சளி, இருமல், தலை பாரத்தால் அவதிப்படுபவர்களுக்கு நண்டு ரசம் வைத்து குடிக்கலாம். இன்று இந்த காரசாரமான நண்டு ரசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
சளி, இருமலை குணமாக்கும் நண்டு ரசம்
ரசப்பொடிக்கு தேவையான பொருட்கள் :
மிளகு – ஒரு டீஸ்பூன்
சீரகம் – ஒரு டீஸ்பூன்
சோம்பு – ஒரு டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 3
மல்லி (தனியா) – 3 டீஸ்பூன்
பூண்டு – 4 பல்
சின்னவெங்காயம் – 2
கறிவேப்பிலை – சிறிது
செய்முறை :
இரும்புச் சட்டியை அடுப்பில் வைத்துச் சூடாக்கி மிளகு, சீரகம், சோம்பு, காய்ந்த மிளகாய், மல்லி (தனியா) ஆகியவற்றை தனித்தனியாக வாசம் வரும் வரை வறுத்து ஆற வைத்து மிக்ஸியில் சேர்த்து பொடிக்கவும். கடைசியாக இதனுடன் பூண்டு, சின்ன வெங்காயம் மற்றும் கறிவேப்பிலையை ஒன்றாகச் சேர்த்துக் கொரகொரப்பாக அரைத்து எடுத்தால் ரசப்பொடி ரெடி.
தேவையான பொருட்கள் :
நண்டு – ஒரு கிலோ
தக்காளி – 3
கறிவேப்பிலை – சிறிது
மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்
கடுகு – ஒரு டீஸ்பூன்
உளுந்தம்பருப்பு – 2 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன்
சோம்பு – கால் டீஸ்பூன்
நல்லெண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்
புளிக்கரைசல் – கால் கப்
தண்ணீர் – 4 கப்
கொத்தமல்லித்தழை – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை :
* தக்காளியை அரைத்து கொள்ளவும்.
* கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* நண்டை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.
* அடுப்பில் வாணலியை வைத்து, சுத்தம் செய்த நண்டுடன் உப்பு, மஞ்சள்தூள் மற்றும் 4 கப் தண்ணீர் சேர்த்து வேகவிடவும்.
* அடிகனமான மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம்பருப்பு, சோம்பு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை சேர்த்துத் தாளிக்கவும்.
* அடுத்து அதில் தயார் செய்த ரசப்பொடியைச் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
* அடுத்து அரைத்த தக்காளி விழுதைச் சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும்வரை வதக்கவும்.
* பிறகு புளிக்கரைசலை ஊற்றி கொதிக்க விடவும்.
* அடுத்து அதில் வேகவைத்த நண்டு மற்றும் அதன் தண்ணீர் சேர்த்துக் கலக்கவும்.
* உப்பு, காரம், புளிப்பு சரி பார்த்து தீயை மிதமாக்கவும். ரசம் நுரைகூடி வரும்போது கொத்தமல்லித்தழை தூவி அடுப்பிலிருந்து இறக்கவும்.
* சூடாக சூப் போல் பரிமாறலாம் அல்லது சாதத்துடனும் பரிமாறலாம்.
* சளி, இருமல், தலைபாரத்தால் அவதிப்படுபவர்களுக்கு நிவாரணம் தரும். ரசத்தை சாப்பிடும்போது அதில் ஊறிய நண்டைச் சுவைக்க அருமையாக இருக்கும்.