என்னென்ன தேவை?
வறுத்த அரிசி மாவு – 200 கிராம்,
சேப்பங்கிழங்கு + நூல்கோல் – 300 கிராம்,
மாவில் பிசைய வெங்காயம் – 2,
பச்சைமிளகாய் – 1,
கொத்தமல்லித்தழை – 1/4 கப்,
புதினா – 1/4 கப்,
துருவிய தேங்காய் – 1/2 மூடி சிறியது,
உப்பு – 1/2 டீஸ்பூன்.
காய் தாளிக்க…
எண்ணெய் – 1/4 கப்,
பட்டை – 1,
கிராம்பு – 2,
ஏலக்காய் – 2,
வெங்காயம் – 2,
தக்காளி – 2,
பச்சைமிளகாய் – 1,
கொத்தமல்லி – சிறிது,
புதினா – சிறிது,
இஞ்சிபூண்டு விழுது – 2 டேபிள்ஸ்பூன்,
மிளகாய் தூள் – 3/4 டீஸ்பூன்,
தனியா தூள் – 1 1/2 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்,
உப்பு – 3 டீஸ்பூன் அல்லது தேவைக்கு,
கடைசியில் கரைத்து ஊற்ற வறுத்த அரிசி மாவு – 2 டேபிள்ஸ்பூன்.
எப்படிச் செய்வது?
முதலில் காய் வகைகளை கழுவி உப்பு, மிளகாய் தூள், இஞ்சிபூண்டு விழுது போட்டு வேக வைக்கவும். ஒரு கடாயில் எண்ணெயை காய வைத்து அதில் பட்டை, கிராம்பு, ஏலத்தை போட்டு பொரிய விடவும். பொரிந்ததும் வெங்காயத்தை வதக்கி, இஞ்சிபூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும். பின் தக்காளி, கொத்தமல்லி, புதினா, பச்சைமிளகாயை போட்டு நன்கு வதக்கவும். வேக வைத்துள்ள காய் வகைகளை சேர்த்து, உப்பு, தனியா, மஞ்சள் தூள், மிளகாய் தூள் போட்டு நன்கு பிரட்ட வேண்டும்.
5 நிமிடம் சிம்மில் வைத்து மூடி போட்டு வேக விடவும். பிறகு ஒன்றுக்கு 3 மடங்கு தண்ணீர் ஊற்றி கொதிக்க விட வேண்டும். மாவில் தேங்காய், உப்பு, கொத்தமல்லி, புதினா, வெங்காயம் நன்கு பொடியாக நறுக்கி அதில் போட்டு கிளறி வைக்கவும். கொதித்த காய் தண்ணீரிலிருந்து 2 டம்ளர் மசாலா தண்ணீர் எடுத்து மாவில் ஊற்றி பிசறி நன்கு அழுத்தி குழைத்து கொள்ள வேண்டும். குழைத்த மாவை கொழுக்கட்டைகளாக பிடித்து தட்டில் அடுக்கி வைக்கவும்.
பிடித்த கொழுக்கட்டைகளை ஒவ்வொன்றாக கொதித்துக் கொண்டிருக்கும் மசாலாவில் போட வேண்டும். போட்டதும் கரண்டியை போட்டு கிண்டக்கூடாது. கொழுக்கட்டை கரைந்து விடும். ஒரு தோசை கரண்டி அல்லது கட்டை கரண்டியால் லேசாக ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் பிரட்டி விட வேண்டும். கறியும், கொழுக்கட்டையும் ஒரே நேரத்தில் வெந்துவிடும்.
முதலே கறி வெந்து விட்டால் கறி கரைந்து விடும். இப்போது கரைத்து ஊற்ற வேண்டிய மாவை தண்ணீரில் கரைத்து ஊற்றி நன்கு கொதிக்க விட வேண்டும். லேசாக கிளறி விட வேண்டும். கடைசியில் தோசை தவாவை வைத்து 10 நிமிடம் சிம்மில் (தம்மில்) வைத்து இறக்க வேண்டும். சுவையான நூல்கோல் சேப்பங்கிழங்கு கொழுக்கட்டை (தக்குடி) ரெடி.