பலருக்கும் மீனை எப்படி சமைத்து சாப்பிடுவதென்று தெரியாது. அப்படியே தெரிந்தாலும் சுவையாக சமைக்க தெரியாது. அதிலும் குட்டியாக இருக்கும் நெத்திலி மீனை பலரும் குழம்பு தான் செய்து சுவைத்திருப்பார்கள். ஆனால் அதனை தொக்கு செய்தால், இன்னும் சுவையாக இருக்கும் என்பது தெரியாது.
உங்களுக்கு நெத்திலி மீன் தொக்கு எப்படி செய்வதென்று தெரியாவிட்டால் தொடர்ந்து படியுங்கள். ஏனெனில் இங்கு நெத்திலி மீன் தொக்கின் செய்முறை தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து இந்த விடுமுறையன்று செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
நெத்திலி மீன் – 300 கிராம்
எண்ணெய் – 1/4 கப் + 1/4 கப்
வெந்தயம் – 1 டீஸ்பூன்
பூண்டு – 2 பற்கள் (பொடியாக நறுக்கியது)
மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்
மல்லித் தூள் – 1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
புளிச்சாறு – 4 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை – 1 கைப்பிடி
அரைப்பதற்கு…
சின்ன வெங்காயம் – 20 (தோலுரித்தது)
தக்காளி – 2 (பெரியதாக நறுக்கியது)
பூண்டு – 10 பற்கள்
மிளகு – 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 2
செய்முறை: முதலில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு நன்கு மென்மையாக அரைத்து, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின் நெத்திலி மீனை நன்கு சுத்தம் செய்து கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1/4 கப் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெந்தயம், பூண்டு சேர்த்து வதக்கி, பின் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து 2 நிமிடம் வதக்க வேண்டும். பின்பு அதில் தேவையான அளவு உப்பு மற்றும் மசாலாப் பொருட்கள் அனைத்தையும் சேர்த்து நன்கு 2 நிமிடம் கிளறி, எண்ணெய் தனியாக பிரியும் வரை வதக்க வேண்டும். பிறகு அதில் புளிச்சாற்றினை ஊற்றி கிளறி, குழம்பானது மசாலா போன்று சற்று கெட்டியாக வரும் போது, அதில் நெத்திலி மீனை சேர்த்து பிரட்டி, 5-8 நிமிடம் மூடி வைத்து வேக வைக்க வேண்டும். அடுத்து அதில் மீதமுள்ள எண்ணெயை ஊற்றி, மீண்டும் 5-8 நிமிடம் வேக வைக்க வேண்டும். மீன் நன்கு மென்மையாக வெந்ததும், அதில் ஒரு கைப்பிடி கறிவேப்பிலையைத் தூவி குறைவான தீயில் பிரட்டி, எண்ணெய் தனியாக பிரியும் வரை வேக வைத்து இறக்கினால், நெத்திலி மீன் தொக்கு ரெடி!!!