தட்டைப்பயறில் இரும்புச்சத்து, கால்சியம், புரோட்டீன் போன்றவை வளமாக நிறைந்துள்ளது. இதனை வாரம் ஒருமுறை உணவில் சேர்த்து வந்தால், இச்சத்துக்களைப் பெறலாம். மேலும் இதனை பலவாறு சமைத்து சாப்பிடலாம். இங்கு அந்த தட்டைப்பயறைக் கொண்டு எப்படி கிரேவி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது
அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். இந்த தட்டைப்பயறு கிரேவியை சாதம் அல்லது சப்பாத்தியுடன் சாப்பிட்டால் அற்புதமாக இருக்கும்.
தேவையான பொருட்கள்: தட்டைப்பயறு – 1 கப் வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கியது) தக்காளி – 2 (பொடியாக நறுக்கியது) இஞ்சி – 1 இன்ச் (பொடியாக நறுக்கியது) பூண்டு – 3 பற்கள் (பொடியாக நறுக்கியது) மஞ்சள் தூள் – 1 சிட்டிகை மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன் சீரகப் பொடி – 1 டீஸ்பூன் மல்லித் தூள் – 2 டீஸ்பூன் கரம் மசாலா – 1 டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
தாளிப்பதற்கு… சீரகம் – 1/2 டீஸ்பூன்
செய்முறை: முதலில் தட்டைப்பயறை நீரில் 5 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ளவும். பின்னர் குக்கரில் அதனைப் போட்டு, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, அடுப்பில் வைத்து 3-4 விசில் விட்டு இறக்கிக் கொள்ளவும். விசில் போனதும் குக்கரைத் திறந்து அதில் உள்ள நீரை வடிகட்டிக் கொள்ளவும். பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகத்தைப் போட்டு தாளித்து, பின் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். பிறகு அதில் இஞ்சி, பூண்டு சேர்த்து 1 நிமிடம் வதக்கி, பின் தக்காளி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரகப் பொடி, மல்லித் தூள் மற்றும் அளவாக உப்பு சேர்த்து நன்கு வதக்க வேண்டும். தக்காளி நன்கு மென்மையாக வெந்ததும், அதில் கரம் மசாலா, வேக வைத்த தட்டைப்பயறு, 3/4 கப் தண்ணீர் ஊற்றி, 10 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விட்டு இறக்கி, கொத்தமல்லியைத் தூவினால், தட்டைப்பயறு கிரேவி ரெடி!!!