ஒருவர் விரும்பாத மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரே விஷயம் என்றால் அது வயதாவது. ஒவ்வொரு வருடமும் வயது ஏற தான் செய்யும். அதனை ஏற்றுக்கொள்ளும் நம் மனது, அதன் வெளிபாடு நம் உடலில் தெரியும் போது மட்டும் தான் ஏற்றுக்கொள்ள தயங்குகிறது. பிறந்தது முதல் இறக்கும் வரை அழகாகவே இருக்க வேண்டும் என்று நினைப்பது மனித இயல்பு. இன்றைய காலக்கட்டத்தில் மாசடைந்த சூழல் பலருக்கு இளம் வளதிலேயே இளநரை பிரச்சனையை உண்டாக்கிவிடுகிறது.
வயதாகும் போது நரை முடி வந்தால் கூட ஏற்றுக்கொள்ள முடியும். அதுவே, இளம் வயதில் வந்துவிட்டால் எவராலும் நிச்சயம் அதனை ஏற்க மறுத்துவிடும். இந்த இளநரை பிரச்சனை ஒருவரது அழகை மட்டும் கெடுப்பதில்லை, கூடவே ஒருவரது தன்னம்பிக்கையையும் சேர்த்து உடைப்பதோடு, மனஅழுத்தத்தை ஏற்படுத்தி விடுகிறது.
25 வயதிற்கு முன்னதாக ஒருவருக்கு நரை முடி ஏற்படுகிறது என்றால், அது தான் இளநரை என்றழைக்கப்படுகிறது. இது ஏற்படுவதற்கான காரணங்கள் என்றால், வைட்டமின் பி12 பற்றாக்குறை அல்லது இரும்புச்சத்து குறைபாடு போன்றவை காரணங்களாக இருக்கலாம். ஆரோக்கியமற்ற உணவு பழக்கம், புரதம், காப்பர் மற்றும் இன்ன பிற முக்கிய வைட்டமின்கள் போன்றவற்றின் குறைபாடு காரணமாக கூட இளநரை ஏற்படக்கூடும்.
இளநரை பிரச்சனையை எப்படி சமாளிப்பது?
ஆரோக்கியமான உணவுப் பழக்கம் ஒன்றே இளநரை ஏற்படுவதை தடுப்பதற்கான ஒரே வழி. உணவில் பச்சை காய்கறிகள், கீரைகள், தயிர் மற்றும் பழங்கள் போன்றவற்றை சேர்க்க வேண்டும். இப்படிப்பட்ட ஆரோக்கியமான உணவு மற்றும் முறையாக உடற்பயிற்சி செய்வதன் மூலம் இளநரை ஏற்படுவதை தடுப்பதோடு, கூந்தலுக்கும் வலு சேர்க்கவும் உதவும்.
இளநரை பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் என்ன செய்வதென்று கேட்கிறீர்களா? அப்படிப்பட்டவர்கள் சில எளிய வீட்டு வைத்திய முறைகள் உள்ளன. அழகு நிலையங்களுக்கு சென்று கலரிங் செய்து கொள்வது, டை அடித்து கொள்வது போன்ற பின்விளைவு மிக்க செயல்களை மட்டும் தவறியும் செய்துவிட வேண்டாம். இங்கே, கொடுக்கப்பட்டுள்ள வீட்டிலேயே செய்யக் கூடிய எளிய ஹேர் கேர் முறைகளை முயற்சித்து பாருங்கள். நிச்சயம் பலனளிக்கும்…
நெல்லிக்காய் மற்றும் வெந்தயம் சேர்த்த ஹேர் மாஸ்க்
கடைகளில் சுலபமாக கிடைக்கக் கூடிய நெல்லிக்காய் பவுடரை எடுத்துக் கொள்ளவும். சிறிது வெந்தயத்தை பொடியாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். இந்த 2 பவுடரையும் நீர் சேர்த்து ஒரு பேஸ்ட் போல கலந்துக் கொள்ளவும். இரவு தூங்குவதற்கு முன்பு இதனை கூந்தலில் தடவி, இரவு முழுவதும் அப்படியே விட்டுவிடவும். காலை எழுந்ததும் மிதமான ஷாம்பூ கொண்டு முடியை கழுவிடவும். நெல்லிக்காயில் நிறைந்துள்ள வைட்டமின் சி மற்றும் வெந்தயத்தில் உள்ள பல்வேறு சத்துக்கள் முடியின் தரத்தை அதிகரிக்க செய்யும். இவை இரண்டும் ஒன்றாக சேரும் போது, முடி வளர்ச்சியை அதிகரிக்க செய்வதோடு, இளநரை ஏற்படாமலும் தடுத்திடும்.
