தென்னிந்திய பெண்களின் அழகே தனி தான். அதிலும் அவர்களின் பெரிய கண்கள், நீளமான கூந்தல் மற்றும் பொலிவான சருமம் தான் நினைவிற்கு வரும். மேலும் தென்னிந்திய பெண்கள் கருப்பாக இருந்தாலும், களையாக இருப்பதற்கு காரணம், அவர்களின் அழகு பராமரிப்பு தான். பொதுவாக தென்னிந்திய பெண்கள் தங்களின் முகத்திற்கு க்ரீம்களையோ, முடிக்கு கடைகளில் விற்கப்படும் கண்ட ஹேர் பேக்குகளையோ போடமாட்டார்கள்.
மாறாக வீட்டில் இருக்கும் சமையலறைப் பொருட்களைக் கொண்டு தான் தங்களின் அழகைப் பராமரிப்பார்கள். அதனால் தான் அவர்களின் முகம் களையாகவும், ஆரோக்கியமாகவும் உள்ளது. உங்களுக்கு தென்னிந்திய பெண்களின் அழகு ரகசியங்களைத் தெரிந்து கொள்ள ஆசையா? அப்படியெனில் தொடர்ந்து படியுங்கள்.
ஏனெனில் தமிழ் போல்ட் ஸ்கை தென்னிந்திய பெண்களின் அழகிற்கான ரகசியங்களைப் பட்டியலிட்டுள்ளது. சரி, அதைப் பார்ப்போமா!!!
தேங்காய் எண்ணெய்
தென்னிந்திய பெண்கள் நீளமான முடியைப் பெறுவதற்கு பின்னணியில் இருப்பது தேங்காய் எண்ணெய் தான். அதிலும் தினமும் தலைக்கு தவறாமல் எண்ணெய் வைத்து வருவதோடு, வாரம் ஒருமுறை தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெயை சூடேற்றி, தலையில் தடவி நன்கு மசாஜ் செய்து, 1 மணிநேரம் ஊற வைத்து, சீகைக்காய் போட்டு நன்கு தேய்த்து குளிப்பார்கள்.
தயிர்
பொலிவிழந்து காணப்படும் முடியின் பொலிவை அதிகரிக்க, தயிரை தலைக்கு தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் அலசுவார்கள்.
விளக்கெண்ணெய்
தென்னிந்திய பெண்களின் புருவங்கள் அழகாக காணப்படுவதற்கு காரணம், அவர்கள் தினமும் விளக்கெண்ணெயை புருவங்களுக்கு மேல் தடவி வருவது தான். மேலும் இந்த எண்ணெயைக் கொண்டு தினமும் இரவில் படுக்கும் முன் கண்களை மசாஜ் செய்து படுத்தால், நல்ல தூக்கத்தைப் பெறுவதோடு, கண்களும் கருவளையமின்றி, அழகாக இருக்கும்.
நல்லெண்ணெய்
தென்னிந்திய பெண்கள் வாரம் ஒருமுறை நல்லெண்ணெயை வெதுவெதுப்பாக சூடேற்றி, அதில் 2 பற்கள் பூண்டு தட்டிப் போட்டு, சிறிது உப்பு சேர்த்து, அந்த எண்ணெயைக் கொண்டு உடலை நன்கு மசாஜ் செய்து, ஊற வைத்து பின் குளிப்பார்கள். இதனால் தான் அவர்கள் சருமம் பட்டுப் போன்று மென்மையாக உள்ளது.
மஞ்சள்
தென்னிந்திய பெண்கள் கருப்பாக இருந்தாலும், களையாக காணப்படுவதற்கு முக்கிய காரணம், அவர்கள் குளிக்கும் போது மஞ்சள் தேய்த்துக் குளிப்பது தான். மஞ்சளில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் தன்மை அதிகம் இருப்பதால், சருமத்தில் எவ்வித பிரச்சனையும் ஏற்படாமல், சருமம் ஆரோக்கியமாகவும், களையாகவும் காணப்படுகிறது.
சாம்பிராணி
தென்னிந்திய பெண்களின் கூந்தல் நறுமணம் வீசுவதற்கு தலைக்கு குளித்த பின், தலையை சாம்பிராணி புகையில் உலர வைப்பார்கள். இதனால் தான் கூந்தல் ஆரோக்கியமாகவும், நறுமணத்துடனும் இருக்கிறது.
சந்தனம்
தென்னிந்திய பெண்கள் அழகை அதிகரிக்க கண்ட க்ரீம்கள் மற்றும் ஃபேஸ் பேக்குகளைப் பயன்படுத்தவோ மாட்டார்கள். மாறாக சந்தனத்தை ரோஸ் வாட்டரில் கலந்து, முகத்திற்கு ஃபேஸ் பேக் போட்டு உலர வைத்து கழுவுவார்கள். சந்தனம் மட்டுமின்றி, வீட்டில் இருக்கும் கடலை மாவு, தயிர், மஞ்சள், எலுமிச்சை சாறு போன்ற இயற்கைப் பொருட்களைக் கொண்டு ஃபேஸ் பேக் தயாரித்து, சருமத்திற்கு பயன்படுத்துவார்கள்.
வேப்பங்குச்சி/ஆலங்குச்சி
தென்னிந்திய கிராமப்புற பகுதிகளில் உள்ள பெண்களின் பற்கள் பளிச்சென்று இருப்பதற்கு அவர்கள் வேப்பங்குச்சி அல்லது ஆலங்குச்சியால் தங்களின் பற்களை துலக்குவதே ஆகும். இதனால் பற்கள் வெண்மையாக இருப்பதோடு, ஈறுகளும் ஆரோக்கியமாக இருக்கும். ஆனால் இக்காலத்தில் இதையெல்லாம் யார் பயன்படுத்துகிறார்கள்.