தேவையான பொருட்கள்:
சம்பா கோதுமை – 250 கிராம்
சர்க்கரை – 1 கிலோ
நெய் – 350 கிராம்
ஏலப்பொடி
முந்திரி
கேசரிப் பவுடர்
பால் – 1 டீஸ்பூன்
எலுமிச்சைச் சாறு (விரும்பினால்)
செய்முறை:
சம்பா கோதுமையை குறைந்தது 12 மணிநேரம் ஊறவைத்து, கிரைண்டரில் அரைத்து பால் எடுத்து அதை அப்படியே இரண்டு மணி நேரம் வைக்கவும்.
அடுப்பில் அடிகனமான வாணலியில் சர்க்கரையை, கம்பிப் பதமாகப் பாகு வைக்கவும்.
பாகில் ஒரு டீஸ்பூன் பால் விட்டு அழுக்கை நீக்கவும்.
இப்போது கோதுமைப் பாலின் தெளிவை இறுத்துவிட்டு, கெட்டிப் பாலை மட்டும் பாகில் விடவும்.
அடுப்பை நிதானமான சூட்டில் வைத்து, கேசரிப் பவுடர் சேர்த்து கைவிடாமல் கிளற ஆரம்பிக்கவும்.
இப்போது சில துளிகள் எலுமிச்சைச் சாறு சேர்த்தால் அல்வா அடிப்பிடிக்காமல் வேகமாகப் பந்து மாதிரி கிளம்பி சீக்கிரம் கெட்டியான பதத்திற்கு வரும். (சாறு சேர்க்காமலும் செய்யலாம்.)
கலவை கொதித்து கெட்டியாக வர ஆரம்பிக்கும்போது கொதிக்கும் சுடுநீரை ஒரு கப் சேர்க்கவும்.
இப்படியே ஒவ்வொரு முறை கெட்டியாகி வரும்போதும் ஒவ்வொரு கப் கொதிக்கும் வெந்நீராக மொத்தம் ஆறு கப் சேர்த்து கிளறிக் கொண்டே இருக்கவும்.
இடையே சிறிது சிறிதாக நெய்யையும் சேர்த்துக் கொள்ளவும்.
ஆறாவது கப் வெந்நீரும், மிச்சமிருக்கும் நெய்யையும் சேர்த்த பின் வருவதே சரியான பதம். கிளறிக்கொண்டே இருந்தால் வாணலியில் ஒட்டாமல் நெய்யைக் கக்கிக் கொண்டு வரும்போது ஏலப்பொடி சேர்த்துக் கிளறி, நெய் தடவிய தட்டில் கொட்டிப் பரத்தவும்.
மேலே சீவிய முந்திரி அல்லது முழு முந்திரிப் பருப்பால் அலங்கரிக்கவும்.
* பொதுவாக அல்வாக்களுக்கு முந்திரியை விட வெள்ளரி விதைகளை வறுத்துச் சேர்ப்பதே சரியாகவும் சுவையாகவும் இருக்கும்.
* ஒருவேளை தவறுதலாக கலவை இறுகி, பாறை மாதிரி ஆகிவிட்டால், ஒரு தேங்காயை அரைத்துப் பாலெடுத்து, அதை அல்வாவில் ஊற்றி மிதமான சூட்டில் கிளறவும். அல்வா நெகிழ்ந்து சரியான பதத்திற்கு வந்துவிடும். சுவை மாறுபட்டாலும் பொருள் பாழாகாது.
* சம்பா கோதுமை ரவையிலும் இந்த அல்வாவைச் செய்யலாம்.
* சம்பா கோதுமை கிடைக்காதவர்கள் அவசரத்திற்கு ரெடி மிக்ஸ் வாங்கியும் செய்யலாம். ரெடி மிக்ஸில் செய்தால் மொழுக்கென்று இருக்கும், நன்றாக இருக்காது என்பது தவறான அபிப்ராயம். அந்த பாக்கெட்டில் சொல்லியிருப்பது போல் சும்மா 15 நிமிடங்கள் மட்டும் கிளறி இறக்காமல் பொறுமையாகச் செய்தால் ஓரளவு சுவையாக வரும்.
எந்தக் கம்பெனியாக இருந்தாலும், பாக்கெட்டில் சொல்லியிருப்பது போல் பொருள்களைச் சேர்த்து அடுப்பில் வாணலியில் வைக்கவும்.
மேலே சொல்லியிருப்பது போல் ஒருமுறை கெட்டியானதும் இறக்கி விடாமல் கொதிக்கும் சுடுநீரை ஒரு கப் சேர்க்கவும்.
இப்படியே ஒவ்வொரு முறை கெட்டியாகி வரும்போதும் ஒவ்வொரு கப் கொதிக்கும் வெந்நீராக மொத்தம் ஆறு கப் சேர்த்து கிளறிக் கொண்டே இருக்கவும்.
இடையே சிறிது சிறிதாக நெய்யையும் சேர்த்து முடிக்கவும்.
இறுதியில் கெட்டியாகி, வாணலியில் ஒட்டாமல் நெய்யைக் கக்கிக் கொண்டு வரும்போது ஏலப்பொடி சேர்த்துக் கிளறி, உடனே இறக்கி விடாமல் மேலும் சில நிமிடங்கள் இழுத்துக் கிளறி, பின் இறக்கி, நெய் தடவிய தட்டில் கொட்டி ஆறவிடவும்.