கறிவேப்பிலை மற்றும் தேங்காய் எண்ணெய்
சிறிது தேங்காயில், சில கறிவேப்பிலைகளை சேர்த்து கொதிக்க விடவும். எண்ணெய் சேர்க்கப்பட்ட இலைகள் கருப்பு நிறத்திற்கு மாறும் வரை கொதிக்க விடவும். பின்பு, அந்த எண்ணெயை ஆற வைத்து, வடிகட்டி எடுத்து வைத்துக்கொள்ளவும். தயார் செய்த இந்த எண்ணெயை, தலையில் தேய்த்து நன்கு மசாஜ் செய்து, இரவு முழுவதும் ஊற விடவும். மறுநாள் காலை எழுந்து, மிதமான ஷாம்பூ கொண்டு தலைக்கு குளித்திடவும். ஒவ்வொரு முறை தலைக்கு குளிக்கும் முன்பு, முதல் நாள் இரவே இந்த எண்ணெயை தலைக்கு தேய்த்து மறுநாள் குளிக்க வேண்டும் என்பதை மட்டும் நினைவில் கொள்ளுங்கள். கறிவேப்பிலையில் உள்ள வைட்டமின் பி, முடி கால்களில் மெலமின் சேர உதவுவதோடு, இளநரையையும் விரட்டிவிடும்.
ப்ளாக் டீ
ஒரு டம்ளர் தண்ணீரில், 3 டேபிள் ஸ்பூன் ப்ளாக் டீ இலைகளை சேர்க்கவும். அத்துடன், ஒரு டீஸ்பூன் உப்பு சேர்க்கவும். ஒரு டம்ளர் தண்ணீர், பாதி டம்ளராக குறையும் வரை கொதிக்க விடவும். பின்னர், அதனை வடிகட்டி ஆற வைக்கவும். தயார் செய்து வைத்துள்ள இந்த கலவையை, தலைக்கு குளித்த பின்பு, முடியில் தேய்க்கவும். இது எந்தவொரு கெமிக்கலும் இல்லாத இயற்கை ஹேர் டை ஆகும். இந்த ப்ளாக் டீ பயன்படுத்துவதன் மூலம் மிருதுவான கூந்தலையும் பெற முடியும்.
பாதாம் எண்ணெய் மற்றும் எலுமிச்சை சாறு
2:3 என்ற விகிதக் கணக்கல் பாதாம் எண்ணெய் மற்றும் எலுமிச்சை சாற்றை கலந்து கொள்ளவும். முடியில் வேர்க்கால்களில் படும்படி இந்த கலவை தலையில் தடவி, நன்கு மசாஜ் செய்யவும். 30 நிமிடங்களுக்கு பிறகு, மிதமான ஷாம்பூ பயன்படுத்தி தலையை அலவி விடலாம். வைட்டமின் ஈ அதிகம் உள்ள பாதாம் எண்ணெய், வேர்க்கால்களுக்கு ஊட்டம் அளிப்பதோடு, இளநரையையும் போக்கிவிடும். வைட்டமின் சி நிறைந்த எலுமிச்சை சாறு, கூந்தல் வளர்ச்சியை ஊக்குவிக்கும்.
இயற்கை ஹென்னா மற்றும் காபி மிக்ஸ்
இயற்கை ஹேர் கலரிங் என்றால் அது ஹென்னா தான். தரமான கெமிக்கல் இல்லாத ஹென்னாவை தேர்ந்தெடுத்து பயன்படுத்த வேண்டியது மிகவும் அவசியம். ஏனென்றால், கடைகளில் கெமிக்கல் கலந்த ஹென்னாவும் உள்ளது. பயன்படுத்தும் பொருளை தேர்ந்தெடுத்து பயன்படுத்த வேண்டியது மிகவும் முக்கியமான ஒன்று. ஹென்னா மற்றும் காபி பயன்படுத்தினால் இளநரையை சுலபமாக போக்கிடலாம். 2-3 கப் தண்ணீரில் சிறிது காபி தூளை சேர்த்து கொதிக்க விடவும். பின்னர், அந்த கலவையை ஆற விடவும். அத்துடன் ஹென்னா பவுடர், அதாவது மருதாணி பவுடரை சேர்த்து பேஸ்ட் போல கலந்து கொள்ளவும். இந்த கலவையை சில மணி நேரங்களுக்கு ஊற விடவும். பின்னர், அத்துடன் ஒரு டேபிள் ஸ்பூன் நெல்லிக்காய் எண்ணெய்/பாதாம் எண்ணெய்/தேங்காய் எண்ணெய்/கடுகு எண்ணெய் ஏதாவது ஒன்றை சேர்த்து கலந்து முடியில் தடவவும். ஒரு மணி நேரம் கழித்து, மிதமான ஷாம்பூ பயன்படுத்தி அலசிடலாம். இந்த கலவை இளநரையை குறைப்பதோடு, மிருதுவான கூந்தலை பெற உதவும்.