற்றி, பாதிப்படைந்த சருமத்தை சீர் செய்கின்றன. பாட்டி சொல்லும் மூலிகை குளியல் பொடியை எப்படி செய்வது எனப் பார்க்கலாம்.
தேவையானவை : கஸ்தூரி மஞ்சள் பொடி – அரை கப் அளவு சந்தனப் பொடி – கால் கப் கடலை மாவு – அரை கப் பச்சைப் பயிறு பொடி – 1 கப் வேப்பிலை பொடி -அரை கப்
கஸ்தூரி மஞ்சள் மற்றும் பச்சைப் பயிறு மற்றும் வேப்பிலையை வெயிலில் காய வைத்து பொடி செய்து கொள்ளுங்கள். இவற்றுடன் கடலை மாவு மற்றும் சந்தனத்தை கலந்து ஒரு பாட்டிலில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
இதனை 2 ஸ்பூன் எடுத்து அவற்றுடன் ரோஸ் வாட்டர் மற்றும் சிறிது பால் கலந்து முகத்தில் மற்றும் கை, கழுத்து ஆகிய பகுதிகளில் தேய்த்து 5 நிமிடங்கள் கழித்து கழுவுங்கள்.
இதனை குளியல் பொடியாகவும் பயன்படுத்தலாம். குளிக்கும்போது சோப்பிற்கு பதிலாக இதனை உபயோகிங்கள். பிறந்த குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. அவர்களின் மென்மையான சருமத்திற்கு ஏற்ற வகையில் இவை பாதுகாக்கும்.
பெரியவர்களுக்கு சுருக்கங்களை போக்கும். சரும வியாதிகளை குணப்படுத்தும். முகப்பருக்களை வரவிடாது. கருமையை போக்கும். தொடர்ந்து உபயோகித்தால் நல்ல மாற்றங்களை உணர்வீர்கள்.