கிராம பகுதிகளில் பணியாரம் மிகவும் பிரபலமானது. காலை வேளையில் எழுந்ததும் காபி, டீ குடிக்கும் போது, பணியாரத்தையும் சாப்பிடுவார்கள். இத்தகைய பணியாரத்தில் நிறைய வகைகள் உள்ளன. அதில் ஒன்று தான் தான் ராகி பணியாரம். காலை வேளையில் ராகி சாப்பிடுவது மிகவும் நல்லது. அதிலும் அதனை பணியாரங்களாக செய்தால், குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.
இங்கு இனிப்பான ராகி பணியாரத்தின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து அதன்படி செய்து சுவைத்து மகிழுங்கள்.
Sweet Ragi Paniyaram Recipe
தேவையான பொருட்கள்:
ராகி மாவு – 1 கப்
சர்க்கரை – 1 கப்
துருவிய தேங்காய் – 1/4 கப்
பால் – 1 கப்
சோடா உப்பு – 1/4 டீஸ்பூன்
ஏலக்காய் பொடி – 1 சிட்டிகை
நல்லெண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு பௌலில் ராகி மாவு, சர்க்கரை, சோடா உப்பு, ஏலக்காய் பொடி ஆகியவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் அதில் தேங்காய் மற்றும் பால் சேர்த்து, கட்டி சேராதவாறு நன்கு கலந்து, 1 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
பின்பு பணியாரக்கல்லை அடுப்பில் வைத்து சூடேற்ற வேண்டும்.
கல்லானது சூடானதும், அதில் சிறிது நல்லெண்ணெய் ஊற்றி, பின் கலந்து வைத்துள்ள பணியார மாவை குழியினுள் ஊற்றி, பணியாரங்களாக சுட்டு எடுத்தால், ராகி பணியாரம் ரெடி!!!