குளர்காலம் அனைவருக்குமே மிகவும் பிடித்தமான காலமாக இருக்கும். ஆனால் வறட்சியான சருமம் உள்ளவர்களுக்கு இக்காலம் மிகுந்த வலியைத் தரக்கூடியதாகும். ஏனெனில் வறட்சியான சருமம் உள்ளவர்களுக்கு குளிர்காலத்தில் அதிக அளவில் வறட்சி ஏற்பட்டு, மிகவும் தீவிரமான சில சரும பிரச்சனைகள் ஏற்படக்கூடும்.
மேலும் சாதாரண சருமம் உள்ளவர்களுக்கும் இக்காலத்தில் வறட்சி ஏற்படும். இதற்கு குளிர்காலத்தில் வீசும் குளிர்ச்சியான காற்று தான் காரணம். மேலும் இந்த காலத்தில் சருமத்திற்கு போதிய பராமரிப்புக்களை கொடுத்து வந்தால், நிச்சயம் சரும வறட்சியைத் தடுத்து பல்வேறு பிரச்சனைகளையும் தடுக்கலாம். சரி, இப்போது குளிர்காலத்தில் வறட்சியான சருமத்தைப் போக்க சில அட்டகாசமான டிப்ஸ்களைப் பார்ப்போம்.
குளிர்ந்த நீர்
குளிர்காலத்தில் சுடுநீரில் குளிப்பதை தவிர்த்து, குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும். ஏனெனில் சுடுநீர் சருமத்தில் வறட்சியை இன்னும் அதிகரித்து வெடிப்புக்களை அதிகரிக்கச் செய்யும்.
துடைக்க வேண்டாம்
குளித்து முடித்த பின்னர் டவலைக் கொண்டு சருமத்தை துடைப்பதை தவிர்க்க வேண்டும். மாறாக டவலைக் கொண்டு ஒத்தடம் கொடுப்பது போல் மென்மையாக தொட்டு தொட்டு எடுக்க வேண்டும். இதனால் சருமம் மென்மையாகவும், மேலும் வறட்சியடையாமலும் இருக்கும்.
ஆலிவ் ஆயில்
ஆலிவ் ஆயிலில் சருமத்திற்கு தேவையான வைட்டமின் ஈ அதிகமாக நிறைந்துள்ளது. மேலும் இதில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட்டுகளும் நிறைந்திருப்பதால், இதனைக் கொண்டு சருமத்தை அன்றாடம் மசாஜ் செய்து வந்தால், சருமம் வறட்சி அடைவதைத் தடுக்கலாம்.
ஸ்கரப் செய்யவும்
வாரத்திற்கு இரண்டு முறையாவது ஸ்கரப் செய்ய வேண்டும். அதிலும் உங்களுக்கு சென்சிடிவ் சருடம் என்றால் வாரத்திற்கு ஒருமுறை ஸ்கரப் செய்ய வேண்டும். இதன் மூலம் சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி, சருமத்தை புத்துணர்ச்சியுடனும், பொலிவாகவும் வைத்துக் கொள்ளலாம். முக்கியமாக ஸ்கரப் செய்து முடித்த பின்னர், அவ்விடத்தில் மாய்ஸ்சுரைசரை தடவ வேண்டும்.
சன் ஸ்க்ரீன் அவசியம்
குளிர்காலத்தில் சருமம் அதிக அளவில் வறட்சி அடைவதால், சருமத்தில் சுருக்கம் ஏற்படுவதுடன் முதுமை தோற்றத்தையும் கொடுக்கும். மேலும் சிலர் குளிர்காலத்தில் வெயில் அதிகம் இருக்காது என்று, சன் ஸ்க்ரீன் தடவுவதை தவிர்ப்பார்கள். இப்படி தவிர்ப்பதால், சருமம் தான் மேலும் பாதிப்பிற்குள்ளாகும். ஆகவே குளிர்காலத்தில் வெளியே செல்லும் போது, சன் ஸ்க்ரீன் தடவிக் கொண்டு செல்ல வேண்டும்.
குறிப்பு
மேற்கூறியவாறு குளிர்காலத்தில் சருமத்தைப் பராமரித்து வந்தால், நிச்சயம் சருமம் இளமையுடன் வறட்சியின்றி, பொலிவோடும் மென்மையாகவும் காணப்படும்.