கடைகளில் விற்கப்படும் எந்த ஒரு ஷாம்புவைப் பார்த்தாலும், அதில் தலைமுடியின் வளர்ச்சி அதிகரிக்கும், தலைமுடி உதிர்வது குறையும், பொடுகு நீங்கும், முடி பட்டுப் போன்று மென்மையாக இருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளதால், எதை வாங்கிப் பயன்படுத்துவது என்று தெரியாமல் நாம் குழப்பத்தில் உள்ளோம்.
ஏனெனில் நாம் சிறிது தவறான ஷாம்புவைத் தேர்ந்தெடுத்து பயன்படுத்தினாலும், அதனால் தலைமுடி அதிகளவில் கொட்டும். அப்படியெனில் ஷாம்பு தான் தலைமுடி உதிர்வதற்கு காரணமாக என்று கேட்டால் பலரும் ஆம் என்று சொல்வோம். ஆனால் அனைத்து ஷாம்புக்களும் தலைமுடி உதிர்வதற்கு காரணம் இல்லை. ஷாம்புக்களின் மூலம் ஒருவருக்கு தலைமுடி அதிகம் கொட்டுகிறது என்றால், அதற்கு அதில் உள்ள கெமிக்கல்கள் தான்.
அதுவும் மிகுந்த வாசனையுடன், விலை குறைவில் இருக்கும் ஷாம்புவில் தலைமுடிக்கு கேடு விளைவிக்கும் ஏராளமான கெமிக்கல்கள் இருக்கும். ஒவ்வொருவரும் நாம் பயன்படுத்தும் ஷாம்புவில் உள்ள தீங்கு விளைவிக்கும் கெமிக்கல்கள் குறித்து தெரிந்து வைத்திருக்க வேண்டியது அவசியம். மேலும் எப்போதும் ஷாம்புவைத் தேர்ந்தெடுக்கும் போது, அதில் உள்ள கெமிக்கல்களை முதலில் படித்து பார்க்க வேண்டியதும் முக்கியம்.
இங்கு நம் தலைமுடிக்கு தீங்கு விளைவிக்கும் ஷாம்புவில் கலக்கப்படும் கெமிக்கல்கள் குறித்துக் காண்போம். அந்த கெமிக்கல்கள் உங்கள் ஷாம்புவில் இருந்தால், உடனே அவற்றைப் பயன்படுத்துவதைத் தவிர்த்திடுங்கள்.
சல்பேட்டுகள்
ஷாம்புக்களால் தலைமுடி உதிர்வதற்கு முக்கிய காரணம், அதில் சல்பேட் இருப்பதால் தான். பெரும்பாலான விலைக் குறைவான ஷாம்புக்களில் அம்மோனியம் லாரில் சல்பேட் மற்றும் சோடியம் லாரில் சல்பேட்டுக்கள் இருக்கும். இந்த கெமிக்கல்கள் மயிர்கால்களைப் பாதித்து, முடி உதிர்தலுக்கு வழிவகுக்கும்.
ஃபார்மால்டிஹைடு
பலரும் பேபி ஷாம்புக்கள் தலைமுடிக்கு நல்லது என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இருப்பினும் அதில் ஃபார்மால்டிஹைடு என்னும் டி.என்.ஏ-வைப் பாதிக்கும் மற்றும் தலை முடி உதிர்வை ஏற்படுத்தும் பொருள் இருக்கும். ஏனெனில் இது விலைக்குறைவான பதப்படுத்தும் கெமிக்கல் என்பதால் பெரும்பாலான ஷாம்புக்கள் மற்றும் கண்டிஷனர்களில் இருக்கும். எனவே கவனமாக இருங்கள்.
சோடியம் குளோரைடு
இது ஒரு உப்பு. இது ஷாம்புக்கள் கெட்டியாவதற்கு பயன்படுத்தப்படும். அம்மோனியம் உள்ள ஷாம்புக்களில் அம்மோனியம் குளோரைடாக இது பயன்படுத்தப்படும். இந்த கெமிக்கல், ஸ்கால்ப்பில் வறட்சி மற்றும் அரிப்பை ஏற்படுத்தி, தலைமுடி உதிர வழிவகுக்கும். எனவே ஷாம்பு வாங்கும் போது இது உள்ளதாக என்று படித்துப் பாருங்கள்.
ஆல்கஹால்
அனைத்து வகையான தலை முடி பராமரிப்பு பொருட்களிலும் சிறிது ஆல்கஹால் இருக்கும். எனவே நீங்கள் ஷாம்பு வாங்கும் போது, பாட்டிலின் பின்னால் குறிப்பிடப்பட்டுள்ள ஆல்கஹால் அளவு அதிகமாக உள்ளதா அல்லது குறைவாக உள்ளதா எனப் பாருங்கள். சமீபத்திய ஆய்வு ஒன்றில், ஆல்கஹால் அதிகம் உள்ள ஷாம்புக்களைப் பயன்படுத்தினால், தலைமுடி மென்மையிழந்து வறட்சியுடன் இருப்பதோடு, தலைமுடி உதிர்தலும் அதிகம் இருக்கும் என கண்டறியப்பட்டுள்ளது.
கிரீசர்கள்
இதில் கனிம எண்ணெய்கள், லனோலின் மற்றும் பெட்ரோலியம் அடங்கும். இந்த பொருட்கள் ஷாம்புக்களில் இருந்தால், அவை நம் தலைமுடியில் உள்ள இயற்கை எண்ணெயை வெளியேற்றி, தலைமுடி உதிர்வை அதிகரித்து, முடியை மெலியச் செய்யும்.
குறிப்பு
இன்றைய பரபரப்பான வாழ்க்கை முறையில் நம்மால் இயற்கை ஷாம்புவான சீகைக்காய் பயன்படுத்தி தலைக்கு குளிக்க முடியாமல் இருக்கலாம். ஆனால் உங்கள் தலை முடி ஆரோக்கியமாக இருக்க வேண்டுமெனில் சோம்பேறித்தனப்படாமல் சீகைக்காயைப் பயன்படுத்தி, தலைமுடியை சுத்தம் செய்யுங்கள். இல்லாவிட்டால் தோல் மருத்துவரை சந்தித்து அவர் பரிந்துரைக்கும் ஷாம்புவை வாங்கிப் பயன்படுத்துங்கள்.