திருமணம் என்பது ஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கையிலும் மிக முக்கியமான அத்தியாயம் ஆகும். ஒவ்வொரு பெண்ணும் ஆயிரம் கனவுகளோடு அந்த புது வாழ்க்கைக்குள் காலடி எடுத்து வைப்பாள். புது வாழ்க்கை, புது சூழ்நிலை, புது மனிதர்கள் என மற்றொரு உலகத்திற்கு பயம் மற்றும் பதற்றத்துடன் தான் ஒவ்வொரு பெண்ணும் நுழைகிறாள்.அப்படி நுழையும் போது அவர்களுக்கு பல்வேறு அனுபவங்கள் கிடைப்பது வாஸ்தவம் தான்; அது நல்லதாகவும் இருக்கும், கெட்டதாகவும் இருக்கும். காதல் திருமணமோ அல்லது வீட்டில் பார்த்து செய்யப்படும் திருமணமோ, அது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டதோ அல்லது பூமியில் நிச்சயிக்கப்பட்டதோ, உங்கள் தாயின் வழிகாட்டல்கள் உங்களின் புது வாழ்க்கையை இன்னும் எளிதாக்கும். தன் மகளிடம் ஒவ்வொரு தாயும் கூற வேண்டிய திருமண ரகசியங்களைப் பார்க்கலாம்..
• உண்மையான காதல் என்பது பாசம், சுயநலமின்மை, நன்றி மற்றும் அதனுடன் சுலபமாக பயணிப்பதே என்ற பாடத்தை தன் மகளுக்கு ஒரு தாய் கற்றுக் கொடுக்க வேண்டும்.
• தன் கணவன் மீது, தன் கணவனுடனான உறவின் மீது, தன் மீதே நிபந்தனையற்ற காதலை கொண்டிருக்க வேண்டும் என தன் மகளுக்கு தாய் கற்று கொடுக்க வேண்டும். இதனால் ஆரோக்கியமான உறவுமுறைக்கு இது அவளை தயார்படுத்தும்.
• திருமணத்திற்கு பிறகு, நீங்கள் உங்கள் மாமனார் மாமியாருடன் ஒரே வீட்டில் சேர்ந்து வாழவில்லை என்றாலும் கூட, அவர்களுடான உறவு மற்றும் மற்றவர்களுடனான உறவு மிகுந்த முக்கியத்துவத்தை பெறுகிறது. பிறருக்காக நீங்கள் சில விஷயங்களை செய்ய வேண்டியிருக்கும். சில நேரம் உங்கள் ஆசைகளை உள்ளடக்கி இதனை செய்ய வேண்டிய சூழ்நிலை கூட ஏற்படும். கவலை வேண்டாம். காதல் என்பது உங்கள் ஆழ்மனதில் இருந்து வந்தால், அதனால் நீங்கள் செலுத்தும் அன்பு வற்றாத ஜீவநதியாக விளங்கும்.
• திருமணமான முதல் சில மாதங்களில் அதிக சவால்களை சந்திக்க வேண்டியிருக்கும். குறிப்பாக, அது வீட்டில் பார்த்து நடத்தி வைத்த திருமணம் என்றால். இப்படிப்பட்ட திருமணத்தில் கணவனை குடும்பத்தார் தேர்ந்தெடுப்பார்கள். கணவனின் நல்லது கெட்டது என அனைத்தையும் அந்த பெண் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
இந்த சூழ்நிலைகளில், முதலில் தன்னை ஒத்துப்போக செய்து, பின் தன் சொந்த குறைபாடுகளை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தை பெற, தன் மகளுக்கு தாய் கற்றுக் கொடுக்க வேண்டும். இப்படி செய்வதால் அவள் தன் கணவனின் குறைபாடுகளையும் சுலபமாக ஏற்றுக் கொள்வார்.
யாருமே முழுமையாக ஒழுங்கானாவர்கள் அல்ல என்பதையும் புரிந்து கொள்வாள். திருமண வாழ்க்கை என்பது விட்டுக் கொடுப்பதே தவிர வெட்டி விடுவதல்ல. – சந்தோஷமான, ஆரோக்கியமான, நீடித்து நிலைக்கும் திருமண வாழ்க்கைக்கான ரகசியங்கள் தான் உங்கள் தாயிடமிருந்து நீங்கள் பெறும் பெரிய பரிசாகும். அதனை கற்றுக் கொண்டு வாழ்க்கையை இனிமையாக்கி கொள்ளுங்கள்.