எண்ணெய் தேய்ப்பதால் ஆகப்போவது ஒன்றும் இல்லை என்றும், எண்ணெய் தேய்ப்பது கூந்தல் வளர்ச்சிக்கு நல்லது என்றும் மாறுபட்ட கருத்துகள் உண்டு. ஆனால் கூந்தலுக்கு எண்ணெய் தேய்ப்பது அவசியமே என்பதற்கான காரணங்களை பார்க்கலாம்.
* முடி உலர்வதைத் தவிர்த்து, பாதுகாப்பு கொடுத்து முடியை பலப்படுத்துகிறது எண்ணெய்.
* அன்றைய பெண்கள் கடுகு, பீலு எண்ணெய் தேய்த்ததாக கூறப்படுகிறது. தமிழகத்தில் பொதுவாக எல்லோரும் பயன்படுத்துவது தேங்காய் எண்ணெய் மற்றும் நல்லெண்ணெய் ஆகும். இரண்டு எண்ணெய்களுமே தலைக்கு தேய்ப்பதற்கு சிறந்தவை என்பது நாம் பெருமைகொள்ளத்தக்க ஒன்று.
* நல்லெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய்களிலும் கால்சியம், மக்னீசியம், பொட்டாசியம் மற்றும் இரும்புச்சத்து உள்ளது. நல்லெண்ணெயில் உள்ள வைட்டமின் E முடி சிதைவைத் தடுக்கிறது.
* முடி செம்பட்டையாக உள்ளவர்கள் நல்லெண்ணெய் தேய்த்தால் செம்பட்டை குறைய வாய்ப்பு உள்ளது. தலை உலர்ந்து பொடுகு உள்ளவர்களுக்கு எண்ணெய் தேய்த்தால் அரிப்பு குறையும்.
* குளிப்பதற்கு முன் எண்ணெய் தேய்க்கும் பழக்கத்தை வாரம் ஒரு முறையும், குளித்த பிறகு எண்ணெய் தேய்க்கும் பழக்கத்தை அன்றாடமும் கடைபிடிக்கலாம்.
* தலை முழுக்க எண்ணெய் படும்படி மட்டும் தேய்த்தால் போதும்; நனையும் அளவுக்கு அதிகம் தேய்க்க தேவையில்லை.
* எண்ணெய் ஒவ்வாமை உள்ளவர்களும் தலையில் இயற்கையாக அதிக எண்ணெய் உள்ளவர்களும், எண்ணெய் தேய்ப்பதைத் தவிர்க்கலாம்.
* இயற்கையாக கிடைக்கக்கூடிய நல்லெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெயை பயன்படுத்தினாலே போதும்.
* செயற்கை ஹேர் ஆயில்களை மருத்துவர்களின் ஆலோசனைப்படி மட்டும்தான் பயன்படுத்த வேண்டும். விளம்பரத்தை பார்த்து வாங்கி பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.