பலருக்கு மீன் குழம்பை விட கருவாட்டு குழம்பு தான் மிகவும் பிடிக்கும். ஏனெனில் மீன் குழம்பை விட, கருவாட்டு குழம்பு தான் மிகவும் வாசனையாகவும், ருசியாகவும் இருக்கும். இங்கு கருவாட்டில் ஒரு வகையான நெத்திலி கருவாட்டைக் கொண்டு செய்யப்படும் குழம்பின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. இது மிகவும் ஈஸியான செய்முறை.
உங்களுக்கு கருவாட்டு குழம்பு செய்யத் தெரியாதெனில், இங்கு கொடுக்கப்பட்டுள்ள நெத்திரி கருவாட்டு குழம்பின் செய்முறையைப் படித்து, அதன்படி செய்து பாருங்கள். சரி, இப்போது அதைப் பார்ப்போமா!!!
Nethili Karuvattu Kuzhambu
தேவையான பொருட்கள்:
நெத்திலி கருவாடு – 1 கப்
கத்திரிக்காய் – 3 (நறுக்கியது)
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
மல்லித் தூள் – 1 டீஸ்பூன்
சீரகப் பொடி – 1/2 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்
மிளகுத் தூள் – 1/2 டீஸ்பூன்
வறுத்த அரிசி மாவு – 1 டீஸ்பூன்
வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
தக்காளி – 1 (நறுக்கியது)
துருவிய தேங்காய் – 1/2 கப்
புளி – 1 எலுமிச்சை அளவு
கறிவேப்பிலை – சிறிது
கடுகு – 1 டீஸ்பூன்
பூண்டு – 5 பற்கள்
எண்ணெய் – 1/2 கப்
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
முதலில் கருவாடை நீரில் அரை மணிநேரம் ஊற வைத்து கழுவிக் கொள்ள வேண்டும்.
பின்னர் புளியை நீரில் 3 கப் தண்ணீரில் ஊற வைத்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு தேங்காய் மற்றும் வெங்காயத்தை மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். பின் அதனை புளிச்சாற்றில் சேர்த்து கலந்து, அத்துடன் தேவையான அளவு உப்பு மற்றும் தக்காளியை சேர்த்து கையால் நன்கு பிசைந்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். அடுத்து பூண்டை தட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, கறிவேப்பிலை மற்றும் பூண்டு சேர்த்து தாளித்து, பின் கத்திரிக்காயை சேர்த்து நன்கு வதக்கி விட வேண்டும்.
பின் அதில் கருவாடை சேர்த்து சிறிது நேரம் வதக்கி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரகப் பொடி, மல்லித் தூள், மிளகுத் தூள், வறுத்த அரிசி மாவு ஆகியவற்றை சேர்த்து, மசாலா அனைத்து ஒன்று சேரும் வரை நன்கு வதக்க வேண்டும்.
பிறகு அதில் புளிக் கரைசலை சேர்த்து நன்கு பச்சை வாசனை போக கொதிக்க விட்டு இறக்கினால், நெத்திலி கருவாட்டு குழம்பு ரெடி!!!